விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உட்கிராமம் கிளியூர். உளூந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் பகுதியில் இருந்து எப்போதாவது ஓரிரு பஸ்கள் போய்வரும். மற்றப்படி அமைதியான சின்ன ஊர். இந்த ஊரைச் சேர்ந்த ஏழுமலை மகன் ரமேஷ். சுமார் 250 இளைஞர்களை காவல்துறை பணிக்கு அனுப்பியுள்ளார் என்ற செய்தி நம் விழிகளை விரியச் செய்தது.
அவரை சந்தித்தோம். எப்படி சாத்தியம்? அதற்கான காரணம்? முயற்சி எப்படி வந்தது? என்றோம்.
"தந்தை ஏழுமலை, தாய் மலர்வேணி இவர்களோடு எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். வாய் பேச முடியாதவர். எம்.ஏ. பி.எட். முடித்து ஆசிரியர் பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனக்கு ஆசிரியர் பணி கிடைக்கும். அப்படி கிடைத்தாலும் நான் போகமாட்டேன்.
காரணம், பல ஏழை எளிய வீட்டு பிள்ளைகளை அரசு பணிக்கு அனுப்ப வேண்டும். நாம் ஒருவர் மட்டும் அரசு பணிக்கு போனால் என் குடும்பம் மட்டுமே செழிப்பாக இருக்கும். பல குடும்பங்கள் வாழவேண்டும் என்று தான் விடிவெள்ளி காவலர் தேர்ச்சி மையத்தை பல சிரமங்களுக்கு இடையே நடத்தி வருகிறேன். இது உருவாக அடிப்படை காரணமே ஒரு வேதனைதான்.
2012ம் ஆண்டு நான் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். உடல் தகுதி தேர்வில் 4 மில்லிமீட்டர் உயரம் குறைவு என வெளியேற்றினார்கள். மீண்டும் கடுமையான பயிற்சி செய்து மீண்டும் தேர்வுக்கு சென்றேன். 3 மில்லி மீட்டர் குறைவு என்று வெளியேற்றினார்கள்.
இப்படி காவலர் பணிக்குப் போகவேண்டும் என்ற எனது தனியாத ஆசை நிறைவேறவில்லை. சரி நாம் போக முடியாவிட்டாலும் நம்மை போன்ற இளைஞர்களை அனுப்ப வேண்டும் என்று உறுதியான முடிவு எடுத்தேன்.
முதல் முதலில் எங்கள் ஊரைச் சுற்றியுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் என 30 பேருக்கு பயிற்சி கொடுத்தேன். எங்கள் ஊரில் பெரிய மைதானம் ஏதும் இல்லை. அதனால் கிராம சாலையில் ஓட்ட பயிற்சியும், சின்ன செட் போட்டு அதிலே படிப்பு எழுத்து என வகுப்பு எடுத்தேன்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்பு எடுத்தேன். உடற்பயிற்சிகளும் உண்டு. இப்படி கடுமையான பயிற்சி முயற்சியின் மூலம் அந்த 30 பேரில் 6 ஆண்கள், 3 பெண்கள் காவலர் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று பணிக்குச் சென்றார்கள்.
அதன் பிறகு மிகுந்த கஷ்டப்பட்டு ஆறு செண்ட் நிலம் வாங்கி அதில் கொட்டகை போட்டு பயிற்சியைத் தொடங்கினேன். கிராமத்தில் மானாவாரி பயிர் செய்யும் நிலத்தில்தான் பயிற்சி நடக்கும். பின்னர், விதைத்து பயிர் அறுவடை நடக்கும் வரை சாலையில்தான் பயிற்சி.
இப்படி கடும் முயற்சியின் மூலம் கொடுத்த பயிற்சியினால் இதுவரை சுமார் 250 பேர் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்று பணிக்குச் சென்றுள்ளனர்.
இன்றுவரை போதிய கழிவரை வசதிகள், இடவசதி கிடைப்பது சிரமமாக உள்ளது. அதை பூர்த்தி செய்ய வேண்டி மாணவ, மாணவிகளிடம் மாதம் 5 ஆயிரம் கட்டணம் வாங்கப்படுகிறது. அதே நேரத்தில் அப்பா, அம்மா இல்லாத பிள்ளைகளுக்கு இலவசமாக பயிற்சி தருகிறோம். இந்த முயற்சிக்கு எனது அப்பா ஏழுமலை, வாய்பேச முடியாத எனது அண்ணன் ஆகியோர் பெரிய உதவியாக உள்ளனர்.
பெரிய அளவில் இதற்காக எந்த விளம்பரமும் செய்வதில்லை. எங்கள் பயிற்சி மையத்தை கேள்விப்பட்டு மதுரை, நாகப்பட்டிணம், தஞ்சை, கடலூர் என பல மாவட்டங்களில் இருந்துகூட வந்து இந்த மையத்தில் சேர்ந்துள்ளனர்.
காவலர் பணியில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகள் என்னிடம் வந்து சொல்லி வாழ்த்து பெற்று செல்லும்போது ஏற்படுகிற சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல தெரியவில்லை. அதேபோல் பணியில் இருப்பவர்கள் தற்செயலாக என்னை பார்க்கும்போது நன்றியோடு மரியாதை செய்வது எனக்கு பெரிய கவுரவத்தை கொடுத்துள்ளது.
மேலும் சமீபத்தில் எங்கள் பயிற்சி மையத்தை பற்றி கேள்விப்பட்ட வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், என்னை விழுப்புரத்திற்கு அழைத்து விபரம் கேட்டுவிட்டு பாராட்டினார். அதை மறக்க முடியாது" என்கிறார் ரமேஷ்.
இப்படி இவரது முயற்சி, பயிற்சியினால் காவலர்கள் பணிக்கு சென்றவர்கள் கடமை தவறாதவர்களாக இருப்பது மேலும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அதற்கு சான்றாக ஒரு சம்பவத்தை சொன்னார் ரமேஷ்.
ஊரில் உள்ள உறவினருக்கு பிரச்சனை வந்தது. எதிர்தரப்பு புகார் கொடுத்ததன் பேரில் உறவினருடன் எனது தந்தை ஏழுமலையும் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். எனது தந்தையை கைது செய்து சிறைக்கு கொண்டு சென்றது என்னிடம் பயிற்சி பெற்றவர்கள். சிறையில்கூட காவலர்களாக இருந்தவர்கள் என்னிடம் பயிற்சி பெற்றவர்கள். அவர்கள் இதனை வேதனையோடு என்னிடம் சொன்னார்கள்.
'பயிற்சி மையத்தின் பெயரை வைத்து சொந்த விஷயத்தை சாதிக்கக்கூடாது. சரியோ தப்போ என்னிடம் பயின்றவர்கள் நேர்மையானவர்களாக இருப்பதே சந்தோஷமாக உள்ளது' என்றேன்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 300 பேர் சிறைத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறையில் பணியில் சேர்ந்துள்ளனர். இதில் 14 பேர் நேரடியாக எஸ்.ஐ. தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் உள்ளனர்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது நோக்கமே அல்ல. பலர் பணம் கொடுக்க முடியாமல் உள்ளனர். அவர்களை கட்டாயப்படுத்துவதில்லை. மேலும் பெரிய மைதானம் போன்ற இடம் தேடி வருகிறோம். இப்படி பல சிரமங்களுக்கிடையே என்னைப்போன்று கிராமங்களில் திறமை இருந்தும் காவலர் பணிக்கு செல்ல முடியாமல் முடங்கிக் கிடப்பவர்களுக்கு பயிற்சி கொடுத்து பணிக்கு அனுப்ப வேண்டும்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பார்கள். என்னை பொறுத்தவரை நான் பெறாத இன்பத்தை பணியில் சேர்பவர்களைப் பார்த்து அந்த இன்பத்தை பெற பெருமை அடைகிறேன். அதுவே மனநிறைவாக உள்ளது" என்கிறார் ரமேஷ்.
அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் காவலர்கள் சல்யூட் செய்வார்கள். அப்படிப்பட்டவர்களை உருவாக்கும் ரமேஷிற்கு ஒரு சல்யூட் வைக்கலாமே.