Skip to main content

பெட்ரோல் விலையேற்றம் என்ற பெயரில் பிக்பாக்கெட்!

Published on 30/08/2017 | Edited on 31/08/2017
பெட்ரோல் விலையேற்றம் என்ற பெயரில் பிக்பாக்கெட்!

கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட நரேந்திர மோடி, நாட்டில் பெட்ரோல் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவோம் என்ற வாக்குறுதியைத் தந்தார். அவர் பிரதமராக பதவியேற்று மூன்றரை ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என அனைத்து விதமான எரிபொருட்களின் விலையும் ஏறுமுகத்திலேயே உள்ளது.



இந்த ஆண்டு ஜுன் மாதம் 16-ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒவ்வொரு நாளும் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பெட்ரோல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள் என நம்பிய மக்களுக்கு, இது மீண்டும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.

இதற்குமுன்பு வரை பலமுறை பெட்ரோல், டீசல் விலையேற்றம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் நள்ளிரவு முதல் இந்த விலையேற்றம் அமலுக்கு வரும். இதில் சில பைசாக்களில் இருந்து அதிகபட்சமாக ரூ.3 வரை(தோராயமாக) விலை உயர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கும். விலையேற்றத்திற்கு முந்தைய நாளே பெட்ரோல் நிரப்பும் இடங்களில் கூட்டம் அலைமோதும்.

தற்போது இருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. தொடக்கத்தில் இருந்தே சில பைசாக்கள் உயர்வு இருந்தநிலையில், கடந்த ஜூலை மாதத்தில் மூன்றுமுறை மட்டுமே பெட்ரோல், டீசல் விலையானது சில பைசாக்கள் குறைக்கப்பட்டது.

நாடு முழுவதும் இந்த தொடர் விலையேற்றம் இருந்தாலும், சில பைசாக்கள் மட்டுமே தினசரி உயர்த்தப்படுவதால் எதிர்க்கட்சிகள் கூட இதனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. இப்படியாக விலையேற்றம் செய்யப்பட்டதில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.7 வரையிலும், டீசல் விலை ரூ.4 வரையிலும் அதிகரித்துள்ளது. 

தினசரி பயன்பாட்டிற்கு எரிவாயு நிரப்புபவர்களைக் கூட கண்கட்டி வித்தை செய்ததைப் போல கடந்து சென்றுள்ளது இந்த பெட்ரோல் விலையேற்றம். யாரும் இதை எதிர்த்துக் கேள்வியெழுப்பாத நிலையில், நெட்டிசன்கள் மட்டும் சமூக வலைதளங்களில் ஓரிரு நாட்கள் கலாய்த்தனர். அப்போதும் இப்போதும் இதை எதிர்த்து பொதுமக்கள் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் குரலெழுப்பாமல் போனது வேதனைக்குரிய விஷயம்.

உற்பத்தி வரியில் தளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம், கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை குறைக்க வழிவகை செய்வோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஒரு நாடு, கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்தபின்னும் விலையேற்றத்தை நிறுத்தாமல் இருப்பது குறித்து எப்போது பதில் சொல்லப்போகிறார் அவர்?



வெறும் இரண்டு மாதங்களில் ரூ.7 வரை விலையேற்றம் செய்திருக்கும் நிலையில், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகான என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கப்போகிறது இந்த அரசு? இதையெல்லாம் பற்றிப் பேசும் நமக்கு, ‘அஞ்சஞ்சு பைசாவா, அஞ்சு கோடி தடவ திருடினா தப்பா?’ என அந்நியன் படத்தில் விக்ரம் பேசிய வசனம் நினைவிற்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.

- ச.ப.மதிவாணன் 

சார்ந்த செய்திகள்