Skip to main content

அமலாக்கத்துறைக்கு எதிரான மனுவும்; பின்னணியும்! 

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Petition against the enforcement department and reason

 

கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில், திருச்சி மாவட்டம் மாதவப்பெருமாள் கோயில், தாளக்குடி, நொச்சியம் உள்ளிட்ட பகுதிகளிலிருக்கும் மணல் குவாரிகளில் நடத்திய ஆய்வில், மணல் குவாரியில் உள்ள ஸ்டாக் பாயிண்ட்டில் எவ்வளவு மணல் உள்ளது? அனுமதிக்கப்பட்ட அளவில் மணல் விற்கப்படுகிறதா? அதற்கு முறையான ரசீதுகள் போடப்பட்டு பராமரிக்கப்படுகிறதா? உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தனர். மணல் குவாரி ஒப்பந்ததாரர்களிடமும் பலகட்ட விசாரணைகள் நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் இம்மாதம் 4 ஆம் தேதி, ஐ.ஐ.டி. மாணவர்கள் உதவியுடன், ரிவர் சர்வேயர், ஹைட்ரோ சர்வேயர் உடன் அதே பகுதிகளில் மீண்டும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

 

அதில், ஒரு நாளைக்கு எத்தனை லாரிகள் வருகிறது? எத்தனை யூனிட் அனுமதி பெற்று வருகிறது? அதற்கான தொகை எவ்வளவு? மணல் குவாரிகளில் அரசு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதையெல்லாம் ஆய்வு செய்தனர். அதில், நாள் ஒன்றுக்கு 50 லாரிகளுக்கு மட்டுமே மணல் எடுப்பதற்கு அனுமதி பெற்றுக்கொண்டு, 500 லாரிகளுக்கு அள்ளப்படுவது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், ஐ.ஐ.டி. மாணவர்களின் உதவியுடன் கொள்ளிடம் ஆற்றில் எவ்வளவு ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பதை அளவீடு செய்தனர். கடந்த இரண்டு மாதங்களில் மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதும், விதிமுறைகள் மீறப்பட்டதும் உறுதிசெய்யப்பட்டது. எனவே மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

 

Petition against the enforcement department and reason

 

மேலும், நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியதில், பெரும்பாலான இடங்களில் மணல் அள்ளுவதை உயர் அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்காதது வெட்டவெளிச்சமானது. இதையடுத்து, தமிழ்நாட்டிலுள்ள 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த அதிகாரிகள் விரைவில் அமலாக்கத்துறை முன்பாக ஆஜர் ஆவார்களென்று கூறப்படுகிறது.

 

இந்த மணல் விவகாரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பெரிய அளவில் கவனம் செலுத்தாமல், கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில்தான் அதிக விதிமீறல்கள் நடைபெற்றதாகவும், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே திருச்சி மாவட்ட ஆட்சியருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், அமலாக்கத்துறையினர் முன்னிலையில் ஆஜராகலாம் அல்லது திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அமலாக்கத்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தலாம். திருச்சி மாவட்ட ஆட்சியருக்கே சம்மன் அனுப்பப்பட்டிருப்பது, அப்பகுதி மணல் குவாரி உரிமையாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 

 

Petition against the enforcement department and reason

 

இந்த நிலையில், 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை, நீர்வளத்துறை செயலர்கள், திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு மனுவில், ‘மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கனிமவள கொள்ளை தொடர்பான ஆயிரக்கணாக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு சென்று நடவடிக்கை எடுக்காத அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் விற்பனை செய்யப்படுவதாக கூறி அதிகார துஷ்பிரயோகம் செய்து, வரம்பு மீறி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

 

உள்நோக்கத்தோடு, மாநில நிர்வாகத்தை சீர்குலைக்கும் விதமாக மத்திய அரசின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தில் கனிமவளம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசோ, புலன் விசாரணை அமைப்புகளோ, நீதிமன்றமோ உத்தரவிட்டு இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறையால் நடவடிக்கை எடுக்க முடியும். சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசே விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது. 

 

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், அதிகார வரம்பை மீறியும் மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும் அமலாக்கத்துறை சம்மன் பிறப்பித்துள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அமலாக்கத்துறையை பயன்படுத்தி இது போன்ற சர்வாதிகார நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட குவாரிகளின் விவரம் மட்டுமின்றி, தற்போது அனைத்து மணல் குவாரிகளின் விவரங்களையும் அமலாக்கத்துறை கோரியுள்ளது. 

 

Petition against the enforcement department and reason

 

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் சாட்சியாக சேர்க்கப்படாத, குற்றஞ்சாட்டப்படாத மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்மன் பிறப்பிக்க இயலாது. மாநில அரசின் அனுமதியின்றி அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், நேற்று நீதிபதிகள், எஸ்.எஸ். சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் முறையிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்றுக்கொண்டு வரும் நவம்பர் மாதம் 27ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தனர்.