Skip to main content

‘சுட சுட’ அல்வா... ‘குளு குளு’ லெஸ்ஸி... விவசாயிகளுடன் இணையும் ஆதரவு கரங்கள்!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

protest

 

பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு நடைபெறும் போராட்டம் 15 நாட்களை எட்டிவிட்டது. இவ்வளவு நாட்களாகியும் அவர்களின் கோரிக்கைகளின் வலுக் குறையாமல், தேனீக்களின் கூட்டத்தைப் போல எப்படி டெல்லியைச் சுற்றியிருக்கிறார்கள் என்று ஆளும் மத்திய அரசும், அவர்களுடைய ஆதரவாளர்களும் விவசாயப் போராட்டத்திற்கு, சில பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவு கிடைக்கிறது என்று கூறுகின்றனர். சமூக வலைதளங்களில்கூட பல வதந்திகளை இதுகுறித்து பலரும் பரப்பி வருகின்றனர். ஏற்கனவே டெல்லியை நோக்கி ட்ராக்டரிலும் லாரியிலும் பைக்கிலும் தங்களது சொந்த ஊர்களில் இருந்து கிளம்பிய விவசாயிகள், “எத்தனை மாதங்களானாலும் எங்களின் கோரிக்கை நிறைவேறும்வரை டெல்லியைவிட்டு கிளம்பப்போவதில்லை. அதற்குத் தேவையான அனைத்துச் சமையல் பொருட்களையும் கையுடன் எடுத்துக்கொண்டுதான் வந்திருக்கிறோம்” என்று சில விவசாயச் சங்க தலைவர்கள் பேட்டியளித்த வீடியோக்களைப் பார்த்திருப்போம். 

 

விவசாயப் பிரதிநிதி குழுவுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஐந்து சுற்றுவரை பேச்சுவார்த்தை நடைபெற்றுவிட்டது. ஆனாலும், மத்திய அரசு இந்தச் சட்டத்தை நீக்கும் வரையில் எங்களின் போராட்டம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும் என்று போராட்டத்தை உயிர்ப்புடன் நடத்துகின்றனர் விவசாயிகள். போராட்டம் என்றால் கோஷம் கூச்சல் அடிதடி என்று இல்லாமல், அரசியல்வாதிகளை உள்ளேயே அண்டவிடாமல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று பண்டிகையைப் போல போராட்டத்தை முன்னே நடத்திச் செல்கின்றனர். ஊரிலிருந்து வந்த ட்ராக்டர் வண்டிகளும் அதில் இருக்கும் தார்ப்பாய்கள் மற்றும் லாரிகள்தான் மாலை நேரத்திற்கு மேல் அவர்களின் வீடுகள். போராட்டம் நடைபெறும் மைதானத்திலும் சாலை ஓரங்களிலும் விறகை எரித்து, சப்பாத்தி ரொட்டிகளைச் சுடும் இடமெல்லாம் அடுப்பங்கரைகள். கிட்டத்தட்ட நாடோடிகளைப் போன்ற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு உணவுக்கும் பாலுக்கும் எந்தப் பஞ்சமும் இருக்காதபடி, பலரும் உதவிபுரிந்து, ஆதரவு கைகளை நீட்டுகின்றனர். பாஜகவை சேர்ந்த சில முக்கியஸ்தர்களும் விவசாயிகளுக்கு ஆதரவு கையை மறைத்துக் கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

பெரும்பாலும் சாப்பிடுவதற்குத் தேவையான உணவுப் பொருட்களான கோதுமை, மளிகைச் சாமான் பொருட்கள் எல்லாம் அவர்களே கொண்டு வந்திருக்கின்றனர். மேலும், அவர்களுக்கு அன்றாடப் பொழுதை ஓட்டவும், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளுக்கும்தான் விவசாயிகளின் சொந்த ஊர், விவசாயச் சங்கங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நிதியாகவும் பொருட்களாகவும்  உதவிகள் வருகின்றன. வட இந்திய விவசாயிகள் குறிப்பாக, பஞ்சாபிகளுக்கும் ஹரியானாக்காரர்களுக்கும் 'பால்' மற்றும் 'லெஸ்ஸி' முக்கியத் தேவையாக இருக்கிறது. இதற்காக, பால் தினசரி காலையிலும் மாலையிலும் ஹரியானாவில் இருக்கும் கிராமங்களிலிருந்து 2,000 லிட்டர் செல்கிறது. ஜமிதார் சட்டார் சபா என்னும் அமைப்பு, 150 தன்னார்வலர்களைக் கொண்டு 7,800 லிட்டர் லெஸ்ஸியும், 2,000 லிட்டர் பாலையும் கொண்டுபோய், போராடும் விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுக்கின்றனர். இந்த அமைப்பே போராட்டக் களத்தில் கூட்டுச் சமையல் முறையான, 'லாங்கர்' வைத்திருப்பதால் அங்கு விவசாயிகளுக்குத் தேவையான டீ, நொறுக்குத் தீனியும் தரப்படுகிறது. இன்னொரு பக்கம் பெரிய வாணலியில் 1,000பேருக்கு மேல் டேஸ்ட் பார்க்கும் அளவிற்கு, அல்வா கிண்டிக்கொண்டிருக்கிறார் ஒரு சர்தார்ஜி. அதேபோல, என்.ஆர்.ஐ- களிடம் இருந்து லட்சக்கணக்கில் நிதி அளிக்கப்படுகிறது. கனடாவைச் சேர்ந்த 'டட்' சகோதரர்கள் போராடும் விவசாயிகளுக்கு எதிர்ப்பு சக்தி வேண்டும் என்பதற்காக, 20 குவிண்டால் பாதாம் கொடுத்திருக்கின்றனர். 500 கி.மீ-க்கு அப்பால் இருக்கும் ராஜஸ்தான் கிராமங்களில் இருந்து பழங்களும், காய்கறிகளும் அனுப்பப்படுகின்றன.

 

chapathi

 

cnc


உணவுப் பொருட்கள் இன்றி அங்கிருக்கும் விவசாயிகளின் டிராக்டர்களுக்கு பெட்ரோல், டீசல் வேண்டும் என்பதற்காக, நிதி வசூல் செய்யப்படுகிறது. மேலும், பஞ்சாபி ஒருவர் தன்னுடைய பெட்ரோல் பங்கில் இலவசமாக, பெட்ரோலும் போடுகிறார். நெடுஞ்சாலையில் டெல்லிக்குச் செல்லும்போது, ரிப்பேராகும் டிராக்டர், பைக்குகளை சரிசெய்ய மெக்கானிக்குகள் சிலர் தங்கள் பணியை விட்டு, விவசாயிகளுக்கு உதவுவதற்காக நெடுஞ்சாலைகளில் டெல்லி நோக்கியும், ஹரியானா நோக்கியும் இங்கும் அங்கும் திரிகின்றனர். இதெல்லாம் தாண்டி, தானியங்கி இயந்திரம் ஒன்றின் மூலம் சப்பாத்தி மாவு பிசைந்து, உருட்டி, பந்தாக்கி, அதுவே தேய்த்து, ரொட்டி சுடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 2,000 சப்பாத்தி போட்டுத் தருகிறது மெஷின். (இயந்திரமும் விவசாயிகளுக்குக் கை கொடுக்கிறது) 

 

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இடையே பல வேறுபாடுகள் இருக்கலாம், அவர்களுக்கு இவ்வளவு உதவிகள் வரும் இடங்களிலும் முன்பு பல வேறுபாடுகள் இருந்திருக்கலாம். ஆனால், இவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் ஆதரவுதான் போராட்டத்தை இவ்வளவு நாட்கள் உயிர்ப்புடன் கொண்டு செல்கிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்