Skip to main content

"எடப்பாடி பழனிசாமி பணத்தின் மூலமே அரசியலில் நிலைத்து நிற்கிறார்" -  பழ.கருப்பையா 

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

Pazha Karuppaiah Interview

 

அதிமுக விவகாரங்கள் குறித்தும் தற்போதைய தமிழக அரசியல் குறித்தும் பல்வேறு கருத்துக்களை மூத்த அரசியல்வாதியும், தமிழ்நாடு தன்னுரிமைக் கழகத்தின் தலைவருமான பழ.கருப்பையா நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனெனில் அவரிடம் தான் கூட்டம் இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் உத்திகளைத் தான் இரண்டு கட்சிகளுமே பயன்படுத்துகின்றன. அதற்கு பணம் தேவைப்படுகிறது. அனைத்துமே செயற்கையாக உருவாக்கப்படுகின்றன. ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்துவதன் மூலம் மக்களை நம்ப வைக்கின்றனர். எடப்பாடிக்கு அடிக்கவும் தெரியும், கொடுக்கவும் தெரியும். 

 

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டால் அப்பாவி மக்கள் 13 பேர் இறந்தனர். போராட்டத்துக்கு வந்த மக்களின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று போலீசுக்குத் தோன்றியதற்குக் காரணம், ஸ்டெர்லைட் அவர்களுக்கும் பணம் கொடுத்து வந்தது. அந்த நிகழ்வைத் தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னது கேவலமான விஷயம். இவர்கள் யாரையுமே நான் தலைவராகக் கருதவில்லை. எடப்பாடி பழனிசாமி பணத்தின் மூலமே அரசியலில் நிலைத்து நிற்கிறார். 

 

பாஜகவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்யமாட்டார். இவருடைய பலவீனம் எல்லாம் பாஜகவுக்கு தெரியும். சிறுபான்மை மக்கள் தற்போது முழுமையாக திமுகவுக்கு வாக்களிக்கிறார்கள். பாஜகவோடு கூட்டணி வைத்து அந்த வாக்குகளை திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி இலவசமாக வழங்கி வருகிறார். டெல்லியில் அதிகாரத்தில் இருப்பதால் அதிமுகவை பாஜக கட்டாயப்படுத்துகிறது. ஓபிஎஸ் ஆரம்பம் முதலே தவறான அரசியலை நடத்தி வந்தார். தர்மயுத்தம் முதலே அவருடைய அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் குழப்பமாகவே இருக்கின்றன. 

 

தர்மயுத்தம் எதற்காகத் தொடங்கினாரோ அதற்கு எதிராக சசிகலாவை ஆதரிக்கத் தொடங்கினார் ஓபிஎஸ். சசிகலாவுக்கு ஆரம்பத்தில் அதிக ஆதரவு இருந்தது. அப்போதே அவர் தனியாக ஒரு கட்சியைத் தொடங்கியிருக்க வேண்டும். அதிமுகவில் தான் சேர வேண்டும் என்று அவர் எடுத்த முடிவு அவருக்கு எதிராக மாறிவிட்டது. எடப்பாடி பழனிசாமி பாஜகவை தொலைத்துவிட்டுத் தனியாக வந்தால் அணிகள் மாறிவிடும். திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும். காலைச் சுற்றிய பாம்பாக இருக்கும் பாஜகவை உதறுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இல்லை. அது அவருக்கு பாராளுமன்றத் தேர்தலில் எதிர்மறையான விளைவையே தரும்.