சமீபத்தில் "என் பின்னணியில் அரசியல் கட்சியா..? என என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை நக்கீரனுக்கு பிரத்யேகமாய் பேட்டியினைக் கொடுத்தவர், பேட்டியின் இறுதியில், " நல்லவர்கள் இயங்கும் கட்சிக்கு நானும் வரலாமோ.? என்ற எண்ணமும் இருக்கின்றது.!" என முடித்திருந்தார். அது தான் உண்மையென்றாகியுள்ளது இப்பொழுது..!
முன்னதாக மார்ச் 10ம் தேதியான சனிக்கிழமையன்று ராமநாதபுரம் அரண்மனை வாசலில் சுமார் மூன்றாயிரத்திற்கும் அதிகமான மகளிரைக் கொண்டு சமுதாய விழிப்புணர்வு நாடகம் மற்றும் நாட்டுப்புற பாடல்கள், தப்பாட்டம் என மகளிர் தினத்தை தாமதமாகக் கொண்டாடிய "தமிழக மக்கள் நல சங்கம்" எனும் அமைப்பு "தமிழக மக்கள் எழுச்சிக் கழகமாக" கட்சியாக இயங்கப் போவதாக அறிவித்திருந்தது. இதன் பின்னனியில் தான் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டும், ராமநாதபுர மாவட்ட ஏ.டி.எஸ்.பி.யான வெள்ளைத்துரை இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது உளவு வட்டாரங்களில். இந் நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கல்லூரிச்சாலையில் அமைந்துள்ள இவர்களது கட்சி அலுவலகத்தில் கட்சிக்கான இணையதளத்தினை (www.tmek.org ) திறந்து வைத்தார் கட்சியின் மாநிலத்தலைவரான அமுதா சுரேஷ். அந்த இணையத்தளம் தான் இவர் தான் பின்னனியில் இருக்கிறார் என ஏ.டி.எஸ்.பி.வெள்ளைத்துரையினை அடையாளம் காண்பித்தது.
கட்சிக்கான இணையத்தளத்தில் கட்சியின் தலைவராக அமுதா சுரேஷூம், மாநிலப் பொருளார் ராணி வெள்ளத்துரையும் உள்ளிட்டதோடு மட்டுமில்லாமல், செயலாளர் பெயரை உள்ளிடாமல், அவரை அடையாளப்படுத்த DR........M.A.,M.Ed,MPhil,Phd, P.G (FS) என ஏ.டி.எஸ்.பி.வெள்ளைத்துரையின் கல்வித்தகுதியினை பதிவு செய்துள்ளார்கள். இதில் பொருளாளரான ராணி ஏ.டி.எஸ்.பி. வெள்ளைத்துரையின் மனைவி என்கிறது அது. இதன் மூலம் காவல்துறை அதிகாரிகள் வட்டாரத்திலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும், " எப்படி அரசுப்பணியில் இருப்பவர் கட்சியில் இருக்கலாம்..?" என்ற புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.