சென்னையில் நடைபெற்ற கவிஞர் இளவேனில் நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருமாவளவன், அரசியல் தொடர்பாக பேசினார். அவர் பேசியதாவது, "இந்த நிகழ்ச்சியின் வாயிலாக முதலில் கவிஞர் இளவேனில் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று அவர் நம்மிடம் இல்லை. எனவே அவரின் மரணத்தை மனம் ஏற்கவில்லை. நல்ல உடல்நலத்துடன் அவர் இருந்தார். ஆனால் தற்போது அவர் நம்முடன் இல்லை. இந்திய தேசமே சனாதன பிடியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று அவர் தொடர்ந்து விரும்பினார். தமிழ் மக்கள் மீதும், தமிழ் மீதும் அவ்வளவு ஏக்கத்தோடு இருந்த அவர், தற்போது நம்மிடம் இல்லை. இதை தாங்குவது என்பது சற்று கடினமான ஒன்றுதான். ஆனால் அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவர் இல்லை என்பதை தற்போது வரை மனம் ஏற்கவில்லை. உள்ளபடியே அது ஒரு வெறுமையை தருகிறது; வேதனையை தருகிறது; அளவிட முடியாத வலியை தருகிறது. இப்படிபட்ட இழப்புகளைக் கடந்துதான் நாம் நம்முடைய வாழ்வியலை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய வாழ்க்கையாக இருந்து வருகிறது. அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதுதான் உலக நியதியும் கூட.
அண்ணன் இளவேனில் இளம் வயதில் இருந்தே மார்க்ஸியத்தை உள்வாங்கியவர். அதனால் அவர் மானுடத்தை, சமூக அமைப்பை சரியான கண்ணோட்டத்தில் கடைசி வரை பார்த்து வந்தார். எந்த கற்பனை வாதத்துக்குள்ளும் அவர் தன்னை அவர் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. அதனால்தான் அவர் மனிதத்தைப் புரிந்து வைத்திருந்தார், சாதி, மதம் என்ற சாக்கடையில் அவர் கடைசி வரையில் விழாமல் இருந்தார். அதனால்தான் எல்லாவற்றையும் கடந்து மானுடத்தை அவரால் ரசிக்க முடிந்தது. இந்த இந்தியா முழுவதிலும் சூழ்ந்து காணப்படுகின்ற இந்த சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் அவருக்குத் தீராத வேட்கை இருந்தது என்பது மட்டும் நூறு சதவீதம் உண்மை. அதை யாராலும் மறுக்க முடியாது, மறைக்கவும் முடியாது. சமூக அறிவியல் பற்றிய புரிதலோடு கூடிய தலைவர்கள் வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். சாதி சங்கம் வைத்திருப்பவர்கள், மத அரசியல் செய்பவர்கள் எல்லாம் தலைவர்கள் அல்ல என்பதை அவர் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்.
அரசியல் ஆதாயத்திற்காக கட்சி தொடங்கி நடத்துபவர்கள் எல்லாம் தலைவர்கள் அல்ல என்பதில் நம்மை போன்று அவரும் உறுதியாக இருந்தார். அந்த வகையில் அவர் வியந்து பார்த்த ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அவர் வேறு யாரும் அல்ல, கலைஞர் தான். கலைஞரை அவர் அரசியல் கட்சித் தலைவராக மட்டும் பார்க்கவில்லை, பொதுவாக மனிதர்கள் ஒரு சார்பு கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் கலைஞர் தன்னுடைய இறுதி காலம் வரை அப்படி ஒருசார்பு கொள்கை கொண்டவராக இருந்ததில்லை. மானுடம் என்பதை மட்டும்தான் அவர் கடைசி வரை பார்த்தார். அப்படி கவிஞர் இளவேனில் அவர்கள் இறப்பு வரை மானுடம் என்பதை மட்டுமே பார்த்தார். அதன்படியே தன்னுடைய இறுதிக் காலம் வரை இருந்தார். மானுடைத்தை அவர் வெறுத்ததில்லை. மார்க்ஸியப் பார்வைக்கும் பெரியாரிய பார்வைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. சொல்லும் முறையிலும், பார்க்கும் பார்வையிலும் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அவர்களின் நோக்கம் ஒன்றாக இருக்கும். அதைப்போலவே நம்முடைய கவிஞருடைய நோக்கமும் மக்கள் சார்ந்ததாகவே கடைசி வரையிலும் இருந்தது." என்று பேசினார் திருமாவளவன்.