சசிகலா வெளியே வந்தால் அவரைச் சந்திக்க 10 அ.தி.மு.க. அமைச்சர்கள் வருவார்கள், அவரது சொந்த பந்தங்களுடன் 50க்கும் மேற்பட்ட எம்.எல். ஏ.க்கள் தொடர்பில் இருக்கிறார்கள், அ.தி.மு.க. கட்சி உடையும், எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய மாட்டார் என சசிகலா வந்தால் நடக்கும் விவரங்கள் பற்றி அவரது சொந்தபந்தங்கள் ஏகப்பட்ட பில்டப்களைக் கொடுத்து வந்தார்கள். அது எதுவும் இதுவரை நடக்கவில்லை. அவரது சமூகமான முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்த 6 அமைச்சர்களில் ஒருவர்கூட சசிகலா இருக்கும் பக்கம் வெளிப்படையாக இதுவரை வரவில்லை. கருணாஸ், தனியரசு போன்ற சசிகலாவால் உருவாக்கப்பட்ட சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கூட சசிகலாவை வெளிப்படையாக சந்திக்கவில்லை.
இந்நிலையில் பா.ஜ.க. ஆதரவுடன் சசிகலா இயங்குகிறார் என சொல்லப்பட்ட விவரங்களும் உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் சசிகலா தரப்பைப் பற்றி எழுந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் சசிகலா இதுவரை மவுனமாக இருக்கிறார். இதற்கு என்ன காரணம் என அவரது சொந்தபந்தங்களிடம் விசாரித்தபோது அவர்கள் இன்னொரு கதையைச் சொல்கிறார்கள்.
சசிகலாவை இப்பொழுது பார்த்துப் பேசுவது இளவரசியின் மகன் விவேக்கும், டிடிவி தினகரனின் நெருங்கிய உறவினரான டாக்டர் வெங்கடேஷும்தான். இதில் விவேக்கின் மாமனார் கட்டை பாஸ்கர், செம்மர கடத்தல் வழக்கில் கைதாகியிருக்கிறார். ஆந்திரா சிறையில் இருக்கும் அவர் மீது ஆந்திர அரசு குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பாய்ச்சியுள்ளது. சர்வதேச செம்மரக் கடத்தல்காரர் என ஆந்திர அரசால் குற்றம்சாட்டப்படும் கட்டை பாஸ்கர் மூலம் விவேக் பல சொத்துக்களை வாங்கியுள்ளார். தமிழக அரசு இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடைமையாக்கியதுபோல் விவேக்கிற்கு சொந்தமான சொத்துக்களையும் முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்கிற தகவல் அதிர்ச்சி செய்தியாக சசிகலாவின் வீட்டிற்குள் உலா வருகிறது.
விவேக்கின் மாமனாரான கட்டை பாஸ்கர் கைது செய்யப்பட்டதற்குக் காரணம் விவேக்கின் சகோதரிகளான கிருஷ்ணப்பிரியாவும் ஷகிலாவும் கொடுத்த ரகசிய தகவல்கள்தான். இவர்களுக்கும் விவேக்கின் மனைவிக்கும் இடையே நடக்கும் குடும்பச் சண்டையில்தான் இது நடந்தது என அரசல் புரசலாக கட்டை பாஸ்கரின் கைதின்போதே செய்திகள் வெளியானது. மூன்று மாதங்களுக்கு முன்பு விவேக் மும்பையைச் சார்ந்த, கட்டை பாஸ்கருக்கு நெருக்கமான, கடத்தல்காரர் ஒருவரிடமிருந்து 50 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அந்தப் பணமும் விவேக் வேறு வகையில் சம்பாதித்த பணத்தையெல்லாம் துபாயில் முதலீடு செய்திருக்கிறார். இதைத் தேடி ஆந்திர அரசு பயணிக்கிறது. இவையெல்லாம் மத்திய பா.ஜ.க.வுக்கு நெருக்கமான ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் திருவிளையாடல்கள்தான் என சசிகலா தரப்பு சந்தேகிக்கிறது.
இதற்கிடையே சசிகலாவுடன் நேரடியாக மோதும் எடப்பாடி பழனிசாமியுடன் திவாகரன் தொடர்பு வைத்துள்ளார் என செய்திகள் சசிகலாவின் காதை வந்தடைந்திருக்கின்றன. சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு கடுமையான மவுனத்தை கடைப்பிடிக்கிறார். சசிகலாவிற்கு சிகிச்சை அளித்த பெங்களூரு மருத்துவர்கள் சென்னைக்குப் போய் 10 நாட்கள் உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், உங்கள் மூலமாகவோ அல்லது மற்றவர்கள் மூலமாகவோ கரோனா பரவிவிடக் கூடாது என அட்வைஸ் செய்திருக்கிறார்கள். அதனால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ள சசிகலாவிற்கு உள்ள ஒரே வெளியுலக தொடர்பு டாக்டர் வெங்கடேஷ்தான்.
தினகரனின் உறவினரான இவர், மற்ற சொந்தபந்தங்கள் யாரையும் சசிகலாவை நெருங்க விடுவதில்லை. இவர் சொல்வதை மட்டுமே சசிகலா கேட்கிறார். அது அரசியல் கணக்குகளைத் தவறாக்கிவிடுகிறது. விவேக்கின் மாமனார் கைது செய்யப்பட்டதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கிருஷ்ணப்பிரியா சசிகலாவிடம் சொல்ல முயன்றபோது, ஏற்கனவே வருமான வரித்துறையிடம் கிருஷ்ணப்பிரியாவின் செல்ஃபோனில் இருந்த விவரங்கள் மூலமாகத்தான் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்களைப் பறிமுதல் செய்தது என்கிற கோபத்தில் கிருஷ்ணப்பிரியாவுடன் பேசாமல் இருக்கும் சசிகலாவை, வெங்கடேஷ் சந்திக்க விடாமல் தடுத்தார்.
அதேபோல் திவாகரன் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் அதைப் பற்றி விளக்கம் அளிக்க திவாகரனை டாக்டர் வெங்கடேஷ் அனுமதிக்கவில்லை என்கிறது சசிகலாவின் சொந்தபந்தங்கள். ஆனால் வெங்கடேஷ் தரப்போ இதை மறுக்கிறது. சசிகலாவுக்கு கரோனா பாதிப்பால் ஜெ.வைப் போல் ஏதாவது ஆகிவிடப்போகிறது என்கிற பயத்தில்தான் சசிகலா தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். திவாகரன் பற்றி செய்திகள் வந்ததும் சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச அக்காவும் தம்பியும் பழைய கதைகளைப் பேசி மணிக்கணக்கில் அழுது தீர்த்திருக்கிறார்கள் என விளக்கம் சொல்கிறது டாக்டர் வெங்கடேஷ் தரப்பு.
இந்நிலையில் சசிகலாவை சேர்த்துக்கொண்டு ஒற்றுமையுடன் களம்காண வேண்டும் என சொல்லி வந்த பா.ஜ.க.வின் குரலிலும் மாற்றம் தெரிகிறது. தினகரனை சேர்த்துக்கொள்ள வேண்டும் என பேசி வந்த பா.ஜ.க. தரப்பினரிடம், தேர்தலில் வெற்றி பெற்றால் எனக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என தினகரன் கோரிக்கை வைத்ததாகவும், அதனால் தினகரனையும் சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள முடியாது, அவர்கள் இல்லாமலேயே தேர்தலைச் சந்திக்கலாம், அதில் நிச்சயம் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்திவிட்டார். சென்னைக்கு வந்த பிரதமர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக சசிகலா எதிர்ப்பு நிலையை எடுக்க, பிரதமர் அதற்கு எந்தப் பதிலும் கூறாமல், எதிர்ப்பும் தெரிவிக்காமல் சென்றுவிட்டார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.
இதற்குப் பதிலளிக்கும் சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள், சசிகலா வருகிற 19ஆம் தேதி ஜெயலலிதாவின் நட்சத்திரப் பிறந்தநாளையொட்டி திதி ஒன்றைக் கொடுக்கிறார். அதன் பிறகு அவர் சொந்த பந்தங்களிடம் விரிவான உரையாடலை நிகழ்த்துகிறார். அதற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார். ஜெ.வின் பிறந்த நாளன்று ஜெ.வின் சமாதிக்குப் போவதைப் பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க.வில் சசிகலாவின் செல்வாக்கில் எந்த மாற்றமும் இல்லை. எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து எம்எல்ஏக்கள் போட்டியிட தேவையான, கட்சி சின்னமான இரட்டை இலையைப் பெறுவதற்கான பி. படிவத்தில் கையெழுத்துப்போடும் அதிகாரம் பெற்றுள்ள ஓ.பி.எஸ்., இன்றளவும் சசிகலாவுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். வரும் வாரங்களில் சசிகலாவின் விஸ்வரூபம் வெளிப்படும் என்கிறார்கள்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசு நாலரை லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. அது தொடர்ந்து கடன் பெறும் தகுதியை இழந்துவிட்டது. அதற்காக ஒரு சிறப்பு அனுமதியை நரேந்திர மோடி ரிசர்வ் வங்கி மூலம் பெற்றுத்தர உதவி செய்துள்ளார். அந்த உதவி மூலம் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து, வருகிற 25ஆம் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச இருக்கிறார். 25ஆம் தேதிக்குள் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி ஆகியோர் மத்தியில் ஒரு உடன்பாடு ஏற்பட வேண்டும். இல்லையென்றால் சசிகலா, அமமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. அதற்குள் அ.தி.மு.க.வில் தனக்கு இருக்கும் செல்வாக்கை சசிகலா நிரூபித்துக் காட்ட வேண்டும். இல்லையென்றால், நாடாளுமன்றத் தேர்தல் போல சட்டமன்றத் தேர்தலிலும் ஜெ - சசி படத்துடன் அ.ம.மு.க. தனித்துப் போட்டியிட வேண்டும். அதுதான், 6 ஆண்டுகளுக்குத் தேர்தல் களம் காண முடியாத சசிகலாவின் நிலையாக அமையும்.
தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பலர் சசிகலா பக்கம் வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அது டூ லேட் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள். இப்படி எண்ணற்ற சோதனைகள் சூழ, அதிக கவலையுடன், கரோனாவால் பாதிக்கப்பட்ட உடலுடன் அரசியல் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் சசிகலா என்கிறார்கள் அவரது சொந்த பந்தங்கள்.