Skip to main content

கால்நடைப்பண்ணை.. கலப்பு பயிர்.. தன்னிறைவுப் பொருளாதாரம்.. சாதித்துக்காட்டிய விவசாயி (அரசியல்வாதி)! 

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

ddd

 

"வெத நெல்லுக்கு, உரத்துக்கென வாங்கின கடனுக்கே மாடு மாதிரி உழச்சு, அறுவடை முடிஞ்சு கணக்குப் பார்த்தால் ஒன்னும் மிஞ்சாது." இதுதான் இன்றைய உழவனின் நிலைமை. ஆனால், "கால்நடைகள் மற்றும் கலப்புப் பயிர்களைக் கொண்டு வெவசாயம் பார்த்தால், நாமதான் ராசாங்க" என கணக்கு சொல்கிறார் அரசியல்வாதி கம் விவசாயியான விளாத்திக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் வானம் பார்த்த கரிசல் மண் பூமியான விளாத்திக்குளத்தில், கால்நடைப்பண்ணையுடன் கலப்புப் பயிர் இணைந்த அம்பாள் கோசாலையில் இருக்கிறது தற்சார்பு பொருளாதாரத்தில் வெற்றி பெற்ற அந்த ஒருங்கிணைந்த பண்ணை. தேசியக் கொடிக்கம்பத்துடன் வரவேற்கும் அந்தக் கோசாலை, 60க்கு 30 அடி என்கின்ற அளவிலே இரண்டு பக்கமாக பிரிக்கப்பட்டு சுத்தம், சுகாதாரம் பேணப்பட்டிருக்க, வட நாட்டின் பாரம்பரிய இனங்களுடன் உள்ளூர் நாட்டுமாடுகளும் வரிசைக்கட்டி வரவேற்கின்றன. சரிவிகித உணவு, பண்ணையிலேயே விளையும் பயிர்கள் மற்றும் ஆரோக்கிய அக்கறை காட்டப்படும் கால்நடைகளிடமிருந்து கிடைக்கப்பெறும் பால், நெய், சாணம் மற்றும் கோமியம் என்பதனைத் தவிர, மதிப்புக்கூட்டப்படும் பொருட்களாக ஏறக்குறைய 56 இருக்கிறதென பட்டியலிடுகிறது நாக்பூர், கோ விஞ்ஞான் அணுசேந்தரா கேந்திரம் ஆராய்ச்சி நிலையம்.

ddd

 

அம்பாள் கோசாலையோ தன்னிடமுள்ள 50க்கும் அதிகமான மாடுகளைக் கொண்டு பெறப்படும் பால், தங்களது தேவைக்குப் போக, மீதமுள்ள பாலை உற்றார் உறவினர்களுக்கு வழங்கி வருகிறது. இதிலிருந்து வெளியேறும் சாணம் மற்றும் கோமியம் போன்றவை நேரடியாக உள்ளீடு தொட்டி, வெளியேற்றும் தொட்டி, நொதிக்கும் தொட்டி ஆகிய படிநிலைகளைக் கடந்து வாயு சேகரிக்கும் கலனிற்கு செல்கிறது. மீதமுள்ள கழிவுகள் உழவுக்குத் தேவையான உயிர் உரங்களாக மாறி வயல்வெளியைச் சீரமைக்கின்றது. இந்தப் பகுதிக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் வேளாண் சீர்திருத்தவாதியான குமரப்பாவின் பெயர். இந்த மாடுகளின் மூலம் பெறப்படும் கழிவின் மூலம் 200 ஏக்கர் நிலத்திற்குத் தேவையான இயற்கை உரமும், ஆண்டு முழுவதிற்கும் தேவையான எரிவாயுவும், தினசரி 15 கிலோ வாட் மின்சாரமும் கிடைப்பதுதான் சாதனையே.! வருமானத்திற்கும், தன்னிறைவிற்கும் குறைவில்லாத மாட்டுப்பண்ணையைத் தாண்டி சென்றால் ஆட்டுப்பண்ணையும், அதனருகிலேயே மீன்குட்டையும் உள்ளது. தங்களுடைய தேவை போக பண்ணைக்கு வருமானம் ஈட்டித்தரும் காரணிகளில் ஒன்றாக இவை திகழ்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

 

ddd

 

இதனைக் கடந்து சென்றால் ஓங்கி வளர்ந்த பனை மரங்கள். பாதுகாப்பாய் வேலியாகவும், உற்பத்தி ஊக்கியாகவும் வளர்ந்திருக்க, அதனின் எதிர்ப்புறத்தில் கீரை, கத்திரி, வெண்டைச்செடிகள் இருக்க, மறுபக்கம் நிறுத்தப்பட்ட தூண்களில் பீர்க்கங்காயும், புடலங்காயும் காய்த்துத் தொங்குகின்றன. சொட்டு நீர் பாசனத்தில் முறையாக வளர்க்கப்பட்ட அந்தச் செடிகளைக் கடந்து சென்றால் அகத்தி செடிகளுடன், ஆங்காங்கே கால் நடைகளுக்கென புற்கள் வளர்க்கப்பட்டிருக்க, வேலி அமைக்கப்பட்ட குளத்தில் சைவம் மட்டும் சாப்பிடும் தாரா வகை வாத்துக்களுடன், புழு, பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் நாட்டு வாத்துக்களும் கொஞ்சி விளையாடுகின்றன.

 

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வெற்றிபெற்ற அரசியல்வாதி கம் விவசாயியான விளாத்திக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ.மார்க்கண்டேயனோ, "ஒரு விவசாயிக்கு வருமானம் என்பதனைக் காட்டிலும் யாரிடமும் கையேந்தாமல் இருப்பதே மிகப்பெரிய வருமானம். உண்மையைக் கூற வேண்டுமானால், விவசாயம் என்பது நஷ்டம் கொடுக்கும் தொழிலே கிடையாது. அதை நான் சரியா புரிஞ்சுக்கிட்டதால எதையுமே வீணாக்கிறதில்லை. கால்நடை மற்றும் உயிரினங்களைப் பயன்படுத்தி மண்ணை வளப்படுத்த உதவும் அதே வேளை பொருளாதாரத்தையும் மேம்படுத்த உதவும். அப்புறம் என்ன விவசாயம் லாபம் கொழிக்கும் தொழில் தானே.?" என நம்பிக்கை விதைக்கிறார் அவர்.

 

‘என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில்..?’ என்பதற்கு உதாரணமாகிறது மார்க்கண்டேயனின் வெற்றி!