Skip to main content

"ஓபிஎஸ் அவர்களே..! நீங்களும் எங்களை பிச்சைக்காரர்களாக நினைக்கலாமா? திருநங்கை கேள்வி.!"

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

தமிழகத்தில் திருநங்கைகள் கேட்டரிங், பியூட்டியூசியன், சேல்ஸ் கேர்ள் என  தங்களுக்கு தெரிந்த தொழில் செய்து வருகின்றனர். இந்தியாவுக்கே முன்னுதாரணமாக பிரித்திகா யாசினி என்ற திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு பிறகு திருநங்கைகள் பலர்  காவலர் தேர்வு எழுதினர். அதில் சிலர் பணியில் சேர்ந்தாலும், போதிய கட்-ஆஃப் மதிப்பெண் எடுக்காததால் பலரால் வேலைக்கு சேரமுடியவில்லை.

 

tamilnadu

 

 

இதனிடையே, கடந்த ஆண்டு இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு எழுதிய தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆராதனா என்ற திருநங்கை, எழுத்து தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால் உடல் திறன் தேர்வுக்கு அவர் அழைக்கப்படவில்லை. இதனிடையே, திருநங்கைகளுக்கும் காவலர் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ஆராதனா. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், ஒரு இடத்தை ரிசர்வ் செய்து வைக்குமாறு  சீருடை பணியாளர் தேர்வு குழுமத்திற்கு உத்தரவிட்டார்.

"அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், தனது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தனக்கு உதவ வேண்டும்" என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று (20-08-2019) நேரில் சந்தித்து மனு கொடுத்தார் ஆராதனா. அப்போது பரிசீலனை செய்வதாக உத்திரவாதம் அளித்துள்ளார் ஓபிஎஸ். பின்பு சிறிதுநேரத்தில் ஓ.பி.எஸ்.ஸின் உதவியாளர் ஆராதனா கையில் ரூ.2 ஆயிரத்தை திணித்துவிட்டு சென்றிருக்கிறார்.

 

tamilnadu


இதனால், மனம் வெதும்பிய ஆராதனா, இதுகுறித்து சமூக செயற்பாட்டாளரும் திருநங்கையுமான கிரேஸ்பானுவிடம் தெரிவித்துள்ளார். கிரேஸ்பானுவோ, தனது டுவிட்டர், முகநூல் பக்கத்தில், "துணை முதல்வரே நீங்கள் செய்வது நியாயம் தானா? என கேள்வி எழுப்பி உள்ளார். வாழ்வாதரத்திற்கு வழி காட்டுங்கள் என்று வந்தால், நீங்களும் எங்களை பிச்சைக்காரர்களாக நினைக்கலாமா?" என்றும் வினவியுள்ள அவர்,

"ஆராதனா பெற்றோரால் கைவிடப்பட்டவர். 9-ஆம் வகுப்பு வரை ஆணாக இருந்தவர். அதன்பிறகு பள்ளியை விட்டு வெளியேறி திருநங்கைக்கான அறுவை சிகிச்சை செய்தார். பின்னர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முயற்சித்தபோது, மீண்டும் பையனாக வந்தால் தான் டி.சி தருவேன் என்று பள்ளி தலைமை ஆசிரியர் அடம்பிடித்தார். பின்னர் ஒரு வழியாக டி.சி வாங்கி 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். ஆனால், மார்க் சீட் வரவில்லை. பின்னர் அலைந்து திரிந்து அதையும் வாங்கி போலீஸ் தேர்வு எழுதினார். அதில் பாஸாகியும் உடல் திறன் தேர்வுக்கு அழைக்கப்படவில்லை. இப்படி ஒவ்வொரு முறையும் போராடி முன்னேற துடிக்கும் திருநங்கையை துணை முதல்வராக இருப்பவர் ரூ.2 ஆயிரத்தை கொடுத்து பிச்சைக்காரர் போல நினைப்பது நியாமா?" என்கிறார்.

 கேள்வி நியாயம் தானே..?