Skip to main content

வடகொரியா தொடர் ஏவுகணை சோதனை; உயிருக்காக ஓடி ஒளியும் ஜப்பான் பொதுமக்கள்!

Published on 07/08/2017 | Edited on 07/08/2017
வடகொரியா தொடர் ஏவுகணை சோதனை;
உயிருக்காக ஓடி ஒளியும் ஜப்பான் பொதுமக்கள்!

கடந்த சில மாதங்களில் அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையேயான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. உலக பெருமுதலாளிகளின் நாடான அமெரிக்காவை வடகொரியா தொடர் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி மிரட்டிவருகிறது. ஐக்கிய நாடுகள் சபை வடகொரியா மீதான பொருளாதாரத் தடையை கடுமையாக்கி, அமெரிக்கா வடகொரியா மீது கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கும் என வெளிப்படையாக அறிவித்தபோதும் வடகொரியா தன் அணு ஆயுத சோதனைகளை நிறுத்தியாகத் தெரியவில்லை. மாறாக ஒவ்வொரு அணு ஆயுத சோதனையின் வெற்றிக்குப் பின்னும் ராணுவ மரியாதைகளுடனும், ஆட்டம் பாட்டங்களுடனும் கொண்டாடி வருகிறது அந்நாடு. 



கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு வட கொரியா அதிக அளவிலான ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. அதாவது இந்த வருடத்தின் இறுதிக்குள்ளாகவே 14 சோதனைகள். 2016-ஆம் ஆண்டு 24 அணு ஆயுத சோதனைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது. கடைசியாக ஜூலை 28-ஆம் தேதி ஒரு ஏவுகணையையும் வெற்றிகரமாக ஏவிக்காட்டியது. இத்தனை சோதனைகளுக்கும் உட்படுத்தப்படும் ஏவுகணைகள் எங்கு சென்று விழுகின்றன தெரியுமா? ஜப்பானின் கடற்கரைப் பகுதிகளை நோக்கிதான். 

ஏற்கனவே இயற்கையால் பெரிதும் வஞ்சிக்கப்பட்ட ஜப்பான் நாட்டு மக்கள், தற்போது வடகொரியாவின் இந்தப் பயிற்சிகளால் உண்டாகும் பாதிப்புகளையும் தாங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஜப்பானிய அரசு, அந்நாட்டின் வடமேற்கு கடற்கரையை ஒட்டிய மக்களை அதற்கான பிரத்யேகமான பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.

ஜப்பானின் சகாடா பகுதியில் இதற்கான பயிற்சிகளும் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். பள்ளிக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இதில் கலந்துகொள்கின்றனர். சைரன் சத்தம் கேட்டவுடன் மக்கள் கூட்டம் கூட்டமாக பதுங்குவதற்கு இடம் தேடி ஓடுகின்றனர். பள்ளிக்கூடங்களும், பொது இடங்களும் பயிற்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. கான்கிரீட் சுவர்கள் மற்றும் கட்டிடங்களில் இருக்கும் குறுகிய விளிம்புகளில் மக்கள் ஓடி ஒளிகின்றனர்.

 

இதுகுறித்து ஜப்பானிய மூதாட்டி ஒருவர், ‘இது மிகவும் அச்சுறுத்தல் நிறைந்ததாக உள்ளது. ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தால் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியாது. இன்று பயிற்சியில் கற்றுக்கொண்டதை நான் திரும்பவும் செய்து பார்க்கவேண்டும்’ என்கிறார்.

மற்றொரு முதியவர், ‘ஏவுகணைத் தாக்குதலின் போது கான்கிரீட் சுவர்களைப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அது எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கும்? எனக்கு இதையெல்லாம் பார்த்தால் வேடிக்கையும், குறையாத அச்சமும் ஏற்படுகிறது’ என்கிறார்.

கடந்த இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இதுமாதிரியான அச்சுறுத்தல்களுக்கு ஜப்பான் நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளது வேதனைக்குரிய விஷயமாகும். ஹிரோஷிமா நகரில்  ஆகஸ்ட் 6, 1945-ஆம் ஆண்டு அணு ஆயுதத் தாக்குதல்களால் 1.40 லட்சம் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். அணு ஆயுதங்களற்ற உலகைக் கட்டமைப்பதே நம் நோக்கம் என 72-ஆவது ஹிரோஷிமா தினத்தில் ஜப்பான் நாட்டு பிரதமர் சின்ஜோ அபி தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.



பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் ஆசிய பிராந்தியங்களுக்கான பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, ‘அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு, அமைதிப்பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். ஐநா-வின் சட்ட திட்டங்களை மீறுவது நல்லதல்ல. அணு ஆயுத சோதனைகளின் மூலம் சர்வதேச சமூகத்தை அச்சுறுத்த வேண்டாம். எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு பேச்சுவார்த்தை மட்டுமே’ என வட கொரிய நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரி ஹாங் யோவிடம் வலியுறுத்தியுள்ளார்.

வட கொரியாவும் அமெரிக்காவும் புரிந்துகொண்டால் மட்டுமே நல்ல தீர்வு எட்டப்படும். சர்வதேச சமூகமும் அதைத் தான் விரும்புகிறது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்