Skip to main content

'பெரிய நடிகர்கள்தான் முக்கிய குற்றவாளிகள்... குறிப்பா ரஜினிகாந்த்' - ஷாலின் மரியா லாரன்ஸ் தாக்கு

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

நேர்கொண்ட பார்வை படம் பெண்கள் தொடர்பாக சமூகத்தில் பல்வேறு கேள்விகளை தற்போது எழுப்பியுள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை சமூகம் ஏற்றுக்கொண்டு விட்டதா என்ற கேள்வியை பெண்ணியவாதி ஷாலின் மரியா லாரன்ஸிடம் கேட்டோம். அதற்கு அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,

 

kk



நேர்கொண்ட பார்வை படத்தில் சொல்லப்பட்ட முக்கிய கருத்து 'நோ மீன்ஸ் நோ' இதை நீங்க எப்படி பார்க்கிறீர்கள்?

இது தற்போது தேவையான ஒன்று. இந்தியாவில் சமீபகாலமாக நடக்கும் பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. ஒவ்வொரு 90 வினாடிகளுக்கு ஒரு பெண் என்று பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இதை நாம் கூறவில்லை. தேசிய குற்றவியல் ஆய்வறிக்கையில் இதுகுறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. இத்தனை வருடங்களில் நம்மால் அதனை குறைக்க முடியவில்லை. இதை, சினிமா போன்ற மாஸ் பவர் உள்ள ஊடகம் மூலம் செய்யப்படும் போது அது அனைவரின் கவனத்தையும் பெறும். பழைய சினிமாக்களில் கூட பெண்களை அடக்கு முறைகளால் அடிமைப்படுத்துவது போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெற்றது.

அதாவது ஆண், ஒரு பெண்ணை அடைய விரும்பினால், அவளை கட்டாயப்படுத்துவது, அவள் சம்மதம் இல்லாமல் தாலி கட்டுவது என கடந்த பல வருடங்களாக பெண்களுக்கு எதிரான அடக்கு முறை காட்சிகள் சினிமாவில் காட்டப்பட்டு வருகிறது. இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது வேறுவேறு பெயர்களில். இது முழுமையாக குறைய வேண்டுமாயின் இந்த மாதிரியான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளிவர வேண்டும். ஆனால் அவ்வாறு தொடர்ந்து வெளிவரவில்லை. அதைத் தாண்டி பெண்களை அடிமைப்படுத்தும் கதையம்சம் கொண்ட படமே தொடர்ந்து வெளிவருகிறது. குறிப்பா பெரிய நடிகர்கள் தான் இந்த விஷயத்தில் முக்கியமான குற்றவாளிகள். அதிலும் ரஜினிகாந்த் தான் பெண்களுக்கு அதிக அறிவுரை தருவார். பெண்கள் என்றால் அடக்கமாக இருக்கனும், கைநீட்டி வணங்கற மாதிரி இருக்கனும், கைதட்டி கூப்பிடற மாதிரி இருக்க கூடாதுனு தன்னுடைய படங்களில் பேசி இருக்கார். அவருடைய ரசிகர்களும் அவரை போலத்தான் இருக்க முயல்வார்கள். விஜய், அஜித் படங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பொறுப்புணர்வு சுத்தமாக அற்ற ஒரு சமூகத்தில் நேர்கொண்ட பார்வை மாதிரியான படங்கள் வெளிவருவது ஆறுதலாக இருக்கிறது.

'நோ மீன்ஸ் நோ' என்று சொல்லக்கூட ஒரு ஆண்தான் வரவேண்டும், இதில் ஆணாதிக்கம் இல்லையா என்று சிலர் குற்றச்சாட்டுகிறார்களே?

அப்படி சொல்லிவிட முடியாது. நானே ஒரு தீவிர பெண்ணியவாதிதான். இந்த படத்தில் ஆண் நடித்த வக்கீல் வேடத்தில் பெண் நடித்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால், ஆண்கள்தான் அதிக அளவில் தவறு செய்கிறார்கள். அதனால் அதை பற்றி ஒரு ஆண் பேசியதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். இதில் ஆணாதிக்கம் இல்லை. ஒரு ஆண் சொல்வதால் மற்ற ஆண்கள் எளிதாக எடுத்துக்கொள்வார்கள் என்று அனைவரும் நம்புகிறோம். பெண்களை சினிமாவில் தவறாக காட்டுவதை குறைத்துக்கொள்ள இந்த படம் வழிவகை செய்யும் என்று எதிர்பார்கிறோம்.

நேர்கொண்ட பார்வையில் பெண்களை ரங்கராஜ் பாண்டே விமர்சனம் செய்து பேசும் போது அதை ரசிகர்கள் அதிகம் ரசிப்பதாக சொல்லப்படுகிறதே?

தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வாறே டியூன் செய்யப்பட்டுள்ளார்கள். கால காலமாகவே தமிழ் சினிமாவில் பெண்களை அடிமை பொருளாகவே காட்டி வந்துள்ளார்கள். குடிக்க கூடாது, பப்புக்கு போகக்கூடாது அப்படி போனால் அந்த பெண் கேரக்டர் சரியில்லாதவள் என்று சமூகத்தில் ஒரு அழுக்கு புரையோடியுள்ளது. அது அனைத்தையும் இந்த மாதிரியான படங்கள் போக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணமாக உள்ளது. அனால் அஜித் வசனம் பேசுவதற்கு உள்ள ஆதரவை காட்டிலும் பாண்டே பேசும்போது அதற்கு ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். அஜித் நல்ல விஷயத்தை பேசினாலும், சமூகம் அதை ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. நான் ஆண்களை குறை சொல்லவில்லை. ஆண்கள் தனியாக இருக்கிற போது ஒரு மாதிரியாகவும், குழுவாக இருக்கிற போது ஒரு மாதிரியாகவும் உள்ளதாக உளவியல் தெரிவிக்கிறது. அதில் இருந்து ஆண்கள் வெளிவர வேண்டும். அவர்கள்தான் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை தர முடியும். ஆனால், ஆண்கள் மது குடித்தால் அது ஒரு வாழ்வியல் நடவடிக்கை போன்றும், அதுவே பெண்கள் மதுக்குடித்தால் அதனை கற்புடன் சம்பந்தப்படுத்துவது என்று பெண்கள் மீது காலகாலமாக அடிமைத்தன வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதை பிரதிப்பளிப்பதை போன்று பாண்டே பேசும்போது அதற்கு ரசிகர்கள் கைதட்டுகிறார்கள்.

இந்த மாதிரியான கதையில் பெரிய நடிகர்கள் நடிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், கதையில் சில வணிக சமரசங்கள் ஏற்படுத்தப்பட்டதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்தி படத்திற்கும் இதற்கும் சில வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. அதில் அமிதாப் அமைதியாக பேசுவார். கடைசி கட்டத்தில்தான் சற்று வேகமாக பேசுவார். ஆனால் இதில் ஆரம்ப கட்டத்திலேயே பஞ்ச் வசனம் பேசப்படும். தமிழ் படங்களுக்கே உரிய தன்மை அது. ஆனால் நான் சில யூடியூப் சேனல்களில் ரசிகர்களின் விமர்சனங்களை பார்த்தேன். சண்டைக்காட்சிகள் சூப்பர் என ஒரே குரலில் அனைவரும் கூறியது வியப்பாக இருக்கிறது. நாம என்ன வன்முறை சமூகத்திலா வாழ்கிறோம் என்ற அச்ச உணர்வு நமக்கு எழுகிறது. நல்ல விஷயங்களை இந்த மாதிரி சில மசாலாக்களை தடவி தான் கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது. அப்படி செய்தாலும் ரசிகர்கள் சண்டையை மட்டும் விரும்பினால் அதனை யாராலும் எதுவும் செய்ய முடியாது. அதே போன்று வலை பேச்சு ஷோவில் பேசுவர்களுக்காகதான் இந்த மாதிரியான படங்கள் வெளிவர வேண்டும். அவர்கள்தான் காட்டு மிராண்டிகள். அவர்கள் இதை பார்த்தாவது தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.