மத்திய பாஜக அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இதன் மீதான ஓட்டெடுப்பு வெள்ளிக்கிழமை நடக்கிறது.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய பாஜகவின் நாராயணன்:-
சிறப்பு மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை என்ற காரணத்தினால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சியினர் கொண்டு வந்துள்ளனர். 14வது நிதி ஆணையத்தில் எந்தவொரு மாநிலத்திற்கும் சிறப்பு அந்தஸ்து என்ற தொகுப்பில் இருந்து நிதி கொடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் ஆந்திரா, தெலுங்கானா மாநில நிலைமையை உணர்ந்து மத்திய அரசு அதிகமான நிதிகளை கொடுத்துள்ளது. இதனை தெரிந்தும் தெலுங்கு தேசம் வலியுறுத்தி வந்துள்ளது. அதற்கான புள்ளி விவரங்களை ஒவ்வொன்றுக்கும் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி விளக்கியுள்ளார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவருவோம் என்று சொல்லும்போது, சபாநாயகர் இதனை மறுப்பார் என்றும், பாஜக அரசு இதனை ஏற்காது என்றும் எதிர்க்கட்சியினர் நினைத்துக்கொண்டிருந்தார்கள். உடனடியாக சபாநாயகர் ஏற்றுக்கொண்டதும், பிரதமர் மோடி இதனை நாங்கள் சந்திக்கிறோம் என்று சொன்னதும் எதிர்க்கட்சியினருக்கு மிகப்பெரிய இடியாக விழுந்துள்ளது.
வெள்ளிக்கிழமைக்கு பதிலாக திங்கள்கிழமை நடத்தலாம் என்று திரிணாமூல் காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. அதே கோரிக்கையை காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கேவும் வைத்தார். இது அவர்களின் பலவீனத்தை காட்டுகிறது.
மேலும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடக்கும் விவாதத்தில் மத்திய அரசின் சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்கள் எப்படியெல்லாம் இந்த நான்கு வருடங்களில் சென்றடைந்திருக்கிறது என்பதை விளக்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே கருதுகிறோம்.