நடுவில் வீற்றிருக்கிறார் அவர்... உயிரில்லாமல்தான். சுற்றி அவரது மாணவர்கள் பறை முழங்க, உடல் குலுங்க, உக்கிரமாக, ரௌத்திரமாக ஆடுகின்றனர். அந்த இடம் கலையின் பெரும் ஆங்காரத்தில் அதிர்ந்து நிற்கிறது. ஆடுபவர்களில் நாம் அறிந்த நடிகர்கள் விமல், விதார்த், பசுபதி உள்ளிட்டோரும் அடக்கம். தங்கள் கூத்துக்கலையின் குருவுக்கு அவர்கள் அளித்த அஞ்சலி அது.
தஞ்சையில் இருந்து சென்னை வந்து இந்த கூத்துப்பட்டறையை தொடங்கியவர். அதிலிருந்து இன்று தமிழ் சினிமாவிற்கு பல உச்ச நட்சத்திரங்கள் வந்திருக்கிறார்கள். பெயர் தெரிந்தவர்களைத் தாண்டியும் இன்னும் எத்தனையோ நடிகர்களை கூத்துப்பட்டறையில் தயார்செய்தவர் ந.முத்துசாமி. ஆனால், இவருக்கு சிறுவயதில் கூத்தின் மேல் அவ்வளவாக ஆர்வம் இருந்ததிலில்லை. தன் சிறு வயதில், விளையாடுவதையே பொழுதுபோக்காகக்கொண்டவர். தஞ்சையில் இருந்து சென்னைக்கு வந்து வாலாஜா ரோடில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் எதிரே தங்கியிருந்தப்போது, கலைவாணர் அரங்கில் ஒரு கூத்தைப் பார்த்து அதன் மூலமாக கூத்தின் மேல் ஆர்வம் கொண்டிருக்கிறார். இவருக்கு நாடகம் எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது. அதனால் இவர் எழுதிய நாடகங்களை அரங்கேற்றம் செய்துள்ளார். அதில் பெரும் தோல்வியைக் கண்டதும், தன் குழுவில் இருக்கும் நடிகர்களுக்கு முதலில் நடிப்பை கற்றுக்கொடுக்க முடிவு செய்திருக்கிறார். அப்படித்தான் ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறை தொடங்கியிருக்கிறது.
பொதுவாக நம் ஊர்களில் திரோபதி அம்மன் கோவிலில் கூத்து நடக்கும். 90-களில் அதிகமான வீடுகளில் டிவி-கள் வராதபோது இந்தக் கூத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு இருந்தது. ஆனால், டிவியில் தொடர்கள் வந்தபிறகும் அதன் பின் புதிய புதிய நிகழ்ச்சிகள் வந்தபிறகு கூத்தின் கவர்ச்சி குறைந்துவிட்டது. இதுபோலவே ந.முத்துசாமி வீதி நாடகங்கள் போடத் தொடங்கியபோது ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்துக்கொண்டிருக்கும்போதே டிவி தொடர்களைப் பார்க்க போய்விடுவார்கள் என்று அவர் வருத்தப்பட்டிருக்கிறார். முக்கியமாக தங்கள் நாடகங்களுக்கு பொதுமக்கள் அதிகம் வரமாட்டார்கள். தங்கள் குழுவில் உள்ள நபர்களும் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெறுபவர்களும்தான் வருவார்கள் என்றும் வருத்தப்பட்டிருக்கிறார். இவர் பல சிற்றிதழ்களில் சிறுகதைகளும் பல நாடகங்களும் எழுதியுள்ளார்.
ஒரு நடிகன் முகபாவனை, குரல் என்பதை எல்லாம் தாண்டி அவன் முக்கியமாக தன் மனதையும் உடலையும் தயார்படுத்தவேண்டும் என்பார். காரணம், ஒருவரின் மனதில் இருக்கும் விஷயம்தான் அவனின் முக பாவனையிலும் உடல் மொழியிலும் வெளிப்படும் என்பது அவரின் ஆணித்தரமான கருத்து. அதேபோல் ஒருவனுக்கு நடிகனாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கொண்டிருந்தால் போதுமானது. அதுவே அவனை வளர்க்கும் என்பார். நம் கூத்துக் கலையைக் காப்பது கோவில் திருவிழாக்கள்தான் என்பதும் இவரின் அசைக்கமுடியதா கருத்தாக இருந்தது. கோவில் திருவிழாக்களில் இருந்து என்று கூத்துத் தடைபெறுகிறதோ அன்று கூத்துக் கலையும் மடியும் என்பது இவரின் கருத்து. ஆனால், எதுவாக இருந்தாலும் கலை என்றும் அழியாது என்பதுதானே உண்மை. அதற்கு சான்றாக இவரால் இன்று சினிமாத்துறைக்குள் வந்து சாதித்துக்கொண்டு இருக்கும் நட்சத்திரங்கள் இருக்கும்வரை இவரும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.