கற்பனை கதை என்று கூறப்பட்டு, பல உண்மை சம்பவங்களுடன் எடுக்கப்பட்ட பல படங்களை தமிழகம் பார்த்துள்ளது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படுவதாகக் கூறப்பட்ட எக்கச்சக்க கற்பனை கலக்கப்பட்ட படங்களையும் தமிழகம் பார்த்துள்ளது. சமீபத்திய உதாரணம் 'சூரரைப் போற்று'. உண்மைக்கதையில் சில கற்பனைகளை கலந்து விறுவிறுப்பான படம் தந்து வரவேற்பை பெற்றிருக்கிறார்கள். 'காலா' படத்தின் அறிவிப்புகள், ஃபர்ஸ்ட் லுக் போன்றவை வந்தபோது அது கற்பனை கதையா, இல்லை உண்மைக் கதையா என்று விவாதங்களும் யூகங்களும் கிளம்பின. அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்குச் சென்று அங்கு பெரும்புள்ளியாக, டானாக மாறியவரின் உண்மைக்கதையைத் தழுவி 'நாயகன்' எடுக்கப்பட்டுவிட்டது. 'நாயகனை'த் தவிர இன்னும் இருவரும் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு சென்று பெரும் புள்ளிகளாய் திகழ்ந்திருக்கிறார்கள். 'நாயகன்' கதை வரதராஜ முதலியாரின் கதையை சில இடங்களில் தழுவி எடுக்கப்பட்டது. வரதராஜ முதலியாரைத் தவிர ஹாஜி மஸ்தான், திரவிய நாடார் ஆகியவர்களும் இங்கிருந்து சென்று மும்பை நிழலுலகத்தில் முக்கிய புள்ளிகளாகினர்.
மஸ்தான் ஹைதர் மிர்சா, ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் 1926 ஆம் ஆண்டு பிறந்து கடலூரில் சிறிது காலம் வாழ்ந்து, பின் பிழைப்பு தேடி தன் தந்தையுடன் பம்பாய் சென்றார். சைக்கிள் பழுது பார்க்கும் வேலை செய்த அவர்களுக்கு வருமானம் பற்றாமல் போக, பம்பாய் துறைமுகத்தில் கூலி வேலை செய்யப் போனார். அங்கு கிடைத்த தொடர்புகளின் மூலம் சின்ன சின்ன கடத்தல் வேலையில் ஈடுபட்டவர் மெல்ல வளர்ந்தார். ஆப்கானிஸ்தானிலிருந்து மும்பைக்கு புலம் பெயர்ந்த கரீம் லாலா என்பவருடன் இணைந்து பல பெரிய வேலைகளைச் செய்து பணம் சம்பாரிக்கத் தொடங்கினார். தங்கக் கடத்தலில் பணம் கொட்ட, எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பல கடத்தல் தொழில்களிலும் ஈடுபட்டு விரைவில் பெரும் புள்ளியானார். வெள்ளை பென்ஸ் கார், வெள்ளை ஆடை, வெளிநாட்டு சிகரெட், என இவர் தான் மும்பையின் முதல் 'ஸ்டைலிஷ்' தாதா. இவரது வளர்ச்சியை பார்த்த மும்பை முக்கியஸ்தர்கள், 'யாரு சாமி இவன்' என்று கவனித்தனர். பணப்புழக்கம் அதிகரிக்கவும், புதுப் பழக்கங்களும் அதிகரித்தன. இந்தி திரையுலகிலும் நுழைந்தார். படங்களுக்கு நிதியளித்தார், பின் தயாரிக்கவும் செய்தார். ராஜ் கபூர், திலீப் குமார், தர்மேந்திரா என பாலிவுட் பிரபலங்கள் இவரது நண்பர்களாகினர்.
இவரது தொடர்புகள் வேறு தளங்களில் இருந்தாலும் மும்பையில் இருந்த தமிழர்களுக்கும் பாதுகாப்பாய் இருந்தார். இன்னொரு தமிழ் புள்ளியான வரதராஜ முதலியரிடம் மிகுந்த நட்புடன் இருந்தார். ஒரு கட்டத்தில், முதலியாரின் கூட்டாளிகள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டு, அவரும் சென்னைக்கு வந்து 1988இல் உயிரிழந்த பொழுது, அவரின் விருப்பப்படி, அவரது உடலைத் தனி விமானத்தில் மும்பை கொண்டு சென்று அடக்கம் செய்தார் ஹாஜி மஸ்தான். அந்த அளவுக்கு நட்புடன் இருந்தனர் இவர்கள். 1984இல் 'தலித் முஸ்லீம் சுரக்ஷா மகா சங்' என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தினார். ஆண் வாரிசு இல்லாததால், சுந்தர் சேகர் என்பவரை தன் தத்துப் பிள்ளையாக வளர்த்தார். அவர் தான் 'காலா' படம் வெளிவரும் முன் தன் தந்தையின் கதையை தவறாகப் படமாக்கியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஜினிக்கு நோட்டீஸ் விட்டவர். ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையைத் தழுவி, இந்தியில் 'தீவார்' (Deewar) , 'ஒன்ஸ் அபான் அ டைம் இன் மும்பை' (Once upon a time in Mumbai) ஆகிய படங்கள் வந்தன.
வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான் ஆகியோரிடமிருந்து சற்று மாறுபட்டவர் திரவிய நாடார். சின்ன வயதில் வறுமையினால் திருநெல்வேலியில் இருந்து பம்பாய் சென்றது, ஆரம்பத்தில் சின்னச் சின்ன சட்டவிரோத செயல்கள் செய்தது என இவரது தொடக்க காலமும் அவர்களைப் போலவே இருந்தாலும், பின்னாட்களில், அவர்கள் அளவுக்கு பிரபலமான நிழலுலக மனிதராக இவர் திகழவில்லை. மாறாக தாராவி மக்களுக்கு அரணாய் அமைந்து, தமிழ்க் குழந்தைகளுக்காக பள்ளி ஒன்றையும் காட்டியுள்ளார். திருநெல்வேலியில் இருந்து தன் பதினாறு வயதில் சென்னைக்கு சென்று, அங்கு தன் அண்ணன் ஏற்றுக்கொள்ளாததால், ரயிலேறி பம்பாய்க்கு சென்றார். கள்ளச்சாராயத்துக்குத் தேவைப்படும் வெல்லம் விற்கும் வேலையில் ஈடுபட்டு வளர்ந்ததால், 'ஃகூடு வாலா சேட்' எனவும் அழைக்கப்பட்டாராம். ஒரு கட்டத்தில் கடத்தலில் இருந்து விலகி, காலியாக இருந்த நிலங்களைக் கைப்பற்றி கடைகள் கட்டியுள்ளார். அங்கிருந்த தமிழர்களுக்கு உதவியாகவும் இருந்துள்ளார். காமராஜரின் தீவிர ஆதரவாளராகவும் இருந்துள்ளார். ஹாஜி மஸ்தான், வரதராஜ முதலியார் ஆகியோருடனும் நல்ல உறவில் இருந்துள்ளார்.
இவர்கள்தான் மும்பை நிழலுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மூன்று முக்கியமான தமிழர்கள். இதுபோக தொழிலதிபர்களாகவும் இன்னும் பிற துறைகளிலும் மும்பையில் சிறந்து விளங்கும் தமிழர்கள் பலர் இருக்கின்றனர்.