Skip to main content

ஓபிஎஸ்-ஐ தேடிய மோடி; ஆச்சரியப்பட்டு போன தலைவர்கள்! - புகழேந்தி பகிர்ந்த சுவாரசியம்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

j

 

சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்று பேசியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக பாஜக தரப்பிலிருந்து காட்டமாகப் பதில் தரப்பட்டிருந்தது. இவரின் இந்தப் பேச்சு இவராகப் பேசியதா? இல்லை அதிமுக தலைமையே இவ்வாறு பேச இசைவு தந்ததா? என்பது போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தியிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். இதுதொடர்பாக பேசிய அவர், "சி.வி.சண்முகம் பேசியதை உற்றுக் கவனித்தால் பல உண்மைகள் புரியவரும். பாஜகவை ஒருமையில் பேசியுள்ளார். அதைப்போல சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்றில் எடப்பாடி பழனிசாமி எங்கள் கட்சியின் கொள்கை வேறு; பாஜகவின் கொள்கை வேறு; நாங்கள் வேறு; அவர்கள் வேறு என்று பல பஞ்ச் டயலாக் எல்லாம் பேசினார்கள். 

 

அப்போதே இவர்களின் நோக்கம் வேறு எதையோ நோக்கி இருப்பதாகத் தொடர்ந்து கூறிவந்தேன். தற்போது இவர்களின் நடவடிக்கையைத் தொடர்ந்து கவனித்தால் பாஜகவுக்கு பெப்பே காட்டுவதைப் போல் உள்ளது. அதை உறுதிசெய்யும் சம்பவங்களும் குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் நடைபெற்றது. அண்ணன் பன்னீர்செல்வம் அவர்களுக்கு அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து பதவியேற்பு விழாவில் அவர் கலந்துகொண்டார். ஆனால், எடப்பாடி வேண்டுமென்றே அங்கே செல்லவில்லை. நீங்கள் என்ன அழைப்பது.. நான் என்ன வருவது.. என்ற தொனியில் அவரின் செயல்பாடு இருந்தது. குஜராத்தில் தமிழகத் தலைவர்களைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்த மோடி, அவ்வளவு பேர் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் வேர் இஸ் ஓபிஎஸ்? என்று கேட்டுள்ளார். அங்கே நின்ற ஏ.சி.சண்முகம் தொலைவில் நின்ற பன்னீர்செல்வத்தைக் கூப்பிட்டுள்ளார். ஆக, மரியாதை அங்கு யாருக்குக் கிடைத்தது, கொடுக்க விரும்புகிறார்கள் என்பது மிக முக்கியம்.

 

சண்முகத்தின் பேச்சு என்பது, நாங்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்குத் தயாராக இருக்கிறோம் என்பதைச் சொல்லியிருக்கிறார். எடப்பாடியின் ஆதரவு இல்லாமல் இவர் இப்படிப் பேசுவாரா என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு பாஜக தரப்பிலிருந்து இன்னும் கடுமையான எதிர்ப்பை அண்ணாமலை தெரிவித்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்குக் கதவு திறக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை சண்முகம் பேச்சு வழியாக பாஜகவுக்கு எடப்பாடி அணி உணர்த்தியுள்ளது. ஆனால், நாங்கள் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் எனப் போக்கு காட்டி பாஜகவைப் பணிய வைக்கலாம் என்பது அவர்களுடைய திட்டமாக இருக்கிறது" என்றார்.