தன் மீதான பா.ஜ.க. தலைமையின் கோபத்தை டெல்லி விசிட்டின் மூலம் தணித்துவிடலாம் என்றுதான் நினைத்தார் எடப்பாடி. அது சாத்தியமானதா என டெல்லி தொடர் பாளர்களிடம் விசா ரித்தபோது, "டெல்லியில் 15-ந் தேதி நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள 14-ந்தேதி மாலையே டெல்லிக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர், அன்று இரவு நீண்ட நேரம் தூங்கவில்லை. பிரதமருடனான சந்திப்பு குறித்து ரிகர்சல் பார்த்தபடி இருந்தார். பிரதமரிடம் அளிக்கும் கோரிக்கை மனுவையும் ஒருமுறை படித்துப் பார்த்துக் கொண்டார் எடப்பாடி.
நிதி ஆயோக் கூட்டத்துக்கு வரும் முதலமைச்சர்கள் பலரும் மோடியை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருந்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. பிரதமரிடம் 10 நிமிடம் தனியாக பேசவேண்டும் என கடுமையாக முயற்சித்தது தமிழ்நாடு இல்லம், பலனில்லை. அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சகிதம் மோடியை சந்தித்த எடப்பாடி, காஸ்ட்லியான காஞ்சிபுரம் பட்டுச் சால்வை வழங்கி, பூங்கொத்து கொடுக்கும் சம்பிரதாயத்திற்கே 2 நிமிடம் போய்விட்டது.
மத்திய அரசின் நிதி, மேகதாது அணை விவகாரம், குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கை மனுவை மேலோட்டமாக ஆராய்ந்த மோடி, "நிதியமைச்சர் நிர்மலாவை பாருங்கள்' என அழுத்தமாகத் தெரிவித்துவிட்டார். "தனியாக 10 நிமிடம் பேச வேண்டும்' என எடப்பாடி கேட்க, அமித்ஷாவை சந்தித்துப் பேசுங்கள். "நான் தெரிந்துகொள்கிறேன்' என்றிருக்கிறார் மோடி. நேரம் முடிந்ததால், முதல்வர் உள்ளிட்டவர்களை அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம்'' என்கின்றனர்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி, தமிழக அரசுக்கு தேவையான நிதி குறித்து பேசினார். இதற்கு எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. இந்த நிலையில், காவிரியில் மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி வலியுறுத்திப் பேசியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய முதல்வர் எடப்பாடி அமைதியாக இருந்துள்ளார். கூட்டம் முடிந்ததும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின்கட்கரி, கஜேந்திர குமார் ஷெகாவத்தை சந்தித்து தமிழக திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார் எடப்பாடி. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் கெடுபிடி காட்டியிருக்கிறார்.
இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக அரசின் நிதித்துறை அதிகாரிகள், "உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முதல்வர், தேர்தலுக்காக பல புதிய அறிவிப்புகளை செய்யும் திட்டத்தில் இருக்கிறார். அதற்கான நிதி உதவி, மத்திய அரசு மனது வைத்தால்தான் நடக்கும். அதனால் கூடுதல் நிதி பெறமுடியும் என டெல்லி சென்ற முதல்வருக்கு இந்தப் பயணம் ஏமாற்றமாகத்தான் முடிந்தது.
தன்னை சந்தித்து நிதி குறித்து கோரிக்கை வைத்த எடப்பாடியிடம், "நிதி விவகாரங்களில் உங்கள் அரசுக்கு கவனம் போதவில்லை. விரயச் செலவுகள்தான் அதிகம் செய்கிறீர்கள். ஊழல்களும் அதிகமாகியிருக்கிறது. அதற்காகவே புதிய புதிய திட்டங்களை அறிவிக்கிறீர்கள். காண்ட்ராக்டர்களுக்கும் அதிகாரிகளுக்கும்தான் பணம் போகிறது' என கடுமையாக கடிந்து கொண்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
மேலும், "நடப்பாண்டில் நீங்கள் எதிர்பார்ப்பதை முழுமையாக மத்திய அரசு தருவதற்கில்லை. மாநிலங்களுக்கான தேவைகளில் சில மாற்றங்களை கொண்டுவர நிதி ஆயோக் அதிகாரிகள் நினைக்கின்றனர். அதனை தெரிந்துகொண்டு பிரதமரிடம் கலந்து பேசிய பிறகு தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப் படும். உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள், அப்புறம் முடிவெடுக்கப்படும்' என கறாராக தெரிவித்திருக்கிறார் நிர்மலா. அதனால், இங்கேயும் எடப்பாடிக்கு மூடு அவுட்தான்'' என்கிறார்கள் நிதித்துறையினர்.