Skip to main content

இது என்ன அமித்ஷா வீட்டு சொத்தா... அதிர்ந்து போன மோடி, அமித்ஷா... விரைவில் குடியுரிமை சட்ட திருத்த மாற்றம்?

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து பல இந்துத்வா சட்டங்களை இந்தியாவில் கொண்டு வரலாம் என நினைத்திருந்த மோடி மற்றும் அமித்ஷா கூட்டணி, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எழுந்த எதிர்ப்பலையைப் பார்த்து "இடி கேட்ட நாகம் போல' அரண்டு போயிருக்கிறது என்கிறார்கள், டெல்லி பா.ஜ.க. தலைமையைச் சேர்ந்தவர்கள்.

 

bjp



"குடியுரிமை சட்டத்திருத்தம் இந்துக்களைப் பாதுகாக்கும் சட்டம், முஸ்லிம்களுக்கு எதிராக அமையும் இந்த சட்டத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பார்கள். கிறிஸ்துவர்கள் அதிகமாக உள்ள மேலை நாடுகள், இந்தியாவில் உள்ள இந்துக்கள் ஆகியோர் ஆதரிப்பார்கள்'' என ஆர்.எஸ்.எஸ். கணக்குப் போட்டது. இந்த சட்டத்தை இந்தியாவில் உள்ள இந்துக்கள் ஆதரித்துவிட்டால் அடுத்தகட்டமாக பொது சிவில் சட்டம் கொண்டுவரலாம் என ஆர்.எஸ்.எஸ். திட்டம் போட்டது. இருபது கோடி இசுலாமியர்கள் உள்ள இந்தியாவில் 80 கோடிக்கும் அதிகமான இந்துக்களை இந்துத்வா பக்கம் திருப்பி விட்டால் பா.ஜ.க. நிரந்த ஆளுங்கட்சியாகிவிடும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கணக்கில் உள்ள உள்கணக்கு.

 

mamtha



குடியுரிமை சட்டத் திருத்தம் பாராளுமன்றத் தின் இரு அவைகளிலும் நிறைவேற்றும்வரை ஆர்.எஸ்.எஸ். + பா.ஜ.க. வின் இந்தக் கணக்கு சரியாகவே வேலை செய்தது. ஒரிசாவின் பிஜு ஜனதாதளம், பீகாரின் ஐக்கிய ஜனதாதளம் போன்ற கட்சிகள் பாராளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை ஆதரித்துதான் வாக்களித்தன. தமிழகத்தின் அ.தி.மு.க., மராட்டியத்தின் சிவசேனா ஆகிய கட்சிகளும் ஆதரித்தன. இந்தியாவில் வேறெந்த அரசியல் கட்சியும் இந்த சட்டத்தை தற்பொழுது ஆதரிக்க தயாராக இல்லை. பிஜு ஜனதாதளமும் ஐக்கிய ஜனதா தளமும் "நாங்கள் இந்த சட் டத்தை ஆதரிக்கமாட்டோம்' என இப்போது வெளிப்படையாகவே அறிவித்துவிட்டன.


இந்திராகாந்தி கொண்டு வந்த எமர்ஜென்ஸியை விட இந்தச் சட்டம் அதிகமான எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. மக்கள் வீதிக்கு வந்ததைப் பார்த்து இந்திய அரசியல் கட்சிகள் மிரண்டுபோனதன் விளைவாகத்தான் பிஜு ஜனதாதளமும் ஐக்கிய ஜனதாதளமும் எதிர்ப்பு நிலையை எடுத்தன என்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள்.

 

 

congress



கிறிஸ்துவர்கள் இந்தச் சட்டத்தை ஆதரிப்பார்கள் என்கிற கணக்கும் பொய்யாகிப் போனது. பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வெறும் 54 பேர்தான். கிறிஸ்துவர்களை ஆதரவாக சாட்சியம் சொல்ல வைக்கலாம் என இந்திய அரசு திட்டமிட் டது. அதற்கு அவர்கள், "பாகிஸ்தானில் சர்ச்சுகள் தாக்கப்படுகின்றன. அது உண்மைதான். ஒரிசாவில் ஒரு கிறிஸ்துவ பாதிரியாரை குடும்பத்துடன் எரித்துக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். காரர் மத்திய மந்திரியாகிவிட்டார். அவர் சமஸ்கிருதத்தில் பாராளுமன்றத்தில் பேசுகிறார். எனவே இந்தியாவில் நாங்கள் தாக்கப்படுகிறோம்'' என மத்திய அரசின் சாட்சியம் அளிக்கும் முயற்சிக்கு மறுப்பு தெரிவித்து விட்டார்கள்.

கிறிஸ்துவர்களுக்கு குடியுரிமை அளிக்கிறோம் என அறிவித்ததால் மேற்கத்திய நாடுகளின் மீடியாக்கள் மவுன மாகிவிடும் என ஆர்.எஸ்.எஸ். நினைத்தது. கடந்தவாரம் முழுக்க லண்டனிலிருந்து வெளிவரும் "தி கார்டியன்', அமெரிக்காவின் "நியூ யார்க் டைம்ஸ்' போன்ற பத்திரிகைகள் நரேந்திர மோடியை "ஹிட்லர்' என வர்ணித்தன. மோடி அரசின் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கெதிரான மக்கள் போராட்டங்களை முதல்பக்கத்தில் வெளியிட்டு முகத்திரையைக் கிழித்தன.

 

dmk



இந்த சட்டத்தை எதிர்த்து உலக நாடுகளில் உள்ள இசுலாமியர்கள் சிலர் மட்டும் போராடுவார்கள் என மோடி எதிர்பார்த்ததற்கு மாறாக, லண்டனின் மையப்பகுதியில் ஈழத்தமிழர்கள் உட்பட இந்துக்கள் பலர் போராடினார்கள். "இந்தியா மதச்சார்பற்ற நாடு. இது என்ன அமித்ஷாவின் அப்பன் வீட்டு சொத்தா' என ஜாமியா மில்யா மாணவர்கள் டெல்லியில் எழுப்பிய கோஷம் லண்டனில் உள்ள இந்துக்களிடமிருந்து ஒலித்ததைக் கேட்டு இந்திய அரசு மிரண்டு போனது. இந்தியாவின் அறிவாலயங்களாக கருதப்படும் ஐ.ஐ.டி.க்கள், மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள காசி இந்து பல்கலைக் கழகம், பெங்களூருவில் உள்ள பல்கலைக்கழகம், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் போன்ற இடங்களில் ஆவேசத்துடன் நடந்த ஆர்ப்பாட்டங்கள் இந்த சட்டத்திற்கு இந்துக்களின் ஆதரவு இல்லை என்பதையே காட்டியது. இந்தியர்கள் மகாத்மா காந்தி வழியில் மதச் சார்பற்றவர்கள் என நிரூபித்ததைப் பார்த்து அரண்டுபோனது மத்திய அரசு.


இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு இந்த சட்டத்தை எதிர்ப்பது மோடியையும் அமித்ஷாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த சட்டத்திற்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக அதை நடத்த முடியாதோ என மத்திய அரசு திகைத்துப்போயுள்ளது. "வடகிழக்கு மாநிலங்களின் பூர்வகுடிகளை பாதுகாக்க நாங்கள் அங்கே இந்தியர்கள் சொத்து வாங்க தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்துவோம்' எனச் சொல்லியிருக்கிறது. ஆனால் அப்படி அசாமிலும் மேற்குவங்கத்திலும் சொல்லவே முடியாது. அசாமும் மேற்குவங்க மும் போராட்டங்களின் உச்ச கட்டத்தில் இருக்கின்றன.

சுப்ரீம்கோர்ட், ஜனவரி மாதம் வரை இந்தச் சட்டம் தொடர்பான விளக்கம் கொடுக்க மத்திய அரசுக்கு நேரம் கொடுத்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி, போராட்டங்கள் குறையும் வகையில் சட்டத் திருத்தம் செய்யலாமா? என ஆழ்ந்த யோசனையில் இருக்கிறது மத்திய அரசு என்கிறார்கள் டெல்லி அரசியல் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். பா.ஜ.க.வின் இந்துத்வா ஆயுதம் பூமராங் ஆகியுள்ளது.