Skip to main content

ஆளுநர் Vs மாநில அரசு; வைக்கப்பட்ட வாதங்களும்.. நீதிபதியின் கண்டனங்களும்! 

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

Governor Vs State Government; Arguments and criticisms of the judge!

 

தமிழ்நாடு சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது. அரசின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பது உள்ளிட்ட ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராக கடந்த அக்.31ம் தேதி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. 

 

தமிழ்நாட்டிற்கு முன்பாக பஞ்சாப் அரசு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது இதே குற்றச்சாட்டைக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  தமிழ்நாடு வழக்கு தொடர்ந்து சில தினங்களிலேயே கேரளா அரசும் தங்கள் மாநில ஆளுநரான அரிஃப் முகமது கான் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

 

Governor Vs State Government; Arguments and criticisms of the judge!

 

பஞ்சாப் அரசு தொடர்ந்து வழக்கு விசாரணை கடந்த 6ம் தேதி, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும்” என கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. 

 

பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கை நவ.10 அன்று தமிழ்நாடு அரசு தங்கள் ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்குடன் சேர்ந்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. 

 

தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், மனு சிங்வி, முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைத்தனர். 

 

Governor Vs State Government; Arguments and criticisms of the judge!

 

அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், “காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை ஆளுநர்களின் செயல்பாடுகள் ஒரே மாதிரியாகத் தான் இருந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசு மொத்தம் 12 மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அந்த மசோதாக்கள் எல்லாம் நிலுவையில் உள்ளன. ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகள் மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் இருக்கின்றன. 

 

பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க ஆளுநர் மறுப்பு தெரிவிக்கிறார். கிடப்பில் போட்டு வைத்து, அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்கிறார். பல வருடங்களாக சிறையில் வாடும் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு அனுப்பிய கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இது அரசின் உரிமையை பறிக்கும் விஷயம் என்றாலும், மற்றொரு பக்கம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

 

அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 200ல் உள்ள As Soon As Possible என்ற சொல்லை தவறாக ஆளுநர் புரிந்து கொண்டு காலம் தாழ்த்தி வருகிறார். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போடுவதற்கு உரிமை கிடையாது” என்று வாதிட்டது. 

 

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “ஆளுநர் ஆர்.என். ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இந்த வழக்கு மிகவும் முக்கியமானவை. 

 

அரசியல் சாசனத்தின் 200வது பிரிவின்படி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத நிலையில், மறுபரிசீலனைக்காக கூடிய விரைவில் ஆளுநர் சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.  அப்படி திருப்பி அனுப்பிய பிறகு மீண்டும் ஆளுநருக்கு அந்தக் கோப்பு வந்தால் அதன் மீது தாமதம் இல்லாமல் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

 

இந்த வழக்கில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளர் பதில் அளிக்கும்படியும், மத்திய அரசும் பதில் அளிக்கவும் நோட்டீஸ் வழங்க வேண்டும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். 

 

Governor Vs State Government; Arguments and criticisms of the judge!

 

மேலும், இந்த வழக்குடன் விசாரிக்கப்பட்ட பஞ்சாப் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். இந்த விவகாரம் மிகவும் ஆபத்தானது. ஆளுநருக்கு இதுபோன்ற அதிகாரங்களை கொடுத்தது யார்? ஆளுநர்கள் தாங்கள் செய்யும் தவறின் தீவிரத்தை உணர்கிறீர்களா இல்லையா? நடப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார்.