கரோனா தொடர்பாக விவாதிப்பதற்காக திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு வீடியோ வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு தகவல்களைத் தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது, "கரோனா சம்பந்தமாக இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒரு நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலாவதாக இந்த கரோனா நோயின் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக கரோனா நோயில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதில் தேவையற்ற கால தாமதம் இருக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். மேலும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு நிதியாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாரும் எந்த உதவியும் செய்ய கூடாது என்ற நோக்கில் தடை போட்டார்கள். அதை எதிர்த்து எங்களுடைய வழக்கறிஞர் வில்சன் அவர்கள் மூலமாக ஆலந்தூர் பாரதி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். அதை விசாரித்த நீதிமன்றம் அரசின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், உதவி வழங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்த வேண்டும் என்று அந்த உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகவும் ஒரு தீர்மானம் நிறைமேற்றி உள்ளோம். உதவ வேண்டும் என்ற எண்ணத்திற்கு வலுசேர்ந்த இந்த உயர்நீதமன்ற உத்தரவைச் செயல்படுத்த இந்த அரசு முயல வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய கூட்டம். ஆனால் இந்தக் கூட்டம் நடைபெறக் கூடாது என்பதற்காக காவல்துறை மூலம் ஒரு அறிக்கையின் மூலமாகத் தடை செய்தார்கள்.
அந்தத் தடையை மீறி எங்களால் அந்தக் கூட்டத்தை நடத்தியிருக்க முடியும். ஆனால் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து காணொளி காட்சி மூலம் இன்று நடத்தியிருக்கிறோம். அதற்கு காவல்துறை தரப்பில் என்ன சொன்னார்கள் என்றால், தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று அதற்கு காரணமாக எங்களிடம் கூறினார்கள். நாங்கள் அதை ஏற்றுக்கொண்டு இன்றைக்கு காணொளி காட்சி மூலம் இந்தக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறோம். ஆனால் நேற்றைய தினம் துணை முதல்வர் அவரின் துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தியிருக்கிறார். சட்டத்துறை அமைச்சர் சண்முகம் விழுப்புரத்தில் அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தியிருக்கிறார். இவை எல்லாம் செய்தித்தாள்களில் வந்திருக்கிறது. ஒரு 11 கட்சி தலைவர்களை இணைந்து கூட்டம் நடத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு இவர்கள் எவ்வாறு கூட்டம் நடத்துகிறார்கள். இதில் இருந்தே இவர்களின் அப்பட்டமான விதிமீறல்கள் நமக்குத் தெரிய வருகின்றது. இந்தத் தீர்மானங்களை இந்த அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.