
எல்லா நேரத்திலும் காங்கிரஸ் காரராகவே இருப்பார். காங்கிரஸ் என்றால் வசந்தகுமார், வசந்தகுமார் என்றால் காங்கிரஸ் என H. வசந்தகுமார் மறைவு குறித்து தலைவர்கள் இரங்கல் தெரிவிக்கும்போது குறிப்பிடுகின்றனர். ''எங்களுக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கியம். சொந்தத்தைவிட கட்சிதான் முக்கியம்'' என நக்கீரன் இணையத்தளத்திற்கு அவர் அளித்த பேட்டியின்போது பதிவு செய்திருக்கிறார்.
2019 பிப்ரவரி மாதம் ராகுல் காந்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார். யாரும் எதிர்பாரா விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டு அறிக்கை வந்திருந்தது. இந்த அறிவிப்போடு இன்னொரு புதிய அறிவிப்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். செயல் தலைவராக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் H. வசந்தகுமார்.
அப்போது வசந்தகுமாரிடம், இந்திய அளவில் ஒன்றை ஒன்று கடுமையாக எதிர்க்கும் இரண்டு பெரிய கட்சிகள் காங்கிரஸ் - பா.ஜ.க. தமிழக பா.ஜ.கவின் தலைவராக இருப்பவர் தமிழிசை சௌந்தர்ராஜன். (இவரது தந்தை குமரி அனந்தன், தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர். வசந்தகுமார், குமரி அனந்தனின் சகோதரர் என்ற முறையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் உறவினர்). தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் உறவினர்கள் எதிரெதிர் முகாம்களில் முக்கிய பொறுப்புகளில் இருப்பது புதிதல்ல. என்றாலும் நீங்கள் கடுமையாக எதிர்க்க வேண்டிய பா.ஜ.கவில் தமிழக தலைவராக இருப்பவர் உங்கள் உறவினர். அவர் காங்கிரஸ் கட்சியை எதிர்த்துக் கடுமையான பேட்டியோ, அறிக்கையோ வெளியிட்டால் எப்படி எதிர்கொள்வீர்கள்? என்று கேட்டோம்.

அதற்கு அவர் "அதையும் தாண்டி, அதற்கு மேலேயும் அறிக்கை வெளியிடுவோம். யார் எந்த இடத்தில் இருந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் பிறப்பால் காங்கிரஸ்காரர்கள். எங்களுக்கு காங்கிரஸ் கட்சிதான் முக்கியம். சொந்தத்தைவிட கட்சிதான் முக்கியம். சொந்தமெல்லாம் சம்மந்தமில்லை" என்றார் உறுதியாக.