காவிரியின் குறுக்கே இனியொரு அணை கட்டக்கூடாது என்ற விதியை மீறி, மிகப்பெரிய அணையை மேகேதட்டு என்ற இடத்தில் கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளித்திருக்கிறது.
மத்திய அரசு அனுமதிக்கு முதல்நாள் ஒரு முக்கியமான சந்திப்பு நடந்திருக்கிறது. கர்நாடக அரசியலில் சண்டைக்கோழிகள் என்றும் இரு துருங்கள் என்றும் கூறப்படும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமாரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் சந்தித்து 1 மணிநேரம் பேசியிருக்கிறார்கள். அந்த ஊர் நாளிதழ்களில் இந்தச் செய்தி துருவங்கள் சந்தித்தன என்று வெளியானது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்தே மேகதாது அணை கட்ட மத்திய பாஜக அரசு ஒப்புதல் வழங்கியது என்று அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கிவிட வேண்டும் என்பதில் மத்திய பாஜக அரசு குறியாக இருக்கிறது. அம்பானி, அதானி, வேதாந்தா குழுமங்களின் வேட்டைக்காடாக டெல்டா மாவட்டங்களை மாற்றி, இந்த மாவட்ட மக்களை நிலமற்றவர்களாக்கி விரட்ட மறைமுகமாக சதி திட்டம் தீட்டப்படுகிறது என்று இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.
காவிரி நீர் பங்கீடுக்கா காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு ஆடிய நாடகமே அதற்கு சாட்சியாக இருந்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் நடத்திய தொடர் போராட்டத்துக்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் காலந்தள்ளிய மோடி அரசு, எதிர்ப்பையும் மீறி வேதாந்தா குழுமத்திற்கு ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்க அனுமதி வழங்கியது.
இப்போது கஜா புயலால் கடலோர மாவட்டங்கள் தரைமட்டமாகியுள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் நிவாரணப் பணிகளும் மந்தகதியில் நடைக்கிறது. சிலை வைக்க 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தவர்கள், 6 மாவட்ட பேரழிவை சீரமைக்க 353 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில்தான் காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் வகையில் மேகதாது அணைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அங்கு பாஜக அரசு இல்லையென்றாலும், காங்கிரஸ், மஜத கூட்டணி அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ஆனால், தமிழகத்திலோ எதிர்க்கட்களும் ஆளுங்கட்சியும் எதிர்ப்பு உணர்வைக்கூட சிதறடிக்கின்றன. தமிழகம் ஒன்று திரண்டு போராடினால் மட்டுமே மேகதாது அணை அபாயத்தைத் தடுத்து, டெல்டா மாவட்ட விவசாயத்தை பாதுகாக்க முடியும்.
“கர்நாடகா பகுதியில் விளைநிலங்களின் பரப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், டெல்டா மாவட்டங்களில் முன்பு 25 லட்சம் ஏக்கராக இருந்த விளைநிலப் பரப்பு, இப்போது 15 லட்சம் ஏக்கராக சரிந்துள்ளது” என்கிறார் திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவில்லை என்பதால், கர்நாடகாவில் இருக்கிற ஆதரவை தக்கவைப்பதற்காக மத்திய மோடி அரசு மிகப்பெரிய சதித்திட்டத்தை தீட்டுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.