சர் சர்ரென கார்கள் வருவதும் வெட்டவெளியில் பார்க்கிங் செய்வதும் அதில் சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை கீழிறங்கிக் கொண்டு வந்திருந்த சேர்களைப் போட்டு அமர்ந்து எதையோ வேடிக்கை பார்ப்பதுமாக இருக்கிறார்கள். இன்னும் பலர், தங்கள் கேமராவை நிறுத்தி அதன் வழியே படமெடுப்பதும், வேடிக்கை பார்ப்பதுமாக வியக்கிறார்கள். எல்லாம் எங்கே? சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியான ஹவாய் தீவில் தான். அவர்கள் வேடிக்கை பார்ப்பது வேறெதுவுமில்லை... கொதிக்கக் கொதிக்கச் சிவந்த நிறத்தில் கொப்பளித்து, வழிந்து ஓடுகின்ற லாவா எனப்படும் எரிமலைக் குழம்பைத்தான்.
அமெரிக்காவின் மேற்கே பசிபிக் கடலுக்கிடையே அமைந்துள்ள பசுமையும் மலைகளும் சூழ்ந்த இயற்கை அழகு கொஞ்சும் தீவுக்கூட்டமே ஹவாய் தீவு. இந்த தீவில் கடல் மட்டத்திலிருந்து 13,679 அடி உயரத்துக்கு அமைந்துள்ளது உலகின் மிகப்பெரிய மௌனா லோவா எரிமலை. ஆனால் இந்த எரிமலையின் அடிப்பாகம் கடலின் அடிப்பரப்பில் கடலுக்குள் அமைந்துள்ளது. அந்த அடிப்பாகத்திலிருந்து எரிமலையின் உச்சி வரையிலான உயரம் 30,085 அடியாகும். நிலப்பரப்பிலுள்ள உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட்டின் உயரம் 29,030 அடியாகும். இந்த எவரெஸ்ட்டை விட உயரமானது மௌனா லோவா எரிமலை. இந்த எரிமலையின் மொத்த பரப்பளவு 2,035 சதுர கிலோமீட்டர்கள்.
கடந்த நவம்பர் 28ஆம் தேதி வெடித்துக் கிளம்பிய மௌனா லோவா எரிமலை உலகின் மிகப்பெரிய செயல்பாட்டிலிருக்கும் எரிமலை என்ற பெருமைக்குரிய இடத்திலிருக்கிறது. மௌனா லோவா எரிமலை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை எரிமலைக் குழம்புகளை வெளியேற்றுவது வழக்கமானது தான். ஆனால், கடந்த 1984ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் எரிமலைக் குழம்புகளை வெளியேற்றியதோடு சாந்தமான இந்த எரிமலை, அதன்பின்னர் 38 ஆண்டுகளாக எவ்வித அசைவுமின்றி கிடந்தது. அதற்கும் முன்னதாக 1843ஆம் ஆண்டிலிருந்து 30 முறைக்கும் மேலாக அதில் எரிமலைக்குழம்பு வெளியேறியிருக்கிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து எரிமலைப் பகுதியின் அடிப்பகுதியில் கடமுடா என்று வித்தியாசமான சத்தம் அவ்வப்போது எழத்தொடங்கியது. அதையடுத்து விஞ்ஞானிகள் அந்த எரிமலையில் வெடிப்பு வர வாய்ப்புள்ளது என அலர்ட்டாகி இரவு பகலாக அதை கவனிக்கத் தொடங்கினார்கள். நாசாவின் சாட்டிலைட்கள் இந்த எரிமலையை ஃபோகஸ் பண்ணத் தொடங்கின. கடந்த நவம்பர் 28ஆம் தேதி, கொலராடோவைச் சேர்ந்த மேக்ஸர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் மேக்ஸர் சாட்டிலைட் தான் முதன்முதலில் அந்த எரிமலையின் மையப்பகுதியில் செக்கச் சிவந்த எரிமலைக்குழம்பு கொப்பளிக்கத் தொடங்குவதைப் படம்பிடித்துச் சொன்னது. உடனடியாக மற்ற சாட்டிலைட்டுகளும் இந்த எரிமலைச் சீற்றத்தைக் கண்காணிக்கத் தொடங்கின. எரிமலையின் உச்சியிலிருந்து 165 அடி உயரம் வரை எரிமலைக்குழம்பு மேலெழும்பிக் கொப்பளித்து ஓடத் தொடங்கியது. 1,000 டிகிரி செல்சியல் வெப்ப நிலை கொண்ட எரிமலைக் குழம்பானது மணிக்கு 40 மீட்டர் தூரம் என்ற வேகத்தில் ஓடைபோல நகர்கிறது. இந்த எரிமலைத்தொடர் அத்தீவின் பாதிக்கு மேற்பட்ட பரப்பளவை ஆக்கிரமித்துள்ள போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பினால் அங்குள்ள மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று ஹவாய் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், எரிமலையிலிருந்து வெளியேற்றப்படும் சாம்பல் தூசி உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடியதாகும். எனவே, ஹவாய் தீவிலுள்ள மக்களில் 2 லட்சம் பேர் வரை நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தயாராக இருக்கும்படி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வளவு சீரியஸான நேரத்தில் அதுகுறித்து பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் அந்த எரிமலையை வேடிக்கை பார்ப்பதற்கு ஆர்வத்தோடு எரிமலையை நோக்கி மக்கள் கூட்டம் படையெடுத்து வருகிறது. திருவிழாக் கூட்டம்போல கார்களில் சென்று குவிகிறார்கள். சிறுவர்களுக்கு வேடிக்கை காட்டவும், குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டியபடியே சோறூட்டுவதும், விதவிதமாக படம் பிடிப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள். அங்கே பஜ்ஜி, போண்டா கடைகள் போட வேண்டியது மட்டுமே மிச்சம். இப்படிக் குவிய வேண்டாமென அரசாங்கம் கேட்டுக்கொண்ட போதிலும் இப்படியான அரிதான நிகழ்வை இப்போது பார்க்காமல் எப்போது பார்ப்பதாம்? என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்களாம்.
- தெ.சு.கவுதமன்