சிம்பு நமக்குச் சொல்லும் பாடம்!
ஹேப்பி பர்த்டே சிம்பு...

1999 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் - கே.எஸ்.ரவிக்குமாரின் பிரம்மாண்ட கூட்டணியில் வெளிவந்த படையப்பாவுடன் தான் என் படத்தை வெளியிடுவேன் என்று டி.ராஜேந்தர் பிடிவாதமாக வெளியிட்ட 'மோனிஷா என் மோனலிசா" வெளியானது. படம் தோல்விதான். ஆனாலும் கவனிக்கப்பட்ட ஒரே விஷயம், அதுவரை குழந்தை நட்சத்திரமாக மட்டும் சிம்புவைப் பார்த்த தமிழக மக்களுக்கு அந்தப் படத்தில் அவர் "மோனிஷா மோனிஷா" என்ற பாடலில் நடனம் ஆடி தனது இளைஞர் தோற்றத்தை வெளிப்படுத்தினார். 'எங்க வீட்டு வேலன்' படம் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்த சிம்பு என்கிற சிலம்பரசன் அடுத்தடுத்து தனது தந்தையின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். 2002 ஆம் ஆண்டு தனது தந்தையின் இயக்கத்தில் 'காதல் அழிவதில்லை' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிம்புவிற்கு 'ஓப்பனிங்' ஓரளவு இருந்தது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தவராகவே சிம்பு அறிமுகமானார். அனைவருக்கும் இது அமைவதில்லை. அதன் பின் குத்து, தம், அலை என்று படங்கள் சுமாரான போக்கில் ஓட முழு வெற்றி பெற தாமதமானது. 2004 ஆம் ஆண்டு வெளியான 'கோவில்' அதுவரை வந்த சிம்பு படங்களிலிருந்து மாறுபட்டிருந்தது. அந்த படம் ஓரளவு வெற்றியடைய தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்கத் தொடங்கினார் சிம்பு . அதே ஆண்டில் சிம்புவின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளிவந்த 'மன்மதன்' திரைப்படம் சிம்புவின் மார்க்கெட்டை மேலும் உயர்த்தியது.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்புவின் தன்னம்பிக்கை எகிறியது. ஆரம்பத்தில் 'மன்மதன்' படத்தின் விளம்பரங்களில் கதை, திரைக்கதை என்று சற்று சிறியதாக இருந்த சிம்புவின் பெயர் அந்தப்படத்தின் 175ஆம் நாள் விளம்பரத்தில் பெரிதானது. அடுத்த படங்களுக்கு சிம்புவின் அணுகுமுறைகள் சற்று மாறத்தொடங்கியது. மீண்டும் தானே இயக்கி நடித்த 'வல்லவன்' படத்தில் நயன்தாராவுடனான முதல் போஸ்டரிலேயே பிரச்சனை ஆரம்பமானது. நயன்தாராவுடனான காதலில் படம் மிகத் தாமதமாக வெளிவந்து ஓரளவு ஓடியது. அதுவரை நல்லபெயரை வாங்கி வந்த சிம்பு சர்ச்சை நாயகனாக உருவெடுக்கத்தொடங்கினார். அதுவரை ரஜினி ரசிகராகவே வெளிப்படுத்திக்கொண்ட சிம்பு, பின்னர் அஜித் ரசிகனாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். தனியார் தொலைக்காட்சி நடத்திய நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்தபொழுது 'ப்ரித்வி என்பவர் ஒழுங்காக ஆடவில்லை, எனக்கு பிடிக்கவில்லை' என்று கூறி "எனக்கு நடிக்கத் தெரியாதுங்க, எங்க அப்பா எனக்கு சொல்லிக் கொடுக்கலைங்க" என்று அவர் பேசியது அப்பொழுதே வைரல் ட்ரெண்ட் ஆனது. அதன் பின் சிம்பு என்றால் சர்ச்சை, சர்ச்சை என்றால் சிம்பு என்று ஆகிவிட்டது. இதனாலயே சிம்புவை வைத்து படம் எடுக்க இயக்குனர்களும் , தயாரிப்பாளர்களும் அணுகத் தயங்கினர்.

இந்த சூழலில் தான் "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தை சிம்புவை வைத்து கௌதம் மேனன் இயக்க படம் மாபெரும் வெற்றியடைந்தது. சிம்பு நடித்த படங்களிலே குறைவாய்ப் பேசியதும் அதிக வசூல் செய்ததும் இந்த படம்தான். இந்தப் படத்தின் வெற்றி சிம்புவிற்கு மைல்கல்லாக அமைந்தது. அதன் பின்னர் 'வானம்', 'ஒஸ்தி' என்று கதை தேர்விலும் சற்று கவனம் செலுத்தினார். படங்களின் வெற்றி தோல்வி மாறினாலும் கவனமாக இருந்த அவரின் வாழ்வில் அடுத்த திருப்பம் ஹன்சிகாவுடனான காதல். அவர்களின் காதல், காதல் தோல்வியெல்லாம் தாண்டி 2012 தீபாவளிக்கு வரவேண்டிய 'வாலு' படம் 2015ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. சிம்புவின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்தனர். ரிலீஸ் சமயத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு, அதற்கு விஜய் ஆதரவு கொடுத்து என படத்துக்கு நல்ல ஓப்பனிங் அமைந்தது. பின் ஹன்சிகாவுடனான காதல் தோல்வியடைய, மனமுடைந்த சிம்பு ஆன்மிக வழியில் சென்றார்.

பின் நடித்த 'இது நம்ம ஆளு' இயக்குனர் பாண்டிராஜின் புலம்பல் ட்வீட்கள் பிரபலம். அடுத்து சிம்புவை பெரியளவில் சர்ச்சையில் சிக்கவைத்தது அனிருத் இசையமைத்து சிம்பு பாடியதாக சொல்லப்பட்டு 'லீக்'கான பீப் சாங் . இதனை எதிர்த்து மாதர் சங்கம் சிம்புவிற்கு எதிராக குரல் கொடுக்க பின் அதற்கு மன்னிப்பு கேட்டு தப்பித்தார். சிம்புவை எப்பொழுதும் விட்டுக்கொடுக்காத நல்ல இயக்குனர் கௌதம் மேனன் மட்டுமே. அவரையும் வெறுப்பாகப் பேச வைத்து 'அச்சம் என்பது மடமையடா' அனுபவம். மேடையில் காதல் புலம்பல், நடிகர் சங்கத் தேர்தலை ஒட்டிய ஆவேசப் பேச்சு, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உணர்ச்சிவசம் என்று சிம்புவின் பிம்பம் ஒரு உணர்ச்சிகரமான இளைஞர், வெளிப்படையாகப் பேசுபவர் என்று பரவியது. 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படம் தோல்விப்படமாக அமைந்து தயாரிப்பாளர் 'சிம்புவால் எனக்கு எட்டு கோடி ருபாய் நஷ்டம். வாங்கி தாருங்கள், அவர் படப்பிடிப்புக்கும் வரவில்லை' என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். ஆனால் இவை பற்றியெல்லாம் சிம்பு சிறிதும் கவலையடையவில்லை. அவரது இசையில் வெளியான 'சக்க போடு போடு ராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பெரும் ரசிகர் கூட்டம் கூடியது. அனைவரும் 'டீன்' வயதினர். காதல் தோல்வி, வெளிப்படை பேச்சு, மற்றவர்கள் சதி, சமூக அக்கறை என்று சிம்பு தங்கள் பிரதிநிதி என்று நினைப்பவர்கள். அவர்களுக்குத் தெரியாது, சிம்பு வேறென்று.

இசை, பாடல், நடிப்பு, தோற்றம், இயக்கம் என சிம்புவின் திறமைகள், ப்ளஸ்கள் யாராலும் மறுக்க முடியாதது. அவரது சமகால போட்டியாளராகக் கருதப்படும் தனுஷுக்கு எளிதில் கிடைக்காதது. ரசிகர் பட்டாளமும் சிம்புவுக்கு உண்டு. இத்தனை பிரச்சனைகள் தாண்டியும் அவருக்கு கூட்டம் கூடுகிறது, மணிரத்னம் படம் கிடைக்கிறது. அவரது பிரச்சனை ஒன்று தான், 'தான் நினைப்பதும், தனது பிரச்சனைகளும் தான் உலகத்துக்கானது' என்ற எண்ணம் தான் அது. அவரது பேச்சுகளில் இதை உணரலாம். எல்லாவற்றையும் தாண்டி சிம்புவின் திறமை இன்றும் மதிக்கப்படுகிறது, வாய்ப்பிருக்கிறது. எத்தனையோ பேருக்குக் கிடைக்காதது அது. அவரும் அதை உணர்ந்து வந்தால்... வெல்கம் பேக் சிம்பு. இப்பொழுது ஹேப்பி பர்த்டே சிம்பு...
ஹரிஹரசுதன்