92 வயதில் உலகின் மிக வயதான பிரதமராக உலக சாதனை படைத்து பதவியேற்றிருக்கிறார் மகாதீர் முகமது. சீரழிந்த மலேசியாவை சீரமைக்க மகாதீரை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது.
இப்போதை ஆளுங்கட்சிதான் மகாதீரின் கட்சியும். ஆனால், இன்றைய பிரதமர் நஜீப்பும் அவருடைய மனைவியும் மலேசியாவை சின்னாபின்னப் படுத்திவிட்டதாக மக்கள் கொந்தளித்திருந்தனர்.
குறிப்பாக நஜீப்பின் மனைவி ரோஸ்மா மன்சோர் 7 பில்லியன் டாலர் அளவுக்கு கொள்ளையடித்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் உத்தரவின் பேரில் நடைபெற்ற கொலைகளுக்கு கணக்கே இல்லை என்கிறார்கள். மலேசியாவின் தொழில்களை நாசப்படுத்தி, மக்களை வாட்டும் பல முடிவுகளை எடுக்க காரணமாக இருந்திருக்கிறார். மலேசியா முழுவதும் சாலைகளில் டோல்கேட்டுகளை அமைத்திருக்கிறார்கள். 7 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் விலை 2.20 வெள்ளிக்கு விற்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் 40 ரூபாய் ஆகும்.
நஜீப் தலைமையிலான இந்த அட்டூழிய ஆட்சிக்கு முடிவுகட்ட எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தன. அவை தங்களுக்கு தலைமையேற்று மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் முன்னாள் பிரதமர் மகாதீரை தேர்வு செய்தனர். சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் அன்வரின் மனைவி, மகள் ஆகியோரும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
உலகமயக் கொள்கைகள் அமலான சமயத்தில் ஆசிய நாடுகள் பல பொருளாதார சீரழிவைச் சந்தித்தன. அந்தச் சமயத்தில் பிரதமர் மகாதீர் மலேசியாவை சீரழிவில் இருந்து காப்பாற்றினார். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தப்பின.
ஆனால், இப்போது அதைக்காட்டிலும் மிகப்பெரிய சீரழிவை மலேசியா சந்திக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு வழிகாட்ட மகாதீர் வந்திருக்கிறார். அவர் பிரதமராக பொறுப்பேற்றாலும் எதிர்க்கட்சிகளுக்கு மிகச்சிறந்த ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.
“நாம் மக்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். எனக்கு 92 வயது ஆவதால் அதிக நேரம் உழைக்க முடியாது. 100 நாட்கள் தினமும் அமைச்சரவை கூட வேண்டும். நான் 15 முதல் 20 நிமிடங்கள் அதில் பங்கேற்பேன். சின்னதாய் அமைச்சரவை இருக்க வேண்டும். இளைஞர்கள்தான் முக்கிய பங்கு வகிக்கவேண்டும். முதலில் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறு அளித்தபடி பெட்ரோல் விலையை 2.20 வெள்ளி என்பதிலிருந்து 1.5 வெள்ளியாக குறைக்க வேண்டும். இதன்மூலம் மலேசியாவில் தற்போது இந்திய மதிப்பில் 40 ரூபாயக இருக்கும் பெட்ரோல், 22 ரூபாயாக குறையும். அதுபோல நஜீப் அரசு விதித்த 7 சதவீத ஜிஎஸ்டியை முற்றாக ரத்து செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு சுமையாக இருக்கும் டோல்கேட்டுகளை மூட வேண்டும்” என்றெல்லாம் மகாதீர் யோசனை தெரிவித்திருக்கிறார்.
இதற்கு அனைத்துக் கட்சிகளும் முழமனதுடன் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனிடையே, தேர்தல் முடிவு வெளிவந்தவுடன், முன்னாள் பிரதமர் அன்வருக்கு பொதுமன்னிப்பு வழங்கி சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மன்னரிடம் கோரிக்கை விடுத்தனர். மன்னர் அதை ஏற்றுக்கொண்டார். இயல்பாகவே அன்வர் தண்டனை முடிந்து ஜூன் 8 ஆம் தேதி விடுதலையாகிறார்.
அன்வர் விடுதலையானால் ஏதேனும் காலியாக உள்ள தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆவார் என்று கூறப்படுகிறது. அப்படி ஆனால், மகாதீர் விலகி அன்வர் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மூன்று மலேசியர், மூன்று தமிழர், மூன்று சீனர் அடங்கிய அமைச்சரவையை மகாதீர் அமைத்திருக்கிறார். இதில் அன்வரின் மனைவி வான் அஜிஷா துணை பிரதமராக இருக்கிறார். மகாதீரிடம் நிதித்துறை இருக்கிறது. சீனர் ஒருவரிடம் பாதுகாப்புத்துறை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
அமைச்சரவையில் பேசிய மகாதீர், “எனக்கு வயதாகிவிட்டது. இளைஞர்கள்தான் பொறுப்பாக செயல்பட வேண்டும். எனக்கு எந்த நேரத்திலும் எதுவும் நேரலாம். முடிந்த அளவுக்கு என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.
நஜீப் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று மகாதீரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மகாதீர், உரிய புகார்கள் கிடைத்தால், ஆதாரங்கள் கிடைத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இதனிடையே, தேர்தல் முடிந்தவுடன், முன்னாள் பிரதமர் நஜீப் தனது குடும்பத்துடன் ஜகார்தாவுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார் என்ற செய்தி பரவியது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ஓய்வுக்காக செல்வதாக தெரிவித்தார்.