கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடுநிலை என்ற கொள்கையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது மக்கள் நீதி மய்யம். அந்தக் கட்சி தனது 125 நாளில் வெளியிட்ட பாடல் தொகுப்புதான் ‘இது நம்மவர் படை’.
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ‘இது நம்மவர் படை’ என்ற பெயரில் நேற்று கட்சிப் பாடல்கள் வெளியிடப்பட்டன. மொத்தம் ஆறு பாடல்கள் வெளியிடப்பட்டன. இதற்கு இசை தாஜ் நூர், பாடல்வரிகள் சினேகன். படை படை படை இது நம்மவர் படை, தமிழ்நாட்டு தலையெழுத்து, மய்யம் மக்கள் நீதி மய்யம், ஆளவந்தான் ஆளவாரான், எனக்குள் ஒருவன், நாட்டு நடப்பு சரியில்லடா இப்படியாக தொடங்குகிறது பாடல்கள். இந்த ஆறு பாடல்களில் மூன்று பாடல்கள் கமலை மையப்படுத்தியே உள்ளது. ட்ரெண்ட் மியூசிக்கில் பாடல்கள் வெளியாகியுள்ளன.
தான் பேசும் அனைத்து கூட்டங்களிலும் ஊழல், தேசியம், வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது போன்றவற்றை மறக்காமல் பேசுவார். அதுபோலவே இந்த பாடல்களிலும் ஊழல், தேசியம், பகுத்தறிவு, அகிம்சை, மக்களாட்சி, சமய வேறுபாடுகளை கலையவேண்டும், அரசியல்வாதிகளின் செயல்முறை போன்றவற்றை பற்றி பேசியிருக்கிறது. மேலும் காந்தி, சுபாஸ் சந்திர போஸ், விவேகானந்தர், பாரதியார், எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களையும் இப்பாடல்கள் பேசியிருக்கின்றன. தான் நடித்த படங்களின் தலைப்புகளை வைத்து பல வரிகள் வருகின்றன.
பாழடைந்த பகுத்தறிவை பழுதுநீக்கும் மய்யம் என வரிகள் அமைந்திருப்பது சிறப்பானது என்றாலும், அந்தப் பகுத்தறிவின் அடையாளமாக இன்றும் திகழும் பெரியாரை பாடல்களில் எங்கும் குறிப்பிடாதது ஏன் என்பது மக்கள் நீதி மய்யத்திற்குதான் தெரியும். கட்சி தொடங்கி 100 நாட்கள் முடிவடைவதற்குள் கட்சியின் கொள்கைகள் புத்தகமாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டும் வெளிவரவில்லை என்பதும், இன்னும் அதிகாரப்பூர்வ கட்சியாக அறிவிக்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.