-கதறும் நோயாளிகள்!
""ஹலோ நக்கீரன்ங்களா? நாங்க சென்னை அயனாவரத்துல இருக்கிற கீழ்ப்பாக்கம் மெண்டல் ஹாஸ்பிட்டலிலிருந்து பேசுறோம்.… மனநலம் பாதிக்கப்பட்டு வர்ற நோயாளிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டா எந்த ட்ரீட்மெண்டும் கொடுக்கமாட்டேங்குறாங்க. அதைவிடக் கொடுமை… மருத்துவமனையில நடக்குற பிரச்சனைகளை புகார் கொடுத்தா நடவடிக்கை எடுக்கவேண்டிய இயக்குனர் டாக்டர் சாந்திநம்பியே அடியாட்களை செட் பண்ணி வெச்சுக்கிட்டு நோயாளிகளை அடிச்சுக் கொடுமைப்படுத்துறாங்க''’என்கிற பகீர்த் தகவல்கள் நமது அலுவலகத்துக்கு புகாராக வர...…நோயாளிகளின் உறவினர்களில் ஒருவராக உள்ளே நுழைந்து விசாரித்தோம்.
மனநலத்துக்கு மட்டும்தான் ட்ரீட்மெண்ட்!
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த நோயாளி விக்டர் அருள்ராஜின் மனைவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)விடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது, “""தமிழ்நாட்டிலேயே கீழ்ப்பாக்கம் அரசு மெண்டல் ஹாஸ்பிட்டல்தான் ஃபேமஸ். டாக்டர்களும் நர்ஸுகளும் உண்மையிலேயே நல்லபடியாக மனப்பிரச்சனைகளுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணி அனுப்புறாங்க. அந்த நம்பிக்கையிலதான் இங்க கொண்டுவந்து அட்மிட் பண்ணினோம். என் கணவருக்கு பி.பி., ஷுகர் அதிகமாகி கால் பயங்கரமா வீங்கிடுச்சி. அவருக்கு மனரீதியா பிரச்சனை ஏற்பட்டதால ஒரு இடத்துல உட்காரமாட்டாரு. நடந்துக்கிட்டே இருப்பாரு. பிறர் சொல்றதை அவரால உள்வாங்கிக்க முடியாது. ஜுரமும் அதிகமாகி வலியால துடிக்க ஆரம்பிச்சுட்டாரு. ஏதாவது ட்ரீட்மெண்ட் பண்ணுங்கய்யான்னு கெஞ்சினேன். "மனநலத்துக்கு மட்டும்தான் இங்க ட்ரீட்மெண்ட்.… உடல்நலத்துக்கு சென்னை சென்ட்ரலிலுள்ள அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கூட்டிக்கிட்டுப்போங்க'ன்னு சொல்லிட்டாங்க. இப்படிப்பட்ட ஒருத்தரை ஜி.ஹெச்சுக்கு கூட்டிக்கிட்டுப் போக ஆம்புலன்ஸோ வார்டுபாய்களையோ அனுப்பி வைக்கல. வேற வழியில்லாம… பஸ்ஸுல கூட்டிக்கிட்டுப் போறதுக்குள்ள நான் பட்டபாடு கொஞ்சநஞ்சமில்லீங்க.
மனநோயாளிகளை அனுமதிக்காத ஜி.ஹெச்.!
அங்க கெஞ்சிக் கூத்தாடி அட்மிஷன் போட்டு கால்வீக்கம் குறையாமலேயே டிஸ்ஜார்ஜ் ஆகி, மெண்டல் ஹாஸ்பிட்டலுக்கு வந்தா… "மூணு நாள் கழிச்சு வர்றீங்க;…அதனால, முதலிலிருந்துதான் அட்மிஷன் போடமுடியும்'னு அலைக்கழிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எல்லா நோயாளிகளுக்கும் இதே நிலைமைதான். கூட வர்றவங்களையும் மனநோயாளிகளாக்கிடுவாங்க போலிருக்குன்னு நொந்துக்கிட்டு கணவருடனேயே இருந்தேன்.
இயக்குனரின் அடியாள் அட்டகாசம்!
இங்க இருக்கிற நோயாளிகளை அடிச்சு உதைக்கிறதுக்குன்னே பாஸ்கர்னு ஒரு அடியாள் இருக்கான். என் கணவர் மன அழுத்தத்தால பாதிக்கப்பட்டதால தேவையில்லாம பேசிக்கிட்டே இருப்பாரு. "என்னக்கா… உன் புருஷன் ஓவரா பண்றான்... ஒரு காட்டு காட்டட்டா'ன்னு கேட்டான். "அவருக்கு ஷுகர், பி.பி., ஹெர்ணியா ஆபரேஷன்லாம் பண்ணியிருக்கு... அடிக்காத தம்பி'ன்னு சொல்லியும் அவரைப்போட்டு செம அடி அடிச்சுட்டான். இன்னொரு நாள், ஒரு பேஷண்டை கட்டிப்போட்டிருந்தாங்க... அவரு வலியில துடிச்சதால என் கணவர் போயி கட்டை அவுத்து விட்டுட்டாரு. அதுக்காக, 49 வயசு ஆகுற என் கணவரை பட்டப்பகலில் போட்டு அடிச்சு உதைச்சான் பாருங்க அந்த பாஸ்கர்...… அய்யோ இன்னும் கொஞ்சம் இருந்திருந்தா என் கணவரை உசுரோட பார்த்திருக்க முடியாது. வார்டன்கள், வார்டுபாய்கள் அத்தனை பேரும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தாங்க''’என்ற கவிதா,…25 வயது மதிக்கத்தக்க இளைஞன் பாஸ்கரை நம்மிடம் காண்பித்தார். “
""பேஷண்டுகளை இப்படியா அடிச்சு உதைப்பீங்க? அவங்க என்ன சுய நினைவோடவா அப்படி நடந்துக்கிறாங்க?''’’என்று நாம் கேட்டபோது... “""காலையில போலீஸு வந்து விசாரணை பண்ணினாங்க. இனிமே யாரையும் அடிக்கமாட்டேண்ணா. நான் ஒரு பிரைவேட் கேர்டேக்கர். மருத்துவமனையோட டைரக்டர் சாந்திமேடமும் அவங்களோட கணவர் டாக்டர் நம்பி சாரும் என்னை இங்க தங்க வெச்சிருக்காங்கண்ணா''’’என்று உண்மையை போட்டுடைக்க...… நாம், சீக்ரெட் கேமரா மூலம் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டோம். “
தனி வருமானம்!
""நடவடிக்கை எடுக்கவேண்டிய இயக்குனர் டாக்டர் சாந்தி, ஆழ்வார்பேட்டையில இருக்கிற அவங்களோட சொந்த க்ளினிக்குக்கு வர்ற நோயாளிகளை அக்கறையா பார்த்து வருமானத்தைக் கவனிக்கிறாங்க. இங்க என்ன நடந்தாலும் அவங்களை தொடர்புகொள்ளவே முடியாது'' என்று குற்றம்சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து, விளக்கம் கேட்க பலமுறை டாக்டர் சாந்தி நம்பியை தொடர்புகொண்ட போதும், ""க்ளினிக்குல இருக்கிறேன்... இப்போதைக்கு பேச முடியாது''’’என்று நாம் கேட்க வந்ததைக்கூட காதில் வாங்கிக்கொள்ளாமல் போனை துண்டித்துக்கொண்டே இருந்தவர்,… நமது இதழ் அச்சிற்கு செல்லும்வரை நம்மை தொடர்புகொள்ளவேயில்லை.
குழந்தைகளைப்போல பாதுகாக்கவேண்டிய மனநோயாளிகளுக்கு டாக்டர்கள்தான் கடவுளர்கள். கடவுளே கைவிட்ட குழந்தைகளை, சுகாதாரத்துறை அமைச்சரும் செயலரும்தான் காப்பாற்ற வேண்டும்!
-மனோசௌந்தர்
படங்கள்: எஸ்.பி.சுந்தர்