2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் காலைப் பொழுது தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நகருக்கு ஒரு கொடும் நாளாக அமையப்போகிறது என்பதை யாரும் அறிந்திடாமல் விடிந்தது. கும்பகோணம் நகரில் இயங்கி வந்த ஒரு ஆரம்பப் பள்ளியில் எந்த பாவமும் அறியாத 94 பிஞ்சுக் குழந்தைகள் தீயில் கருகி சாம்பல் ஆனார்கள்.
கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, சரஸ்வதி மழலையர் பள்ளி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி என மூன்று பள்ளிகளும் ஒரே கட்டடத்தின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் இயங்கி வந்தன. 2004 இல் இந்த மூன்று பள்ளிகளிலும் சேர்த்து மொத்தமாய் 782 குழந்தைகள் படித்து வந்தார்கள். இந்த பள்ளி வளாகம் குடியிருப்பு பகுதியில் இருந்ததால் மிகுந்த இட நெருக்கடி உள்ள இடமாக அது இருந்திருக்கிறது.
பள்ளியின் வகுப்பறைகள் சரியான காற்றோட்ட வசதி இல்லாமலும், வகுப்பறைகளுக்கு செல்லும் மாடிப்படிகள் மிக குறுகியதாகவும் குழந்தைகள் எளிதாக ஏறி இறங்க முடியாத வகையிலும் இருந்தன. வகுப்பறைகள் தனித்தனியாக பிரிக்கப்படாமல் ஒரு நீண்ட அறைக்குள் பல வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் அடுத்தடுத்து அமர வைக்கப்பட்டிருந்தனர் என்பது இந்தச் சம்பவத்தில் மிகக் கொடுமையான விஷயம். வகுப்பறைக்கு மிக அருகில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை தயாரிக்கும் சமையல் கூடமும் இருந்து வந்தது.
2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு அந்த பள்ளியின் வகுப்பறைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கிக் கொண்டு இருந்தன. அன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் பள்ளிக்கு சற்று தொலைவில் இருக்கும் ஒரு கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிருந்தது. இதனை கேள்விப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கோவிலுக்கு சென்று வரலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை சொல்லிக் கொடுக்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். அதன் காரணமாக, தாங்கள் இல்லாத நேரத்தில் குழந்தைகள் வெளியில் வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் வகுப்பறையின் கதவுகளை குழந்தைகள் வெளியில் வர முடியாதபடி நன்றாகப் பூட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறைகளில் இருந்த அந்த குழந்தைகள் பூட்டிய வகுப்பறைக்குள் அடுத்து நடக்கப் போகும் பயங்கரத்தை அறியாதவர்களாய் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் மாடிகளில் இயங்கி வந்த அந்த வகுப்பறைக்கு நேர் கீழே இருந்த சமையல் அறையில் ‘திகு திகுவென’ தீ பற்றி எரியத் துவங்கியது. அங்கு சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த சமையல்காரர் வசந்தி, அப்போது அருகில் இருந்த அவரின் வீட்டிற்கு சென்று இருந்ததால் நெருப்பை அணைக்கவோ அல்லது அதைக் கட்டுப்படுத்தவோ யாரும் இல்லாத சூழலில் கட்டுப்பாடற்று எரிந்த தீ, எல்லா பக்கங்களிலும் பரவி மேல் மாடியில் பூட்டப்பட்ட வகுப்பறை வரை பற்றி எரிந்தது.
பூட்டப்பட்ட அந்த வகுப்பறையின் மேற்கூரை ஓலை கூரைகளால் வேயப்பட்டிருந்ததால் கீழே எரிந்த தீ மிக வேகமாக மேலே பரவியது. தீ எரிவதை பார்த்த ஒரு மாணவி அதை தன் வகுப்பில் இருந்த ஆசிரியரிடம் சொல்ல, அந்த ஆசிரியை உடனே எல்லோருக்கும் தகவல் சொல்லி குழந்தைகளை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால், அதற்குள் கடுமையாக பரவிய தீயால், பள்ளிக் கட்டடம் முழுவதும் கரும் புகை பரவியது. இதனால், வகுப்பறைகளில் சிக்கிக்கொண்ட குழந்தைகள் எப்படி எந்த வழியில் வெளியேறுவது என்று தெரியாமல் தடுமாறினார்கள்.
அதையும் தாண்டி தப்பித்து வெளியேறிய குழந்தைகள் பள்ளி கட்டடத்தின் குறுகிய மாடிப்படிகளில் இறங்கி வர முடியாமல் நெரிசலில் சிக்கினர். இதனால் தீயில் சிக்கிக்கொண்ட குழந்தைகளின் அலறலும், நெரிசலில் சிக்கிக்கொண்ட குழந்தைகளின் அலறலும் சேர்ந்து அந்த பகுதியே போர்க்களம் போல் மாறியது. குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பள்ளியின் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு நெருப்பின் வெம்மையும், கரும்புகையும் பள்ளி வளாகத்திற்குள் பரவி இருந்தது. ஆனாலும் அதையும் மீறி சில பொதுமக்கள் குழந்தைகளை அந்த பெரும் தீயில் இருந்து காப்பாற்றி மீட்டு எடுத்து வந்தனர்.
அப்படி காப்பாற்றப்பட்ட குழந்தைகள் கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இந்த நேரத்தில் கும்பகோணம் தீயணைப்புத் துறைக்கு தகவல் சொல்லப்பட, விரைந்து வந்த தீயணைப்புத் துறை தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அவ்வளவு பெரிய தீயை கட்டுப்படுத்தும் வசதிகள் அப்போது அவர்களிடம் இல்லாததால் தீயை அணைப்பது அவர்களுக்கு கடும் சவாலாக இருந்திருக்கிறது.
எப்படியோ ஒருவழியாக அந்த தீயை அணைத்து முடித்த பிறகுதான், பள்ளியின் இரண்டாவது மாடியில் ஓலையால் வேயப்பட்ட, பூட்டிய வகுப்பறைகளுக்குள் சிக்கிக்கொண்ட அத்தனை குழந்தைகள் வெளியில் வர முடியாமல், பற்றி எரிந்த அந்த தீயின் கோரத் தாண்டவத்தில் ஒரு குழந்தை கூட உயிர் தப்பாமல் கருகி சாம்பலாகி நெருப்புக்கு இரையாகினர் எனும் நெஞ்சை வெடிக்கச் செய்யும் செய்தி எல்லோருக்கும் தெரிய வந்தது.
‘நாங்கள் எஞ்சினியர்கள் ஆக போகிறோம்... நாங்கள் டாக்டர்கள் ஆகப் போகிறோம்’ என்கிற ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு காலையில் பள்ளிக்கு கிளம்பிய அந்த பிஞ்சு மலர்கள், அந்த பெரும் தீயின் கொடும் நாவுகளுக்கு இரையாகி கரிக்கட்டைகளாக கிடந்தது இந்த உலகில் வேறெங்கும் நடக்காத கொடுமையாக காண்பவர்களின் நெஞ்சை கலங்கச் செய்தது.
ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் தீப்பற்றி எரிகிறது என்பதை கேள்விப்பட்ட அந்த பள்ளியில் படித்த குழந்தைகளின் பெற்றோர்கள் பதறி அடித்து பள்ளிக்கூடத்தை நோக்கி ஓடி வந்தனர். அப்படி ஓடி வந்த பெற்றோர்களுக்கு தங்களின் குழந்தை உயிரோடு இருக்கிறதா இல்லையா என்று கூட தெரிந்து கொள்ள முடியவில்லை என்பதால் பள்ளிக்கூட வாசலில் நின்று கதறித் துடித்தனர்.
ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் நடந்த அந்த பயங்கர தீ விபத்து சம்பவம் நாடு முழுவதும் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆறுதலும் ஆதரவும் தந்தார்கள். பல அரசியல் கட்சித் தலைவர்கள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்கள். அப்போது கும்பகோணத்தில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித் தகவல் அறிந்ததும் நேரடியாக அந்த பள்ளிக்கு சென்று பார்வையிட்டார்.
இத்தீவிபத்தைப் பற்றி விசாரிக்க 2004 ஆம் ஆண்டு நீதிபதி சம்பத் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு அந்த கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையின்படி, அன்றைய தமிழக அரசால் சில அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. அதன்படி பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு வரைபட அனுமதியை உரிய அலுவலரிடம் முறையாகப் பெற வேண்டும். பள்ளி கட்டடத்தின் மேற்கூரைக்கு செல்லும் வழி மூடப்பட்டிருக்க வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். 20 மாணவர்களுக்கு ஒரு குடிநீர் குழாய் இருக்க வேண்டும். 20 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும். பள்ளி மற்றும் அதிகம் பேர் கூடும் இடங்களில் ஓலை கூரையால் மேற்கூரை அமைப்பதற்கு தடை போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன.
இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயமுற்றவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கியது. இந்த விபத்து குறித்து விசாரித்த நீதிபதி சம்பத் கமிஷன், இவ்விபத்துக்கு முற்றிலும் அரசு அதிகாரிகள்தான் பொறுப்பு என்று தெரிவித்து இருந்தது. அந்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வந்தபோது, ஏற்கெனவே ₹ 1 லட்சம் வழங்கப்பட்டுவிட்டது என்றும் அதற்கு மேல் வழங்க முடியாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து வழக்கில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பிரபாகரன் என்பவர் அப்ரூவராக மாறினார். இந்த வழக்கில் 488 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு 3,126 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 60 ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணை கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதற்கு பிறகு சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து 2012 ஆம் ஆண்டு தொடங்கிய அந்த வழக்கின் விசாரணை, சுமார் 22 மாத கால விசாரணைக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
விசாரணையின் முடிவில் பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது. மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாலாஜி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதித்து தஞ்சை நீதிமன்ற நீதிபதி முகமது அலி தீர்ப்பு வழங்கினார்.
பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை தவிர 51,65,700 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 50,000 ரூபாய் அபராதமும், கல்வித் துறை அதிகாரிகள் நான்கு பேருக்கு தலா 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையில் இருந்து இறந்த குழந்தைகள் குடும்பத்தினர், காயமடைந்த குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமெனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பின் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் பள்ளியின் தாளாளர் புலவர் பழனிச்சாமிக்கு 940 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய நீதித்துறை வரலாற்றில் குற்றவாளி ஒருவருக்கு இவ்வளவு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது இந்த வழக்காகத்தான் இருக்க முடியும்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தண்டனை பெற்றவர்கள் முறையீடு செய்தனர். 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து காவல்துறை சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணா, வி.எம்.வேலுமணி ஆகியோர், 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓர் பரபரப்பான தீர்ப்பை வழங்கினர். அந்தத் தீர்ப்பின்படி, பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை வெறும் சிறைத்தண்டனையாக மாற்றியமைக்கப்பட்டது. அவர் சிறையிலிருந்த காலத்தையே தண்டனைக் காலமாக ஏற்பதாகவும் அபராதத் தொகை 1 லட்சத்து 15 ஆயிரமாக குறைக்கப்படுவதாகவும் அறிவித்தனர்.
மேலும் சமையல்காரர் வசந்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் அவர் சிறையில் இருந்த காலமே தண்டனையாகக் கருதப்படும் என்றும் சாந்தலட்சுமி, விஜயலட்சுமி, பாலாஜி, தாண்டவன், துரைராஜ், சிவப்பிரகாசம், ஜெயச்சந்திரன் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பள்ளி தாளாளர் சரஸ்வதி அப்போது உயிரிழந்துவிட்டதால் வழக்கிலிருந்து அவரும் விடுவிக்கப்பட்டார்.
சம்பவம் நடந்தது 2004 ஆம் ஆண்டு என்றாலும் 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தஞ்சை மாவட்ட நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு சிறை சென்ற குற்றவாளிகள் அனைவரும் வெறும் மூன்றாண்டு கால சிறைத்தண்டனைக்கு பிறகு விடுதலை ஆகி வெளியே வந்தது பல தரப்பிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்கள் தரப்பு இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அரசு இதை மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஆனால், வழக்கு அதற்கு பிறகு மேல்முறையீடு செய்யப்படவில்லை என்பதுதான் கள எதார்த்தம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16 ஆம் நாள் தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த அந்த பெற்றோர்கள் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள அந்த பள்ளியின் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் இறந்து போன அந்த 94 குழந்தைகளின் புகைப்படங்களின் முன்பாக கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துவதை தற்போது வரை வழக்கமாக செய்து வருகின்றனர்.
வீடியோவாக காண: