2000 ரூபாய் நோட்டுகள் வரும் காலத்தில் செல்லாது என்கிற மத்திய அரசின் அறிவிப்பு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். ஆனால், பல இடங்களில் இப்போதே 2000 ரூபாய் நோட்டுகளை யாரும் வாங்குவதில்லை. இந்த நடவடிக்கைக்கு அவர்கள் அளித்திருக்கும் விளக்கம் திருப்தி அளிப்பதாக இல்லை. இந்தப் பணத்தை மாற்றுவதிலும் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன. மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை தங்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய தோல்வி. சாமானிய மக்களின் மீது அரசாங்கம் தொடுத்த தாக்குதல் அது. அப்போது பல சாமானிய மக்கள் உயிரிழக்க நேரிட்டது. கருப்புப் பணத்தை ஒழிக்கிறோம் என்று இவர்கள் சொன்ன அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. அதற்கான எந்த நடவடிக்கையையும் இவர்கள் எடுக்கவே இல்லை. மற்ற விஷயங்கள் அனைத்திற்கும் பல்வேறு விளம்பரங்கள் கொடுப்பவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தங்களுடைய சாதனை என்று கூறி ஒரு விளம்பரம் கொடுக்க முடியுமா? பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரிசர்வ் வங்கிக்கு 30,000 கோடி இழப்பு ஏற்பட்டது என்றனர். இதுபோன்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை இவர்கள் மீண்டும் மீண்டும் செய்வார்களோ என்கிற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நம் நாட்டின் பணத்துக்கு வெளிநாட்டில் மரியாதையே இல்லாமல் போனது பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் தான். ஒரு அரசாங்கம் இப்படி நடந்துகொள்ளக் கூடாது. மெதுவாகச் செய்ய வேண்டிய நடவடிக்கையை இவர்கள் இவ்வளவு விரைவாகச் செய்கின்றனர். இதனால் ரிசர்வ் வங்கியின் மீதான நம்பகத்தன்மையும் கெடுகிறது. அவர்களுடைய நம்பகத்தன்மையை அவர்கள் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.