ஓபிஎஸ் இல்லாமல் சின்னம் கிடைத்திருக்குமா? வெடிக்கிறது அதிருப்தி!

இரட்டை இலை மீட்பு....
மாபெரும் கொண்டாட்டமாம்....
முப்பெரும் விழாவாம்.....
கட்சி கொடி ஏற்றுவார்களாம்......
*மாண்புமிகு அமைச்சர் அறிவிப்பு.....
“யாருக்கும் அழைப்பும் இல்லை தகவலும் இல்லை,
தலைவர்கள் உட்பட.....”
.....மனங்கள் உருண்டுகொண்டு தான் இருக்கும் போல....

சமீபத்தில் மைத்ரேயன் தனது பேஸ்புக் பக்கத்தில், ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணி இணைந்து மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?.. என குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ஆஸ்பயர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.

ட்விட்டரில் பதிவு செய்தது குறித்து நக்கீரன் இணையதளத்துக்கு ஆஸ்பயர் சுவாமிநாதன் அளித்த பேட்டி:-
உங்களைப்போன்றே மைத்ரேயன் கூறியதற்கு தம்பிதுரை உள்ளிட்டவர்கள் அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறியிருந்தார்களே...?
நான் பதிவிட்டது தனிப்பட்ட கருத்து அல்ல. அடிமட்டத்தில் இருக்கும் தொண்டர்கள் ஒவ்வொருவரின் மனதில் இருக்கும் கருத்து. இரட்டை இலை சின்னம் கிடைத்தவுடன் நடக்கும் கட்சியின் மிகப்பெரிய முப்பெரும் விழா. கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தகவலும் இல்லை. அழைப்பும் இல்லை. கலந்துகொள்ளவும் இல்லை.
இதேபோல் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அவைத்தலைவர் மதுசூதனனுக்கும் அழைப்பு கிடையாது. பிறகு எதற்கு முப்பெரும் விழா. சின்னம் கொடுக்கப்பட்டது மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களால்தான். அப்படியிருக்கும் பட்சத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகவல் இல்லாமல், அழைப்பு இல்லாமல், போஸ்டரில் பெயரும் இல்லாமல் முப்பெரும் விழா நடத்துவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இது மிகப்பெரிய தாக்கத்தை தொண்டர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலில் மதுசூதனன் வேட்பாளராக நிறுத்த எதிர்ப்பு இருக்கிறதாமே..?
அதைப்பற்றி எனக்கு தெரியாது. கழக ஆட்சி மன்றக் குழு கூடி முடிவு எடுக்கும் என கூறினார்.
மைத்ரேயனும் முப்பெரும் விழாவுக்கு ஓ.பி.எஸ். அணியினருக்கு அழைப்பு விடுக்காதற்கு அந்த விழாவினை ஏற்பாடு செய்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்பயர் சுவாமிநாதன் அதிமுக தொழில்நுட்ப பிரிவு முன்னாள் செயலாளர் ஆவார். இவர், ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டபோது அவருக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியவர். அப்போது ‘அம்மா கல்வியகம்’ இணையதளத்தை உருவாக்கி, ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் இந்த இணையதள தொடக்க விழாவை நடத்தினார்.
-வே.ராஜவேல்