கர்நாடக அரசியல் சூழலின் அரிச்சுவடி அறிந்த யாருக்கும் தெரியும், அம்மாநிலத் தேர்தலில் லிங்காயத்துகள், ஒக்கலிகர்களின் ஆதரவு முக்கியம் என்று. கடந்த தேர்தலில் பா.ஜ.க. நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வெல்ல எடியூரப்பாவும் அவர் சார்ந்த லிங்காயத்து சமூகமும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
இந்தத் தேர்தலில் பா.ஜ.க. அணியின் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா இல்லாவிட்டாலும், கட்சிக்கு ஆதரவாக லிங்காயத்துகளின் வாக்குகளைத் திரட்டித் தர எடியூரப்பாவை தம் வசமே வைத்திருக்கிறது பா.ஜ.க. ஆனால் அதன் வேட்பாளர்கள் பட்டியலில் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு இடமளிக்க மறுத்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடகாவின் வட பகுதிகளில் பா.ஜ.க.வை வளர்த்தெடுத்தவர். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரரான ஷெட்டர், அதிருப்தியில் காங்கிரஸில் சேர்ந்து போட்டியிடுவது பா.ஜ.க.வுக்கு பலமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஜெகதீஷ் ஷெட்டர் ஆறு முறை நின்று வென்ற ஹூப்ளி தார்வாட் தொகுதியை காங்கிரஸ் அவருக்கு அளித்திருக்கிறது. ஷெட்டருக்கு இடம் தராததின் விளைவாக, இந்த ஒரு தொகுதியை மட்டுமின்றி இந்த வட்டாரத்தில் 20 முதல் 25 தொகுதிகளை பா.ஜ.க. இழக்கும் என ஒருசில கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப ஷெட்டருக்கு ஆதரவாக 16 கவுன்சிலர்களும், பா.ஜ.க. கட்சிப் பொறுப்பிலுள்ள 50 நபர்களும் தம் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
ஷெட்டர், பா.ஜ.க.வில் இடம் கிடைக்காமல் போன ஒரே லிங்காயத் தலைவரல்ல. கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வரான லட்சுமண் சவாதியும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். இன்னொரு கர்நாடக முன்னாள் துணை முதல்வரான கே.எஸ். ஈஸ்வரப்பாவுக்கும் சீட் கொடுக்கப்படவில்லை. இவரும் லிங்காயத்துதான். ஆனால், ஈஸ்வரப்பா காங்கிரஸுக்கு மாறவோ, சுயேட்சையாகப் போட்டியிடவோ இல்லை. கட்சியின் முடிவை ஏற்றுக்கொண்டார்.
இப்படி பெருவாரியாக லிங்காயத் பெருந்தலைவர்களைப் புறந்தள்ளும் பா.ஜ.க. முடிவு குறித்து விளக்கும் அரசியல் நிபுணர்கள், “சில குறிப்பிட்ட தலைவர்கள் மட்டுமே பா.ஜ.க.வில் கோலோச்சுவதை அக்கட்சி விரும்பவில்லை. எடியூரப்பா இல்லையென்றாலோ, ஷெட்டர் இல்லையென்றாலோ கட்சி ஜெயிக்காது என்பதைவிட, கட்சித் தலைமை யாரை நிறுத்தினாலும் வெற்றிபெறுவார்கள் என்ற நிலைமை மேலோங்குவதையோ அக்கட்சி விரும்புகிறது. தொண்டர்களின் பலத்தை நம்பும் கட்சி பா.ஜ.க. வாக்குச் சேகரிப்பிலும் பிரச்சாரத்திலும் அதன் பலம் அதன் அசாதாரண எண்ணிக்கையிலான உறுப்பினர்களையே நம்பியிருக்கிறது. பா.ஜ.க.வில் அடுத்தகட்டத் தலைவர்கள் வரவேண்டும் என்பதற்காகத்தான் கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களாக இருந்த பலரையும் கழித்துக் கட்டியிருக்கிறது.
இது கொஞ்சம் சிக்கலான முடிவு என்றாலும், ஏற்கெனவே ஆட்சியிலிருந்த கட்சி என்ற அளவில் இருக்கும் எதிர்ப்புகளை சமாளிக்க விமர்சனத்துக்குரிய எம்.எல்.ஏ.க்களை ஓரம்கட்டவே தைரியமாக இந்த முடிவை எடுத்திருக்கிறது” என்கிறார்கள்.
இன்னொரு தரப்போ, “ஷெட்டர் உள்ளிட்ட தலைவர்களைப் பா.ஜ.க. புறக்கணித்திருப்பது லிங்காயத்துகளிடம் கொண்டுசெல்லும் சேதி, லிங்காயத்துகள் பா.ஜ.க.வுக்கு ஒரு பொருட்டில்லை என்பதுதான். பா.ஜ.கவின் தலைமை, மாநிலத் தலைவர்களை பொருட்படுத்தவில்லை என்ற சேதியையே அளித்திருக்கிறது. இதற்கான விலையை தேர்தலில் பா.ஜ.க. செலுத்த நேரலாம்” என்கிறார்கள்.
ஆனால் இதற்கு நேரெதிராக, இவர்களுக்கு சீட் கொடுக்கப்படாததால் பா.ஜ.க.வுக்கு எந்த இழப்பும் ஏற்படாது என்கிறார்கள் சில அரசியல் நோக்கர்கள். எடியூரப்பாவுக்கு இருக்கும் செல்வாக்கு, வேறெந்த லிங்காயத் தலைவருக்கும் கிடையாது. அவரே பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்கு கோருகிறார். இரண்டாவதாக, எடியூரப்பாவுக்கு மறுக்கப்பட்ட சீட்டுக்கு ஈடாக அவரது இளைய மகனுக்கு இடமளிக்கப்பட்டுவிட்டது. அதேபோல ஈஸ்வரப்பாவைக் கழட்டிவிட்ட பா.ஜ.க., அவரது தொகுதியை அவர் மகனுக்கு அளித்துவிட்டது. ஷெட்டர், ஒன்றும் ஒரு மாஸ் தலைவர் அல்ல. அவரால் சில ஆயிரம் வாக்குகள் இழப்பு ஏற்படலாம். அதை எப்படி ஈடுகட்டுவது என பா.ஜ.க. அறியும். எனவே, காங்கிரஸ் வெறுமனே மனக்கணக்கு போடாமல், அசல் அரசியல் கணக்குகளைப் போட்டு தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டவேண்டும் என்கிறார்கள் இவர்கள்.
- க. சுப்பிரமணியன்