Skip to main content

"நான் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறேனா இல்லை கண் மருத்துவமனைக்கு வந்திருக்கிறேனா?"- கலைஞர்

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

எப்போது எவர் எப்படிப் பேசினாலும் அப்போதைக்கு அப்போதே அதற்கான எதிர்வினையை ஆற்றிவிடுவார் கலைஞர். பேச்சிலும் சரி, எழுத்திலும் சரி.. அதைக் கேட்போரும் படிப்போரும் வியக்காமல் இருக்க முடியாது. ஒருமுறை இலங்கையிலிருந்து தலைவர் அமிர்தலிங்கமும் அவருடைய மனைவியும் சென்னைக்கு வந்திருந்தார்கள். விமானநிலையத்துக்கு வரவேற்கச் சென்றார் கலைஞர். அமிர்தலிங்கனாரின் மனைவி கலைஞரைப் பார்த்ததும் “"என்ன இது? உங்கள் தலையில் முடியே இல்லையே?'’ என்றார். கலைஞரோ “"எனக்கு முடிபோய் (ஆட்சித் தலைமை) இரண்டு மூன்று ஆண்டுகள் ஆனது உங்களுக்குத் தெரியாதா?'’என்றார் சிரித்துக்கொண்டே அம்மையார் நெகிழ்ந்து போனார்.

 

kalaingar



நடிகர்திலகம் நடித்த “"திரும்பிப்பார்' திரைப்படத் தணிக்கைக்காக அண்ணா சாலையில் இருந்த ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் தணிக்கை அதிகாரியின் அலுவலகத்துக்குப் பலமுறை நூறு படிகளுக்கும் மேல் ஏறி இறங்க வேண்டியிருந்தது. சாஸ்திரி என்பவர் தணிக்கை அதிகாரியாக இருந்தார். அவருக்குப்பின் “அய்யர் என்பவர் இருந்தார். நான்காயிரம் அடிகள் வெட்ட வேண்டும் என்றார்கள். எந்த எந்தப் பகுதிகள் என்று கேட்பதற்காக இயக்குநர் காசிலிங்கம் மற்றும் நண்பர்களோடு சென்ற கலைஞர், தணிக்கை அதிகாரியைப் பார்த்து, "அய்யா.. இத்தனை படிகளை ஏறி வருகிறோமே. அதைப் பார்த்துக்கூட உங்களுக்குக் கருணை வரவில்லையா?'’என்று கேட்டார். "திருப்பதி மலையில் எவ்வளவு புண்ணியமோ, அதுபோல இங்கே நீங்கள் ஏறிவந்ததும் புண்ணியம்தான்' என்றார் அந்த அதிகாரி கிண்டல் செய்வதுபோல. விடுவாரா கலைஞர்? "திருப்பதியிலும் இங்கேயும் ஒரே "ரிசல்ட் தான்'’’ என்று சொல்லிவிட்டு எழுந்து விட்டார். மொட்டைதான் என்பதைச் சொல்லிக்காட்டவா வேண்டும்?  இப்படித்தான் ஒருமுறை உளிவீச்சு தொடர்பான வழக்கு நெல்லையில் நடைபெற்றது. கலைஞர் சாட்சியம் அளிக்கவேண்டியிருந்தது. நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கேட்டார்.

 

kalaingar



"நீங்கள் எத்தனை ஆண்டுகளாகக் கருப்புக் கண்ணாடி அணிகிறீர்கள்?'’கலைஞர் பத்தாண்டுகளாக என்றார். பின் வழக்கறிஞர் ஒரு புத்தகத்தைச் சற்றுத் தொலைவிலிருந்து காட்டி இந்தப் புத்தகத்தின் பெயர் தெரிகிறதா? என்று கேட்டார். "சாவி'’என்று பதிலளித்தார் கலைஞர். மறுபடியும் வழக்கறிஞர் அதே புத்தகத்தைக் காட்டி சாவி என்ற எழுத்துக்குக் கீழே என்ன எழுதியிருக்கிறது என்று படிக்க முடிகிறதா? என்றார். கலைஞரோ, "இந்த இடத்திலிருந்து பார்த்தால் உங்களுக்குக்கூட அந்த எழுத்து தெரியாது' என்றார்.

 

kalaingar



மீண்டும் வழக்கறிஞர் அதே புத்தகத்தைக் காட்டி "அட்டையில் என்ன படம் இருக்கிறது' என்று கேட்டார். கலைஞர் "நேரு சட்டையில் அணியும் ரோஜா மலர்' என்றார். வழக்கறிஞர் மீண்டும் இன்னும் வேறு ஏதாவது படம் தெரிகிறதா? என்று தொடர்ந்தார். உடனே கலைஞர், "நான் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறேனா இல்லை கண் மருத்துவமனைக்கு வந்திருக்கிறேனா?' என்று கேட்டார். கலைஞரின் கேள்வியில் நீதிமன்றமே கலகலத்து விட்டது.

-சென்னிமலை தண்டபாணி