‘நடிகர்’ கமல்ஹாசன் என்னும் குறியீட்டிலிருந்து விலகி, அரசியல் கட்சி தலைவராக இன்று மாலை மதுரையில் அவதாரம் எடுக்கிறார் கமல்ஹாசன். முழுநேர அரசியல்வாதியாக கமல் உதிர்த்த சில முத்துகளின் தொகுப்பு பின் வருமாறு.
நேற்று மதுரை வந்தடைந்த கமலிடம், அரசியலில் காகித பூக்கள் மணக்காது என்ற மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதில் கேட்க, “நான் பூ அல்ல விதை, என்னை முகர்ந்து பார்க்காமல் விதைத்து பாருங்கள், நிச்சயம் முளைப்பேன்” என்று பதிலடி கொடுத்தார்.
அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்ல மாவட்ட கல்வித் துறை அனுமதி மறுத்தது. இதன் பின் அரசியல் இருப்பதாகக் கருதும் கமல், இது குறித்த கேள்விக்கு “நான் பள்ளிக்குப் போவதை தான் அவர்களால் தடுக்க முடியும், பாடம் படிப்பதை அல்ல. இது மாதிரி தடைகளை தொடர்ந்து ஏற்படுத்தினால், தடைகளை வென்றே சரித்திரம் படைப்பேன்” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தீர்மானமாக கூறினார்.
மீனவர்களுடனான சந்திப்பில் “எங்கள் கட்சியில் பொன்னாடை பழக்கம் கிடையாது. அதற்கு பதில் நானே உடையாவேன். பதிலுக்கு நீங்கள் என்னை அணைப்பதே இனி நான் விரும்பும் ஆடை” என்று மீனவ பிரதிநிதிகளை கட்டியணைத்தார் கமல்.
தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை பட்டியலிட்ட மீனவ பிரதிநிதி போஸ் “தங்களை மத்திய மாநில அரசுகள் ஏமாற்றும் இந்த தருணத்தில், கடலில் தத்தளிக்கும் மீனவனை காப்பாற்றும் துடுப்பாக கமலை பார்க்கிறோம்” என்றார். அவரிடம் ஒரு நிருபர் “நீங்கள் கமல் கட்சியில் இணைய உள்ளீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு போஸ், “எங்களுக்கு நல்லது யாரு செய்தாலும் ஆதரவு அளிப்போம்” என்று முடிப்பதற்குள் குறுக்கிட்ட கமல் “நான் என் கட்சிக்கு ஆள் சேர்க்க இங்கு வரவில்லை, என்னை இவர்களுடன் இணைத்துக் கொள்ள வந்திருக்கிறேன்” என்று நம்மவராய் மீனவர்களை மீண்டும் நெகிழ வைத்தார்.
மதிய உணவிற்கு பின் தனது ரசிகர்கள் முன் உரையாற்றிய கமல், “இதுவரை நான் சினிமா நட்சத்திரம், இனிமேல் நான் உங்கள் வீட்டின் விளக்கு, அதை ஏற்றுவதும், அணையாமல் பாதுகாப்பதும் உங்கள் பொறுப்பு” என்று கமல் முடிக்க விண்ணை முட்டியது ரசிகர்களின் ஆராவாரம்.
“இராமநாதபுரத்தில் என் சித்தப்பா வீடு இருக்கிறது. ஆனால் இன்று உங்களை பார்க்கும் பொழுது நான் வந்து போக இங்கு ஒரு வீடில்லை, பல வீடு இருக்கிறது” என்று சொல்ல.. வீட்டுக்கு வா தலைவா என்று முதல் வரிசை ரசிகர் கமலுக்கு அழைப்பு விடுத்தார். “ஆமாங்க, ஒவ்வொரு வீட்டுக்கும் வருவேன்” என கமல் உடனடியாக சம்மதிக்க, இதை சற்றும் எதிர்பார்க்காத கூட்டம் கலகலப்பானது.