இந்தியாவின் தெற்கு எல்லை கன்னியாகுமரியின் அடையாளமாக விவேகானந்தர் பாறைதான் இருந்தது. அந்த பாறையில் ஒரு காவிக் கொடியும் பறக்கும்.
அந்த அடையாளத்தை மாற்றி தமிழனின் அடையாளத்தை நிறுவ கலைஞர் ரொம்ப காலமாக திட்டமிட்டார். உலகப் பொதுமறையை தமிழுக்குத் தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலையை உலகமே கவனிக்கும் வகையில் நிறுவ விரும்பினார்.
1975 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார். ஆனால், 1976 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால் அவருடைய எண்ணம் நிறைவேறவில்லை.
அடுத்து ஆட்சிக்கு வந்த எம்ஜியார் 40 அடி பீடத்தில் 30 அடி உயரத்தில் வள்ளுவர் சிலை எழுப்பப்படும் என்று அறிவித்தார். அதற்கான தொடக்கவிழாவை பிரதமர் மொரார்ஜி தேசாயை கொண்டு நடத்தினார். ஆனால், அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது. 1981ல் வள்ளுவருக்கு 45 அடி உயர பீடத்தில் 75 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று எம்ஜியார் தனது அறிவிப்பை மாற்றி வெளியிட்டார்.
அதுவும் அறிவிப்பாகவே போனது. இந்நிலையில்தான் 1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர், திருவள்ளுவருக்கு கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயரத்தில் சிலை எழுப்பப்படும் என்று அறிவித்து, 1990 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கீடு செய்தார். அதைத்தொடர்ந்து, சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை செதுக்கிய கணபதி ஸ்தபதியைக் கொண்டு சிலை செதுக்கும் பணியை உளிகொண்டு செதுக்கி தொடங்கி வைத்தார் கலைஞர். ஆனால், இப்போதும் அவருடைய ஆட்சி 1991ல் கலைக்கப்பட்டது.
அதன்பிறகு, 1991ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். இந்தத் திட்டத்தைப்பற்றி கவலையே படவில்லை. அதேசமயம், 1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் வள்ளுவர் சிலையை அமைக்கும் பணியை விரைவுபடுத்தினார். 2000மாவது ஆண்டு பிறப்பை முன்னிட்டு சிலையைத் திறக்கும் வகையில் பணிகள் விரைவாக நடந்தன. திருக்குறளில் அறத்துப்பால் அமைந்த 48 அதிகாரங்களை குறிக்கும் வகையில் 48 அடி பீடமும், பொருட்பால், இன்பத்துப்பால் அமைந்த 95 அதிகாரங்களை குறிக்கும் வகையில் வள்ளுவர் சிலையும் அமைக்க திட்டம் வகுத்துக் கொடுத்தார் கலைஞர்.
அதன்படியே. உலகில் எங்கும் இல்லாத வகையில் கருங்கற்கலால் இந்தச் சிலை அமைக்கப்பட்டது. சிலையின் உள்பகுதியில் 130 அடி வரை வெற்றிடமாய் இருக்கிறது. சிலை மற்றும் பீடத்தின் மொத்த எடை 7 ஆயிரம் டன். நன்கு செதுக்கப்பட்ட 3 ஆயிரத்து 681 கருங்களை பயன்படுத்தி இந்த சிலை வடிவமைக்கப்பட்டது.
10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த சிலை இப்போது சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பாக இருக்கிறது. இந்த சிலைத் திறப்புவிழா 1.1.2000ம் அன்று நடைபெற்றது. இந்த விழாவில்தான் திருவள்ளுவரை அய்யன் திருவள்ளுவர் என்று அழைக்கும்படி கலைஞர் வேண்டுகோள் விடுத்தார்.
கலைஞர் எதைச் செய்தாலும் கலை நுணுக்கத்தோடு செய்வார் என்பதற்கு திருவள்ளுவர் சிலையும் ஒரு உதாரணம். அதேவேளையில் கன்னியாகுமரி என்றால் விவேகானந்தர் மண்டபம் என்று காவிகள் அடையாளப்படுத்தியிருந்ததை, திருவள்ளுவரால் உடைத்தெறிந்தார் கலைஞர்.