திருவாரூர் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ளது பைங்காநாடு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். விறகு வியாபாரம் செய்யும் இவரது குடும்பத்தினர் கடந்த காலத்தில், அதாவது கலைஞரின் அப்பா காலத்தில் அவர்கள் வீட்டுக்கு விறகு விற்று வந்துள்ளனர். அப்போது ராமலிங்கம் மகன் ஜெயகுமார் சிறுவன். தனது அப்பாவோடு விறகு விற்க போகும்போது கலைஞர் குடும்பத்துடன் அறிமுகம். காலம் உருண்டது, பிழைப்புக்காக உளுந்தூர்ப்பேட்டைக்கு வந்த ராமலிங்கம் இங்கே பொரிகடலை கடை வைத்தார். வியாபாரம் சூடுபிடித்தவுடன் விறகு வியாபாரத்தை விட்டுவிட்டு உளுந்தூர்ப்பேட்டையிலேயே குடும்பத்தோடு தங்கினார்.
முத்துவேலர் மகனான கலைஞர் அரசியலில் வளர்ச்சியடைந்து வந்த நேரம். பொதுக்கூட்டங்களுக்கு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும்போது உளுந்தூர்பேட்டை கடந்துதானே போக வேண்டும்... அப்படி கலைஞர் போகும்போது ராமலிங்கத்தை தற்செயலாக சந்தித்தார். 'என்ன தொழில், எங்கே இருக்கீங்க?' என்று நலம் விசாரித்தார். உளுந்தூர்ப்பேட்டை பேருந்து நிலையம் அருகே பட்டாணிக் கடை வைத்துள்ளதைச் சொல்ல, அப்படியே 'உன் கடைப் பட்டாணியைக் கொடு' என்று கேட்டார் கலைஞர். ஓடிப்போய் பட்டாணிப் பொட்டலம் எடுத்து வந்து கொடுத்தார். அதை ஆசையோடு சாப்பிட்ட கலைஞர், 'ரொம்ப ருசியாக இருக்கே... இதே சுவையோடு தயாரித்து விற்பனை செய்யுங்க, வியாபாரம் செழிக்கும்' என்று கூறிவிட்டுச் சென்றாராம்.
அப்போது முதல் சென்னையில் இருந்து தென்தமிழகத்துக்குப் போகும்போது தென்பகுதியில் இருந்து சென்னைக்குத் திரும்பும்போதும் அவரது கார் ராமலிங்கம் பட்டாணிக்கடை முன்பு நிற்கும், பட்டாணிப் பொட்டலத்தோடு ஓடோடி வருவார் ராமலிங்கம். நலம் விசாரிப்புக்குப் பிறகு பட்டாணி பொட்டலத்தை வாங்கிக்கொண்டு கலைஞர் புறப்படுவார். ராமலிங்கம் காலமான பிறகு அவரது மகன் ஜெயக்குமார் கலைஞருக்குப் பட்டாணி பொட்டலம் கொடுப்பது தொடர்ந்து, கலைஞர் பேச்சாளராக, அமைச்சராக, முதல்வராக எத்தனை உயரமான பதவிகளின் படிகளில் ஏறியபோதும் பட்டாணிக் கடைக்காரரிடம் நட்புடன் பட்டாணி வாங்கி செல்வது நீடித்தது.
ராமலிங்கம் மகன் ஜெயக்குமார் இதையெல்லாம் பெரிதாக வெளியே சொல்லி அலட்டிக் கொள்வதில்லை. அதேபோல் சென்னை செல்லும்போது குடும்பத்தினருடன் சென்றாலும் தனியாகச் சென்றாலும் கலைஞர் வீட்டில் எந்தத் தடையும் இல்லாமல் நேரே சென்று சந்தித்துவிட்டுப் புறப்படுவார். அந்த அளவிற்கு கலைஞர் உதவியாளர், மனைவி, மகன் ஸ்டாலின் உட்பட அனைவருக்கும் தெரிந்த நட்பு இது. கலைஞருக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டாலும் போதும் ஜெயக்குமார் சென்னை சென்று கலைஞரை பார்த்துவிட்டு வருவார். எப்போது போனாலும், 'என்ன கொண்டு வந்தாய்' என்று கேட்க பட்டாணி பொட்டலத்தை நீட்டுவாராம் ஜெயக்குமார். பேச்சாற்றல் குறைவதற்கு சில நாட்களுக்கு முன்பு போய் கலைஞரை பார்க்க, என்ன கொண்டு வந்தாய் என்று கேட்டார். பட்டாணி, பொறி, வறுகடலை ஆகியவை கால், கால் கிலோ (எப்போதும் கால்கிலோதான் அளவாம்) எடுத்துக் கொடுக்க ஆசையோடு வாங்கினாராம் கலைஞர். அதன் பிறகு இதுபோன்று உணவு சாப்பிடும் நிலையிலேயே இல்லை. இன்று கலைஞர் இல்லை என்பதை நினைக்கும்போது தாங்கமுடியவில்லை" என்கிறார் ஜெயக்குமார்.
கலைஞர் ஜெயக்குமாரிடம் காட்டும் அன்பைப் பார்த்து நெகிழ்ந்த ஸ்டாலினும் ஜெயக்குமார் எப்போது போனாலும் அன்பாகப் பேசி உபசரிப்பாராம். அப்பாவிடம் அழைத்துப்போய் விடுவாராம். அதே போல் இப்பகுதிக்கு வரும்போது தூரத்தில் ஜெயக்குமார் தலை தெரிந்தாலும் கூட கிட்டே அழைத்து நலம் விசாரிக்காமல் செல்வது இல்லை. கடைசியாக கலைஞரைப் பார்க்கச் சென்றபோது ஸ்டாலின் வீட்டுக்குப் போயுள்ளார். ஸ்டாலின், உதயநிதியிடம் ஜெயக்குமார் - கலைஞர் நட்பைப் பற்றி சொல்ல நெகிழ்ந்துபோன உதயநிதி, 'தாத்தா, தாத்தா' என்று அன்பாகப் பேசி கவனித்துக் கொண்டாராம். 'கலைஞர் குடும்பத்தின் மூன்று தலைமுறையினரும் எங்களுக்குக் கொடுக்கும் மரியாதை, அன்பு, உபசரிப்பு எங்களுக்கு கிடைத்த வரம்; என்கிறார் ஜெயக்குமார்.
'இந்த நட்பின் மூலம் எந்தவிதமான உதவிகளையும் கேட்டது இல்லை, கேட்கப்போவதும் இல்லை. அவர்களது நட்பே எங்களுக்குப் போதும்' என்கிறார். 70 வயது ஜெயக்குமாருக்கு கேட்கும் திறன் குறைவாக உள்ளது. அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். பட்டாணி வியாபாரத்தின் மூலம் வாழ்ந்தாலும் கலைஞர் பேச்சை எடுத்தால் அவரது முகம் சூரியனைப்போல பிரகாசமாகிறது. கலைஞரின் குசேலன் ஜெயக்குமார்.