Published on 06/08/2018 | Edited on 06/08/2018
முன்பெல்லாம் திராவிடர் கழகக் கூட்டங்களில் பேசுகிறவர்களுக்கு தந்தை பெரியார் ஒரு வரைமுறை வகுப்பதுண்டு. பேச்சாளர் யாராவது வரம்பு மீறியோ, பிரச்சனை ஏற்படுத்தும் விதமாகவோ பேசினால் பெரியார் தனது கைத்தடியை இருமுறை மேடையில் தட்டுவார். உடனே பேச்சாளர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வார்.
ஒருமுறை நடந்த கூட்டத்தில் பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் ஆவேசமாகப் பேச, பெரியார் அவர்களும் அடிக்கடி கைத்தடியைத் தட்டி, ஒவ்வொருவராக உட்கார வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கலைஞர் பேசும் கட்டம் வந்தது.
"தமிழன் உடனடியாக விழிப்புணர்வு பெற வேண்டும். அவன் விழிப்புணர்வு பெறும் வரை, பேசும் என் போன்றவர்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்காமல், பெரியார் அவர்கள் தன் கைத்தடியை ஈரோட்டில் வைத்து விட்டு வர வேண்டும்" என்று கூறிவிட்டு கலைஞர் பெரியாரைத் திரும்பி பார்த்தார். "சரி... சரி... பேசு…" என்று சைகை காட்டிச் சிரித்தார் பகுத்தறிவுப் பகலவன் பெரியார்.