Skip to main content

"இந்த விழிப்புணர்வு அன்றைக்கு இருந்திருந்தால் ராஜாகண்ணு உயிரை காப்பாற்றியிருக்க முடியாவிட்டாலும் பார்வதி.." - நீதிபதி சந்துரு உருக்கம்!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

dfg

 

'ஜெய்பீம்' திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு, சில வாரங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல விமர்சனத்தைப் பெற்றுள்ள இந்த திரைப்படத்திற்கு சிலர் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், இந்த வழக்கில் ராஜாக்கண்ணு மனைவிக்காக நிஜத்தில் வாதாடிய முன்னாள் நீதிபதி சந்துருவிடம் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு. 


‘ஜெய்பீம்’ படம் 90களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு நல்ல விமர்சனங்களை பலரும் தெரிவித்துவருகிறார்கள். பல செய்திகளில் உங்கள் படங்கள் வரும்போது சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் இவர்தானே உண்மையான ரியல் ஹீரோ என்று கேட்கிறார்கள். இதை எப்படி உணர்கிறீர்கள், பெருமையாக இருப்பதாக நினைக்கிறீர்களா? 

 

நான் அதை அந்த மாதிரி பார்க்கவில்லை. நாம் நடத்திய வழக்கு நிறைய இருக்கு. அதில் ஒரு பழங்குடியின மக்கள் தொடர்பான வழக்கை திரைப்படமாக எடுத்துள்ளார்கள். அதில் சூர்யா போன்ற பெரிய நடிகரும் சேர்ந்து நடிக்கும்போது அதன் வீச்சு இன்னும் அதிகமாக இருக்கிறது. நாம் சொல்லக்கூடிய கருத்து திரைப்படம் மூலம் மக்களுக்குப் போய் சேருகிறது என்பது மட்டுமே நமக்கு சந்சோஷம். 70 வயது மேல் எனக்கு என்ன புகழ் வரப்போகிறது. வழக்கறிஞராக பணியாற்றியுள்ளோம், நீதிபதியாக இருந்துவிட்டோம், பென்சன் வாங்கிக்கொண்டு வீட்டில் இருக்கிறோம். எனவே நான் இதை அப்படித்தான் பார்க்கிறேன், தனிப்பட்ட பெருமை என்று இதில் கூறுவதற்கு எதுவுமில்லை. இதில் எந்த ஒரு தனிப்பட்ட சாகசமும் இல்லை. படத்தின் இயக்குநர் கூட தனிப்பட ஹீரோயிசம் தெரியக்கூடாது என்பதற்காக படத்தைக் கவனமாக எடுத்துள்ளார். இன்றைக்கு எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து லெட்டர் வருகிறது. இந்த மாதிரி ஒரு மக்கள் இருப்பதைக் கூட நாங்கள் தெரியாமல் விட்டுவிட்டோம். நாங்கள் அவர்களுக்கு ஏதாவது செய்யலாமா என்று கேட்கிறார்கள். இதுதான் இந்தப் படத்தின் வெற்றியாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. 


இன்றைக்கு சாத்தான்குளம் விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கைகளை சமூகவலைதளங்களின் வாயிலாக நாம் தொடர்ந்து பார்த்துவந்தோம். அதன் மூலம் இந்த விவகாரத்தில் அனைத்து மக்களுக்கும் இது ஒரு அத்துமீறல் என்ற விழுப்புணர்வு இயல்பாகவே தெரியவந்தது. ஆனால் இந்த சம்பவம் நடைபெற்ற காலத்தில் அத்தகைய விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டதாக கருதுகிறீர்களா? 

 

சாத்தான்குளம் விவகாரத்தில் ஊடகங்கள் பெரிய பங்காற்றின. அந்த சம்பவம் தொடர்பான செய்திகளை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லப்பட அது காரணமாக இருந்தது. ஆனால் 93ம் ஆண்டு இந்த அளவுக்கு விழிப்புணர்வு என்பது கிடையாது. இந்த இரண்டு விவகாரத்திலும் அடித்து, உதைத்து, சாகடித்தது எல்லாம் ஒன்றாக இருந்தாலும் மக்களுக்கு இந்த வேகத்தில் புரிய அந்த காலத்தில் தகவல் தொடர்பு இந்த பெரிய அளவில் இல்லை. ராஜக்கண்ணு, பார்வதி ஆகிய இரண்டு பேரும் ஊரில் இருந்து ஒதுங்கி வாழ்ந்துவந்தார்கள். இவர்களுக்கென்று எந்த சொத்து பத்தோ கிடையாது. குடியிருக்க வீடு இல்லை. ஆனால் சாத்தான் குளத்தில் இறந்தவர்கள்,  அங்கு அவர்களை சார்ந்த மக்கள் அதிகப்படியான வசிக்கும் பகுதியாகும். உடனடியாக அது இந்தியா முழுவதும் பேசப்பட்டது. இதுபோன்ற நிறைய காரணங்கள் ராஜாக்கண்ணு வழக்கில் இருந்தது. இந்த வழக்கில் நான் முதலில் சிபிஐ விசாரணைதான் நீதிபதியிடம் கேட்டேன். அவர்கள் ஐஜி பெருமாள் சாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார்கள். இந்த விழிப்புணர்வு அன்றைக்கு இருந்திருந்தால் ராஜாக்கண்ணு உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாவிட்டாலும் பார்வதி இந்த அளவுக்குப் போராடியிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. 

 

இந்த வழக்கை முதலில் நீங்கள் கேட்கும்போது உங்களின் மனநிலை என்னவாக இருந்தது. காவல்துறையின் அடக்குமுறைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தீர்களா? 

 

இந்த வழக்கு என்னிடம் வரும்போது பார்வதிக்கு அவரது கணவரைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. ‘காவல்துறை என் கணவரை அழைத்துச் சென்றார்கள். அடுத்த நாள் சாப்பாடு எடுத்துக்கொண்டு போனேன். ஆனால் காவல் நிலையத்தில் நான் பாத்திரத்தை எங்கே வைத்தேனோ அங்கேயே அடுத்த நாளும் இருந்தது. பிறகு அடுத்த நாள் நான் தங்கிருந்த இடத்துக்குப் போலீசார் வந்து உன் புருஷன் ஓடிபோயிட்டான் என்று சொல்லிவிட்டு சென்றார்கள்’ என்றுதான் பார்வதி என்னிடம் கூறினார். இந்த அடிப்படை தகவலை மட்டும் வைத்துக்கொண்டுதான் இந்த வழக்கை நாங்கள் ஆரம்பித்தோம். காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்ட ஒருவர் காணாமல் போகிறார் என்றால் அதற்கு யார் பதில் சொல்ல வேண்டும். நிச்சயமாக காவல்துறையினர்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே நாங்கள் ரிட் பெட்டிஷன் போட்டு அவரை ஆஜர்ப்படுத்த கோரினோம். அந்த மனுவுக்குப் பதிலளித்த அன்றைய கடலூர் காவல்துறை கண்காணிப்பாளர், ராஜாக்கண்ணு காவல் நிலையத்தில் இருந்து தப்பித்துச் சென்றதாகவும், நெய்வேலியில் ஒரு மருத்துவரிடம் வைத்தியம் பார்த்ததாகவும், கேரளாவில் ஒரு கடையில் குளிர்பானம் குடித்ததாகவும், அவரை நாங்கள் தற்போது தீவிரமாக தேடி வருவதாகவும் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். 

 

ஆனால் நாங்கள் அதை நம்பவில்லை. அப்படியென்றால் அவருடன் கைது செய்யப்பட்ட ராஜாக்கண்ணு அக்கா மகன்கள் எங்கே என்ற கேள்விக்கு அவர்களால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. எனவே அவர்கள் இருவரும் வந்தால்தான் இந்த விவகாரத்தில் முழுமையான தகவல் கிடைக்கும் என்று அவர்களைத் தேடினோம். கேரளாவில் அவர்கள் இருப்பதை உறுதிசெய்து, எங்கள் அலுவலகத்துக்கு அழைத்து வந்து அவர்களிடம் வாக்குமூலம் வாங்கினோம். அதை அன்றைக்கு நீதிபதிகளாக இருந்த மிஸ்ரா படித்து அதிர்ச்சியடைந்தார். காவல்துறை சொல்வதை அப்படியே நம்ப கூடாது என்று முதல்முறையாக நீதிமன்றம் அப்போது உணர்ந்த தருணம் அது. நாங்கள் சிபிஐ விசாரணை கேட்ட நிலையில், அவர்கள் தமிழ்நாடு காவல்துறையில் இத்தனை அதிகாரிகள் இருக்கிறார்கள், அவர்களில் ஒருவரைக் கூறுங்கள் என்றார்கள். அரசு தரப்புக்கும் ஐஜி பெருமாள்சாமியை நியமிக்க விரும்பியதால் அவரை விசாரணை அதிகாரியாக நீதிமன்றம் நியமித்தது. இப்படியாக இந்த வழக்கில் நீதி கிடைக்கப்பெற்றது. 

 

 

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.