தீபாவளிக்கு முன்பாகவே தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சி ஏரியாக்களிலும் 2021 தேர்தல் பிராண்ட் பட்டாசுகள் வெடிக்க ஆரம் பித்துவிட்டன. அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளில் முக்கியக் கட்சியான பா.ம.க., தனக்கான தொகுதிகளை இறுதி செய்து இப்போதே வேட்பாளர் பட்டியலையும் கிட்டத்தட்ட இறுதி செய்யும் நிலைக்கு வந்துவிட்டது என்கிறார்கள் வடமாவட்டக் கட்சிக்காரர்கள். அந்தப் பட்டியலில் முதன்மை இடத்தில் இருப்பவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ். அதிலும் அவர் ஜெயங்கொண்டத்தில் போட்டியிடுவதற்கான ஆபரேஷனை துவங்கியுள்ளது பா.ம.க. தலைமை.
இந்த ஆபரேஷனை டீடெய்லாக நம்மிடம் பேசினார் திண்டிவனத்தை சேர்ந்த பா.ம.க. வி.ஐ.பி. ஒருவர். "கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயங்கொண்டம் தொகுதிக்குட்பட்ட கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களை தைலாபுரம் தோட்டத்திற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார் பெரிய ஐயா. அப்போது அவர்களிடம், “தொகுதியில் இருக்கும் கிராமங்களில் இரவு ஊர்க்கூட்டம் போட்டு, நமது சமூகத்தினரை மட்டுமல்ல, மற்ற சமூகத்தினரையும் சந்தித்து நல்ல புரிதலையும் ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்துங்கள். கட்சியின் சீனியர்களிடமும் இதுகுறித்து செல்போனில் நான் பேசியுள்ளேன். அவர்களிடமும் மக்களிடமும் பேசும் போது அன்புமணிதான் வேட்பாளர் என வெளிப்படையாகச் சொல்லக் கூடாது, ஆனால் அன்புமணிதான் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளும்படியாக நடந்து கொள்ளுங்கள்.
இனிமேல் அந்தப் பகுதிகளில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு நீங்கள் காசு செலவு பண்ணி போஸ்டர் அடிக்க வேண்டாம். தலைமையிலிருந்தே அனுப்பிவிடுவோம். அதே போல் மக்களுக்குத் போய்ச் சேராத அரசு திட்டங்களின் பட்டியலை எடுத்து அனுப்பினால், நான் சரி செய்து கொள்கிறேன் எனச் சொல்லியுள்ளார் டாக்டர்''என்றார்.
ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மற்றொரு பா.ம.க. பிரமுகரிடம், “காடுவெட்டி குருவின் மகன் கலையரசன் சமீபத்தில் உதயநிதியைச் சந்தித்து தி.மு.க.வை ஆதரிப்போம் எனக் கூறியுள்ளாரே எனக் கேட்டபோது, "அதெல்லாம் எங்களைப் பாதிக்காது. யார் எதிர்த்தாலும் அன்புமணியின் வெற்றி உறுதி, அவர் துணைமுதல்வராவதும் உறுதி. இதற்கு அச்சாரம்தான் கடந்த வாரம் ஆண்டிமடம் மெயின் ரோட்டில் வன்னியர் திருமண மண்டபத்தில் நடந்த ஒன்றிய ஆலோசனைக் கூட்டம். காலை பத்து மணிக்கு ஆரம்பிச்ச கூட்டம், அஞ்சு மணிக்குத்தான் முடிஞ்சிச்சு. ஆயிரக்கணக்கான வண்டிகளில் தொண்டர்கள் வந்திறங்கி, சும்மா கலக்கிட்டோம்ல'' என்கிறார் உற்சாகமாக.
அன்புமணியின் வெற்றிக்காக மா.செ. காடுவெட்டி ரவிச்சந்திரன், மாநில து.செ. திருமாவளவன், ஆண்டிமடம் வைத்தி ஆகியோர் பம்பரமாக சுற்றிவருகிறார்கள். ஒருவேளை அப்போதைய கள நிலவரம் மாறினால் அன்புமணிக்குப் பதிலாக இந்த மூவரில் ஒருவருக்கு சீட்டு கிடைக்கலாம். நிலைமை இப்படி இருந்தாலும் அன்புமணிக்கு குடைச்சல் கொடுக்க, காடுவெட்டி குருவின் தீவிர ஆதரவாளரும் இப்போது பா.ஜ.க.வின் மாவட்ட பொறுப்பாளருமான ஐயப்பன், தனக்கு ஜெயங்கொண்டம் தொகுதியைக் கேட்டு, எல்.முருகனிடம் பேசியுள்ளாராம்.
தி.மு.க.விலோ மறைந்த எம்.எல்.ஏ. சொ.கணேசனின் மகன் கண்ணன், உதயநிதிக்கு நெருக்கமான சுபா.சந்திர சேகர், மறைந்த அதிரடி பேச்சாளர் வெற்றிகொண்டானின் மகன் கருணாநிதி ஆகியோர் ஜெயங்கொண்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
பா.ம.க. பலமாக வியூகங்கள் அமைத்துக்கொண்டிருக்கிற நிலையில், கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அ.தி.மு.க. தரப்பிலும் சீட் எதிர்பார்ப்பு பலமாகவே உள்ளது. ஜெயங்கொண்டம் சீட் விஷயத்தில் யாருக்கு ஜெயம் கிடைக்கப்போகிறதோ!