
சிபிஐ, வருமானவரித்துறை என்றாலே மத்திய ஆளும் கட்சியின் கையாள் என்று காலங்காலமாக கூறப்பட்டு வந்தது. இன்றுவரை அதுவே தொடர்கிறது. மத்தியில் எந்தக் கட்சி ஆளுங்கட்சியாக வந்தாலும், சிபிஐயையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி பழி வாங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது வழக்கமாகிவிட்டது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இத்தகைய இமேஜ் ஆழமாக பதிந்துவிட்டது.
அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவும், பழி தீர்க்கவுமே சிபிஐ பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் இந்த இமேஜ் டேமேஜுக்கு காரணம்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதே அதிமுகவை தனது கையகப்படுத்த பாஜக முயற்சிகளைத் தொடங்கிவிட்டது. ஓ.பன்னீர் செல்வத்தை அது தனது கையாளாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. அதற்காகத்தான் பன்னீர் செல்வத்தின் பினாமியான சேகர்ரெட்டி வீட்டில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. அந்தச் சோதனையில் 80 கோடி ரூபாய் அளவுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் சிக்கியதாக கூறப்பட்டது. அத்துடன் 10 கோடி அளவுக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளும், 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறினார்கள். சில வாரங்கள் கழித்து, சேகர் ரெட்டி வீட்டில் 34 கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்கள்.
சேகர்ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்திய அதேசமயத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன்ராவுக்குச் சொந்தமான சென்னை, பெங்களூரு வீடுகளிலும், ஆந்திராவில் உள்ள வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அவருடைய மகன் விவேக் பாப்பிசெட்டிக்கு சொந்தமான வர்த்தக நிறுவனங்களிலும் சோதனைகள் தொடர்ந்தன. எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக சென்னை தலைமைச் செயலகத்திற்குள் வரலாற்றில் முதன்முறையாக துணைராணுவப் படையை நிறுத்தி, ராமமோகன்ராவின் அறையில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் பணமும் தங்கமும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினார்கள். இந்தச் சோதனைகள் அனைத்தும், கிரிஜா வைத்தியநாதனை புதிய தலைமைச் செயலாளராக்குவதற்காகவே நடத்தப்பட்டது என்று கூறப்பட்டது.

இந்தச் சோதனைகளைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியின் பிரதான அடிமையாகிவிட்டார் என்றார்கள். பாஜக அரசின் இந்த நாடகத்தை கவனித்த சசிகலா, ஓபிஎஸ் மீதான நம்பிக்கையை இழந்து, அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினார். தானே முதல்வராக முடிவு செய்தார். அப்போதும், அவரை எதிர்த்து தர்மயுத்தம் நடத்துவதற்கு பாஜக தலைமையே ஆதரவு கொடுத்தது. ஆனால், ஓபிஎஸ் பின்னால் எம்எல்ஏக்கள் யாரும் செல்லவில்லை.
இந்நிலையில்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளிவந்தது. சசிகலா சிறைக்கு செல்ல நேர்ந்தது. போகும்போது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்துவிட்டு சென்றார். முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக சந்தித்தபோது அந்தச் சந்திப்பு சுமுகமாக இல்லை. பிரதமரிடம் தனது நிலையை எடுத்துச்சொல்ல எடப்பாடிக்கு மொழி அறிவு இல்லை. எனவே, மீண்டும் தனது உறவினர் ஒருவரை அழைத்துக்கொண்டு பிரதமரை சந்தித்தார். அப்போது, மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்பட உறுதி அளித்தார் என்றார்கள். அந்தச் சந்திப்பில்தான் ஓ.பன்னீரை மீண்டும் இணைக்கவும், சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கவும் முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதும், அந்தத் தேர்தலுக்கு பொறுப்பாக இருந்த விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அந்த ரெய்டில் தினகரனுக்காக 80 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக லிஸ்ட் கிடைத்ததாக கூறினார்கள். அதன்பிறகு எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. மத்திய அரசின் மிரட்டல் தொடங்கியது. ஓபிஎஸ்சை அதிமுகவில் இணைத்துக்கொண்டு, சசிகலா, தினகரன் ஆகியோரை வெளியேற்றும்படி ஒரு திட்டத்தை முன்வைத்தது. மத்திய அரசின் வலையில் சிக்கிக்கொண்ட எடப்பாடி தலைமையிலான அணி ஓபிஎஸ்சை இணைத்தால், இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத்தரவும் ஒத்துழைப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதற்கிடையே தினகரன் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் மீதும் வழக்குப்போட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். எல்லாமே, எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணி இணைப்புக்கு தினகரன் தடங்கலாக இருக்கக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு செய்யப்பட்டது.

தினகரனுக்கு ஆதரவாக ஜெயா டி.வி.யைப் பயன்படுத்தும் விவேக்கை மிரட்டுவதற்காக 2017 டிசம்பர் மாதம் அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கு ஆதரவான பிரச்சாரம் வலுவாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் இந்த ரெய்டு நடைபெற்றது. ஏராளமான பணமும் தங்கமும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறிச் சென்றார்கள். விவேக்கைத் தொடர்ந்து போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அங்கும் ஏராளமான மூடைகளில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில்தான், ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் காட்சி விடியோவாக வெளியிடப்பட்டு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலா ஜெயலலிதாவை கொன்றுவிட்டார் என்ற பிரச்சாரத்துக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறினார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு தினகரன் வீட்டிலும் 2018 ஜனவரி 7 ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போதும் பணம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக கூறினார்கள். ஆனால், இந்தச் சோதனைகளில் தொடர்புடையோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேசமயம் சோதனை விவரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுவதற்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

எடப்பாடியும், அவருடைய அமைச்சர்களும் மத்திய அரசின் மிகச்சிறந்த அடிமைகளாக தங்களை நிரூபித்தாலும், இப்போது எடப்பாடியின் பினாமிகள், அவருடைய சம்பந்தி ஆகியோர் வீடுகளில் நடைபெற்றுள்ள சோதனைகளில் ரொக்கமும் தங்கமுமாக 215 கோடி ரூபாய் அளவுக்கு கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எடப்பாடி பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறையில் தொடர்ந்து டெண்டர்களைப் பெற்றவர்களின் வீடுகளில் நடைபெற்ற இந்தச் சோதனையும்கூட, எடப்பாடியை மிரட்டி, ஓபிஎஸ்சுக்கு பொறுப்பைப் பெற்றுத்தருவதற்காகவும் நடத்தப்பட்டதாகவே கருதப்படுகிறது. ஆனால், பாஜகவின் இந்த மிரட்டல் அதிமுகவை மீண்டும் இரண்டாக பிளக்கவே உதவும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.