இந்தியாவின் முதல் Crowd Funded சுயாதீன திரைப்பட விழா !!

க்ரவுட் ஃபண்டிங் எனப்படும் மக்களிடம் பணம் வசூலித்து எடுக்கப்படும் முயற்சிகளை திரையுலகில் அவ்வப்போது நாம் பார்த்து வருகிறோம். ஆனால் இந்தியாவின் முதல் க்ரவுட் ஃபண்டட் திரைப்பட விழாவை நடத்துகிறது மாற்று சினிமாவிற்காக இயங்கும் தமிழ் ஸ்டூடியோ அமைப்பு.
Independent Film Festival of Chennai 2018 என்றழைக்கப்படும் இந்த IFFC திரைப்பட விழா, இந்தியாவில் முதல்முறையாக மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு சுயாதீன திரைப்பட விழா. முழுக்க முழுக்க சுயாதீன திரைப்படங்கள் (Independent Films) மட்டுமே பங்குபெறும் இந்த விழா வரும் ஃபிப்ரவரி 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடைபெறுகிறது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ப்ரிவியு தியேட்டர், பிரசாத் 70 எம்.எம் தியேட்டர் மற்றும் வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோஸ் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது இந்த திரைப்பட விழா. திரைப்பட இயக்குனர்களின் பயிற்சிப் பட்டறை, திரைப்பட குழுவுடன் கலந்துரையாடல், இயக்கம், திரைக்கதை, சந்தை சார்ந்த வகுப்புகள் என திரையிடல்களோடு பல்வேறு சினிமா ரசனை சார்ந்த வகுப்புகளும் நடைபெறுகின்றன.

ஆச்சர்யமான விஷயம், இந்த திரைப்பட விழாவிற்கான அனுமதிக் கட்டணம் வெறும் 100 ரூபாய் தான். அதுவும் உதவி இயக்குனர்கள், மாணவர்கள் என்றால் வெறும் 50 ரூபாய்தான். மேலும் விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் உணவு பதார்த்தங்களும் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ் ஸ்டூடியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணிடம் கேட்டபோது ‘இது எங்கள் பலவருடக் கனவு. பலமுறை பொருளாதார காரணங்களால் தள்ளிப்போன இந்த விழா இந்த வருடம் நிச்சயம் நடைபெற வேண்டும் என்று நாங்கள் முனைப்புடன் இருந்தோம். அதேபோல் இது மக்களுக்கான திரைப்பட விழா. மக்களின் நிதியில் உருவாகும் விழா. எனவே மக்கள்தான் இதற்கான பொருளாதார செலவுகளை அளிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம். நிறைய நண்பர்கள் இதற்கு தங்களால் இயன்றளவு பணம் கொடுத்து வருகின்றனர். ஆனாலும் எங்கள் ஆசைகள் பெரிது. ஒரு நாளில் மூன்று திரையரங்குகள், எட்டு திரைப்படங்கள், வகுப்புகள் என்று பல லட்சங்கள் கேட்கும் விழா இது. இருந்தாலும் இறங்கியாகிவிட்டது, இனிமேல் பின்வாங்க வேண்டாம் என்று கடன் வாங்கி அத்தனையும் செய்கிறோம். இதுபோன்ற மாற்று சினிமாக்களை பார்க்கும் சினிமா ஆர்வலர்கள், நாளை ஒரு நல்ல திரைப்படம் செய்வதே எங்களுக்கு அவர்களும் செய்யும் உதவியாக நாங்கள் பார்க்கிறோம்’ என்றார்.
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், எடிட்டர் பி.லெனின், இயக்குனர்கள் கமல் ஸ்வரூப், பிரசன்ன விதானகே, மிஷ்கின், வெற்றிமாறன், மணிகண்டன், கார்திக் சுப்புராஜ், கோபி நயினால், சனல் குமார் சசிதரன், அம்ஷன் குமார், லீனா மணிமேகலை, அனன்யா காசரவல்லி, அருண் பிரபு புருஷோத்தமன், லோகேஷ் குமார், நித்திலன், ஜெய்ப்ரகாஷ் ராதாகிருஷ்ணன், விஜய் ஜெய்பால், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இந்த திரைப்பட விழாவில் பங்கேற்கின்றனர். இதன் நிகழ்வு விபரங்கள் பின் வருமாறு.
பிரசாத் லேப் ப்ரிவியு திரையரங்கம் :
காலை 8 மணி : பதிவு செய்தல்
9 மணி - திரைப்படங்களை எப்படி பார்ப்பது? - இயக்குனர் மணிகண்டன்.
10 மணி - ஹரி கத பிரசங்கா – கன்னடம் – 120 நிமிடங்கள் – அனன்யா காசரவல்லி
12 மணி - ரங்கபூமி – இந்தி – 80 நிமிடங்கள் – கமல் ஸ்வரூப்
மதியம் 1.30 – 2.00 : உணவு இடைவேளை
2 மணி - ஆறிதழ் அரளிப்பூ – சிங்களம் – 90 நிமிடங்கள் – விஸாகேச சந்திரசேகரம்
3.30 - Is It too much to ask ? – தமிழ் – 30 நிமிடங்கள் – லீனா மணிமேகலை
4 மணி – குழு விவாதம். LGBTQ புரிதல், சினிமாவில் பெண்கள், திரைப்பட தணிக்கைத் துறையின் அதிகார வரையறை. வழி நடத்துபவர் – லீனா மணிமேகலை. பங்கேற்பு – அனன்யா காசரவல்லி, சனல்குமார் சசிதரன், லோகேஷ் குமார்
5 மணி – மாஸ்டர் க்ளாஸ். சுயாதீன திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதுவது எப்படி? - இயக்குனர் பிரசன்ன விதானகே
பிரசாத் லேப் அரங்கில் 6 மணியோடு நிகழ்வுகள் முடிவடைகிறது.
ஆர்.கே.வி ஸ்டூடியோ
மதியம் 1 மணி - ஓராளப்பாக்கம் – மலையாளம் – 112 நிமிடங்கள் – சனல் குமார் சசிதரன்
3 மணி – குழு விவாதம். சுயாதீன படங்களுக்கான சந்தை. வழி நடத்துபவர் – அம்ஷன் குமார். பங்கேற்பு – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர்கள் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், நித்திலன், அருண் பிரவு புருஷோத்தமன், விஜய் ஜெயபால்
மாலை 4.15 மணி - சிவபுராணம் – தமிழ் – 75 நிமிடங்கள் – அருண் கார்த்திக்
5.30 மணி – சிவபுராணம் படக்குழுவினரோடு விவாதம்
6 மணி – சென்னை சுயாதீன திரைப்பட விழா தொடக்க விழா
பிரசாத் 70 எம்.எம் தியேட்டர்
காலை 10 மணி - லேடி ஆஃப் தி லேக் – ஆங்கிலம் – 71 நிமிடங்கள் – பபன் குமார் ஹோபம்
11.30 மணி - தி பெயின்டட் ஹவுஸ் – மலையாளம் – 102 நிமிடங்கள் – சந்தோஷ் பாபுசேனன், சதீஷ் பாபுசேனன்.
பதிவு செய்துகொள்ள : 044 - 42164630 / 9840644916 / 9840698236
தமிழ் ஸ்டூடியோவின் மாத இதழான படச்சுருள் இதழும் இந்த மாதம் சுயாதீன திரைப்பட சிறப்பிதழாக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயச்சந்திர ஹாஷ்மி