Skip to main content

கரோனாவை விடப் பொருளாதாரத்தால் ஏற்படப் போகும் பாதிப்பு... எச்சரித்த உளவுத்துறை... மோடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ரிப்போர்ட்!

Published on 20/04/2020 | Edited on 20/04/2020


ஊரடங்கு மே 3-ந்தேதி வரை நீடித்தாலும், ஏப்ரல் 20 முதல் சில துறைகள் சார்ந்த பணிகளுக்கு விலக்கும் தளர்வும் கொடுக்கப்பட்டு அவைகளுக்குரிய வழிகாட்டுதல்களை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது பிரதமர் அலுவலகம். மோடியைத் துரத்தும் சிக்கல்களே இதற்கு காரணங்களாக இருக்கின்றன என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பொருளாதார ஆலோசகர்களிடம் இரண்டு முறையும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸிடம் இரு முறையும், இந்திய தொழில் நிறுவன ஜாம்பவான்களிடம் ஒரு முறையும் எனத் தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. இதைத்தவிர, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் உள்ளிட்ட பிரதமர் அலுவலக உயரதிகாரிகளுடன் ஒரு நாளைக்கு 3 முறை விவாதிக்கிறார். அந்தளவுக்கு மோடியிடம் கவலை சூழ்ந்துள்ளது.
 

bjp


பிரதமர் அலுவலகத்தோடு தொடர்புடைய தமிழக அதிகாரிகளிடம் டெல்லியில் நடக்கும் நிலைமைகள் குறித்து நாம் விசாரித்தபோது, கரோனாவை சமாளிப்பதை மாநில அரசுகள் பார்த்துக் கொள்ளட்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் மோடி. தற்போது அவரை அதிகம் பயமுறுத்துவது சமூக, பொருளாதார பாதுகாப்புதான். இந்து ராஜ்ஜியம் உருவாக்கும் தனது கனவு கலைந்து போகுமோ என்கிற அச்சமும் அவருக்கு வந்திருக்கிறது.
 

http://onelink.to/nknapp


சமீபத்தில் மத்திய உளவுத்துறை கொடுத்த அறிக்கையில், ஊரடங்கு முடிந்ததும் அடுத்து வரும் 3 மாதங்கள் மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். இதனால், இந்தியாவில் ஏற்படப்போகும் வேலையில்லா திண்டாட்டமும் அதன்மூலம் உருவாகும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் பிரதமருக்கு சிக்கல்களை அதிகரிக்கச்செய்யும் எனச் சொல்கிறது அந்த அறிக்கை. இதையடுத்துதான் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார் மோடி.

 

rbi



பொருளாதாரத்தில் நாம் 7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளோம் என சொல்லிக்கொண்டாலும் 5.5 சதவீத வளர்ச்சியைத் தாண்டவில்லை என்பதுதான் உண்மை. கரோனா தாக்கத்தால் தற்போது நமது பொருளாதாரம் 2.8 சதவீதமாகச் சரிந்துள்ளது. அடித்தட்டு மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. நடுத்தரவர்க்கத்தினரின் வங்கியிலுள்ள வீட்டுக் கடன், நகைக்கடன், விவசாயக்கடன் உள்ளிட்டவைகளில் ஏற்படப்போகும் தாக்குதல்களால் அவர்களும் வீதிக்கு வரக்கூடிய சூழல்கள் வரவிருக்கிறது. இந்தியாவின் அசைக்க முடியாத சக்தி என உலக நாடுகளுக்கு நீங்கள் ஏற்படுத்தி வைத்துள்ள உங்கள் இமேஜ் பாதிப்புக்குள்ளாகும் என எவ்வித தயக்கமுமின்றி சொல்லியிருக்கிறார்கள். மோடியால் ஜீரணிக்க முடியவில்லை.

இதுகுறித்து ஆலோசனைகள் தெரிவித்த வல்லுநர்கள், அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான கணிசமான தொகையை வங்கியில் போடாமல் ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் கைகளில் கொடுத்து விட வேண்டும். குடும்பத்துக்குத் தேவையான அனைத்து சமையல் பொருட்களும் கொடுக்கப்பட வேண்டும். இது மட்டுமே தற்காலிக தீர்வு. அந்த 3 மாதத்தில் பொருளாதாரத்தை வலிமையாக்கும் நடவடிக்கையில் இறங்கலாம். இதைத் தான் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் செய்து கொண்டிருக்கின்றன.

பெரும்பாலான வணிக நிறுவனங்கள் லாக் டவுன் பீரியடில் பெரிதும் பாதித்துள்ளது. ஊரடங்கு முடிந்து அவைகள் தொழில் தொடங்க முற்படும்போது. ஏற்கனவே வாங்கியுள்ள கடன்கள் சிக்கல்களை உருவாக்கும். அதனால் வணிக நிறுவனங்களையும் கடன் தருகிற வங்கிகளையும் ஒரே சேர பாதுகாக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்படும். இதனைச் சமாளிக்க, தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கடன் தொகையை ரிசர்வ் வங்கியே அச்சிட்டு தரலாம். இப்படி அச்சிடுவதற்கு விதிகளில் இடமிருக்கும் சில திருத்தங்களையும் மத்திய அரசு இடைக்கால ஏற்பாடாகச் செய்யலாம் என நிதி ஆலோசகர்கள் தெரிவித்தனர் என்கின்றனர்.

 

bjp



இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாசிடம் இரு முறை ஆலோசித்துள்ள பிரதமர் மோடி, நிதி ஆலோசகர்கள் தெரிவித்த யோசனைகளை விவரித்திருக்கிறார். உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, கரோனாவுக்கு முன்பே இந்தியாவின் பொருளாதாரம் திருப்திகரமாகக் கிடையாது. கரோனா தாக்கத்தால் மேலும் மோசமாகியிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டமும், சட்டம் ஒழுங்கும் சரி செய்யப்பட வேண்டும். இதைச் சரி செய்யலைன்னா... ஒட்டுமொத்த பழியும் நம் ஆட்சி மீதுதான் விழும்; கொந்தளிப்பும் உருவாகும் என பாஜகவின் முதல்நிலை அமைச்சர்களான ராஜ்நாத்சிங், அமீத்ஷா, நிதின் கட்கரி, சதானந்த கவுடா, நரேந்திரசிங் தோமர், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பலரும் மோடியிடம் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, இந்தியாவின் டாப் டென் லெவலில் உள்ள அனைத்து தொழிலதிபர்களிடமும் தனிப்பட்ட முறையில் விவாதித்த மோடி, இந்த ஆட்சியின் வளர்ச்சிக்கு எத்தனையோ வழிகளில் உதவியிருக்கிறீர்கள். இப்போதைய நெருக்கடியான சூழலிலும் உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, உங்கள் நிறுவனத்தில் ஆட்குறைப்பும் சம்பள குறைப்பையும் செய்து விடாதீர்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டும். குறைப்பதன் மூலம் உருவாகும் பிரச்சனைகளை உணர்ந்து அதனைக் கைவிடுவது இந்த ஆட்சிக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி எனக் கோரிக்கை வைத்தார். அதற்கு ஒத்துழைப்பு தருவதாகத் தொழிலதிபர்கள் சொல்லியிருந்தாலும் இனி வரும் நாட்களில்தான் இதன் உண்மை முகம் வெளிப்படும்.
 

http://onelink.to/nknapp


இதனையடுத்து அனைத்து அமைச்சர்களுக்கும் அவசரமாக இரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. முதல் உத்தரவு நிதி திரட்ட வேண்டும். இரண்டாவது உத்தரவு, அவரவர் துறைகளின் கட்டுப்பாட்டுக்குள் வரும் தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பும் சம்பள குறைப்பும் செய்யாமலிருக்க வலியுறுத்த வேண்டும். இவைகளில் மத்திய அமைச்சர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால், இந்த இரண்டு உத்தரவுகளையும் நிறைவேற்றுவதில் மூத்த அமைச்சர்கள் சிலரைத் தவிர மற்றவர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 7 ஆண்டுகளாக தொடர்கிறது மோடி அரசு. குஜராத் மாடல் என்கிற அரசியலை முன்னிறுத்தி, அனைத்து துறைகளின் முடிவுகளையும் பிரதமர் அலுவலகம் எடுப்பதால் அமைச்சர்கள் பெரும்பாலும் பொம்மைகள்தான். ஓரிருவரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் தங்கள் அலுவலகத்துக்கு தினமும் வந்து போவார்கள். பிரதமர் அலுவலகத்திலிருந்து வருகிற கோப்புகளில் கையெழுத்திடுவார்கள். அனைத்து முடிவுகளும் பிரதமர் அலுவலகமே எடுத்துவிடுவதால் இவர்களும் அதற்குப் பழகி விட்டனர். இப்படிப்பட்ட சூழலில், தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அவர்களிடம் பொறுப்பைக் கொடுப்பதால் திணறுகிறார்கள். மிரண்டு போகிறார்கள்.

ஒவ்வொரு அமைச்சரும் தனது கட்டுப்பாட்டுக்குள் வரும் தனியார் தொழில் நிறுவன அதிபர்களைத் தொடர்புகொண்டு வேலையிழப்பைச் செய்து விடாதீர்கள் என வலியுறுத்துவதே அவர்களுக்குப் பெரிய சாதனையாக இருக்கிறது. இந்த நிலையில், நிதி திரட்டுவதென்பது பெரிய சுமையாகக் கருதுகிறார்கள் மத்திய அமைச்சர்கள். தொழிலதிபர்களை அவர்கள் தொடர்பு கொள்ளும்போது, பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஏற்கனவே பேசிவிட்டனரே. புதிதாக நீங்கள் பேசுகிறீர்கள் என வேறு ஒரு தொனியில் கேட்கின்றனர். இதனால் நொந்து போன அமைச்சர்கள் பலரும், பெரும் முதலாளிகளுக்கு கடனாகக் கொடுத்துள்ள சுமார் 8 லட்சம் கோடியை வசூலிக்க திட்டமிடாமல் அதனை வாராக் கடனாக அறிவிக்கச் செய்ததிலிருந்தே சீரழிந்து போனது பொருளாதாரம் எனப் புலம்பி வருகின்றனர். அதனால், நிர்வாக தந்திரம் தெரியாதவர்களாக அமைச்சர்கள் இருப்பதும் நிதி திரட்டுவதில் பின்னடைவைச் சந்தித்துள்ளது மோடி அரசு.

இதுவரையில், இந்தியாவின் நிதி கட்டமைப்பு வலிமையாக இருக்கிறது எனச் சொல்லி வந்தவர்கள், கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைச் சரி செய்ய கஜானாவைத் திறக்க மறுக்கிறார்கள். காரணம், கஜானாவில் இல்லை என்பதுதான். இந்தியா முழுவதும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மட்டுமே 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை வரிபாக்கியாக வைத்திருக்கிறது மோடி அரசு. இந்தச் சூழலில், விரைவில் உருவாகப் போகும் வேலையில்லா திண்டாட்டத்தை எப்படி மோடி சமாளிக்கப் போகிறார் எனத் தெரியவில்லை.


பொருளாதாரத்தை விட மக்களின் உயிர்தான் முக்கியம் எனச் சொல்லி, பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைத்து வருகிறார் மோடி. கரோனாவால் உயிரிழப்பு ஏற்படுவதை விட வேலையிழப்பால் பறிபோகும் உயிர்கள்தான் மோடியை அதிர வைக்கப்போகிறது. மோடி 'ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது’ என்கிறார்கள் உளவுத் துறையினர்.