தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசிய அரசியலில் எப்போதும் தவிர்க்க முடியாதவராகவே இருந்திருக்கிறார். 1980களின் இறுதியில் இவரின் இலங்கை பயணம் என்பது அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஈழத்திலிருந்த நாட்களை என்னால் எப்போழுதும் மறக்க இயலாது என்று அவரே பலமுறை கூறியிருக்கிறார். இந்நிலையில் நம்முடைய நக்கீரனின் சரித்திரம் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய அரசியல் அனுபவங்களை கூறிவரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பயணம் குறித்தும் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியபோது, " நான் போன உடனே தலைவர் (பிரபாகரன்) சொன்னாரு, " நாங்க தான் நல்லா சாப்டுட்டு இருக்கிறோமே, நீங்க ஏன் சாப்பிடாம இருக்கிறீங்க. சாப்பிடுங்க இன்னிக்குனு. அப்புறமா மீன் ரெடி பண்ணிக் கொண்டு வந்தாங்க. அத நான் சாப்டேன். அப்புறமா அவங்க எது கொடுத்தாலும் நான் சாப்பிடுவேன். ஒரு நாள் நைட்ல ரொம்பப் பசியோட இருப்பிடத்துக்கு திரும்ப போறோம். ஒரு மான சமைச்சு கிராமத்துக் காரங்க கொண்டு வராங்க. மான் கறினு சொன்ன உடனே படுத்துக் கெடந்த நான் துள்ளி எந்திரிச்சு ஆசையா சாப்பிட்டேன்.
நாங்க நடந்து போற வழியில பாம்பு போகுது. உடும்பு குறுக்க ஓடுது. ஒரு சமயம் நாங்க கொடுத்த நம்பர் மெசேஜ் தப்பா போய் நாங்க போக வேண்டிய படகு வரல. அதனால திரும்பி போயி ஒரு மரத்தடில தான் தூங்கினோம். என் பக்கத்துல படகுத் தலைவர் பாலன் படுத்திருக்காரு. விடியக் காலைல மரத்துல இருந்து ஒரு பெரிய கண்ணாடி விரியன் பாம்பு எனக்கும் அவருக்கும் நடுவுல விழுந்து யார் மேலயும் படாம போகுது. அது கொத்திச்சுனா அப்போவே உயிர் போயிருக்கும்.
நடந்து போக முடியாம தண்ணி இருக்குற இடத்துல தம்பி அஜித் தான் என்ன தூக்கிட்டு போவான். ஒரு நாள் ராத்திரி, "அண்ணே! அண்ணே! தள்ளிக்கோங்க... தேளுனு" தேள அடிக்கிறான். நான், தலைவர், கிட்டுவும் உக்காந்து சாப்டுட்டு இருந்தப்போ ஒரு நட்டுவாக்காலி வந்துடுச்சு. என்ன விலகிக்க சொல்லி கிட்டு ஒரு கம்ப எடுத்து அத அடிக்கிறாரு. இதெல்லாம் யாருக்கும் கிடைக்காத அனுபவங்கள். நான் உயிரோட திரும்பி வருவேன்னு நம்பிக்கையே இல்ல எனக்கு" என்றார்.