
'சின்ன கலைவாணர்' எனப் போற்றப்பட்ட பகுத்தறிவாளர் நடிகர் விவேக்கின் மரணம், திரைத்துறையினரையும் கடந்து அனைத்துத் தரப்பினரிடம் ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மரணத்தை ஜீரணிக்க முடியாமலும், நம்ப முடியாமலும் தவித்துக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா உலகம்!
விவேக்கின் சொந்தப் பெயர் விவேகானந்தன். புரட்சியாளர் விவேகானந்தரின் நினைவாக அவரது பெயரை எனது பெற்றோர்கள் தனக்கு சூட்டி மகிழ்ந்ததாக ஒருமுறை ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் விவேக். பள்ளிப் படிப்பை சொந்த ஊரான கோவில்பட்டியிலும், கல்லூரிப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் முடித்த விவேக், எம்.காம் பட்டதாரி!
கல்லூரி படிப்பை முடித்த கையோடு தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் விவேக். அப்படி எழுதிய தேர்வுகளின் போது இளநிலை உதவியாளருக்கான தேர்வில் வெற்றி பெற்று சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு வேலையும் அவருக்குக் கிடைத்தது.

இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு கொண்ட விவேக், அரசுப் பணியில் இருந்து கொண்டே, சினிமா வாய்ப்புகளையும் தேடி வந்தார். சென்னையில் இருந்த 'மெட்ராஸ் ஹ்யூமர் க்ளப்' உரிமையாளர் கோவிந்தராஜின் அறிமுகம் விவேக்கிற்கு கிடைக்க, அவரது க்ளப்பில் பல்வேறு காமெடி ஷோக்களை நடத்தி அசத்தியிருக்கிறார்.
அவரது காமெடி ஷோக்கள் தமிழ் சினிமா ஜாம்பவான்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்தச் சமயத்தில், ஒருமுறை ஹ்யூமர் க்ளப்புக்கு விசிட் அடித்தார் இயக்குநர் கே.பாலச்சந்தர். விவேக்கின் காமெடி ஷோவை பார்த்தார். அவருக்கு விவேக்கை அறிமுகப்படுத்தி வைத்தார் கோவிந்தராஜன்.

விவேக்கிடம் 30 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்த பாலச்சந்தர், விவேக்கின் காமெடி ஷோக்களின் ஸ்க்ரிப் ரைட்டர் விவேக் தான் என்பதையறிந்து, ‘’என்னிடம் ஸ்க்ரிப் ரைட்டராக சேர்ந்து கொள்கிறீர்களா?‘’ என்று பாலச்சந்தர் கேட்க, ‘’இது என் பாக்கியம் அய்யா. இந்த நிமிடத்திலேயே உங்கள் பின்னால் வருகிறேன்‘’ என்று சொன்ன விவேக்கின் முதுகைத் தட்டிக்கொடுத்து விட்டு, ’’அடுத்த வாரம் அலுவலகத்துக்கு வா‘’ என்று சொல்லிவிட்டுச் சென்றார் பாலச்சந்தர்.
மறுநாளே தனது அரசு வேலையை உதறினார் விவேக். பாலச்சந்தர் சொன்ன தேதியில் அவரது அலுவலகத்துக்குச் சென்று அவரது உதவியாளராகச் சேர்ந்து கொண்டார். அது 1987 ஆம் வருடம். அந்தச் சமயத்தில், 'மனதில் உறுதி வேண்டும்' என்கிற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் பாலச்சந்தர்.

படத்தின் நாயகி சுகாசினிக்கு கதையில் ஒரு சகோதரர் உண்டு. சுகாசினியின் தம்பி கேரக்டருக்கு பலரையும் தேர்வு செய்து பார்த்தார் பாலச்சந்தர். அவர்களுக்கான வசன உச்சரிப்புகளை விவேக் சொல்லிக் கொடுக்க, நடிக்க வந்த நபர்களால் பாலச்சந்தரை திருப்தி செய்ய முடியவில்லை. ஆனால், வசனம் சொல்லிக் கொடுத்த விவேக்கின் உடல்மொழியையும், அவர் உச்சரிக்கும் ஸ்டைலையும் கவனித்த பாலச்சந்தர், சகோதரர் கேரக்டருக்கு விவேக்கையே தேர்வு செய்தார்.

ஸ்க்ரிப்ட் ரைட்டர் உதவியாளராக இணைந்த விவேக்கை நடிகராகவும் மாற்றினார் பாலச்சந்தர். 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் விவேக்கின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதனையடுத்து, பாலச்சந்தர் இயக்கிய அனைத்துப் படங்களிலும் விவேக் நடித்தார். பாலச்சந்தரின் அறிவுறுத்தலின்படி, மற்ற இயக்குநர்களின் படங்களிலும் நடிக்கத் துவங்கிய விவேக், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராகப் பரிணமித்தார். அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் துவங்கியது. 1990-களில் அவர் நடிக்காத படங்களே இல்லை என்கிற அளவுக்கு உச்சத்தில் இருந்தார் விவேக் !

தனது படத்தின் மூலம் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பல சமூக கருத்துகளைப் பதிய வைத்தார் விவேக். காமெடியோடு கலந்த சமூக சீர்த்திருத்தக் கருத்துகளை விதைத்து ரசிகர்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்ததில் அவருக்கு இணை அவர்தான். இதனாலேயே அவருக்கு 'சின்ன கலைவாணர்' என்கிற பட்டம் சூட்டப்பட்டது. சினிமாவின் விவேக் பேசும் வசனங்கள் பெரும்பாலும் அவரால் எழுதப்பட்டவைதான்! உச்சபட்ச நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவருடனும் இணைந்த காமெடி நடிகர்களில் விவேக்கிற்கு தனி இடம் இருக்கிறது.

நகைச்சுவையில் தனக்கென்று ஒரு பாதையை வகுத்துப் பயணப்பட்டு 200 படங்களுக்கும் அதிகமாக நடித்து முடித்த விவேக், வெள்ளைப் பூக்கள் , நான் தான் பாலா உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். ஹீரோ ரோலும் அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதாக இயக்குநர் பாரதிராஜா பாராட்டியதைப் பலரிடம் சொல்லி பெருமிதப்பட்டிருக்கிறார் விவேக்.

திரைத்துறையில் இருந்தாலும் சமூகத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்த விவேக், ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது சிஷ்யராக மாறினார். அதனை அடுத்து, செழிப்பான தமிழகத்தை உருவாக்க 1 கோடி மரங்களை தமிழகம் முழுவதும் நடுவேன் என்று சொல்லி அதனைச் செயல்படுத்திக் காட்டினார். இயற்கை மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த விவேக், பசுமைத் திட்டங்களை வளர்க்கவும் உருவாக்கவும் எந்த ஒரு நிகழ்ச்சியை யார் நடத்தினாலும் அதில் கலந்து கொண்டு சிறப்பிப்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மகன் இறந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அந்தச் சோகத்தில் இருந்து மீள மிகவும் சிரமப்பட்டார். இதனால் பட வாய்ப்புகள் மீதும் அவரால் கவனம் செலுத்த முடியாததால் வாய்ப்புகளும் குறைந்து போனது. மகன் இழந்த சோகத்தை ஜீரணித்துக் கொண்டு ஓரிரு வருடங்களாகத்தான் மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கினார் விவேக்!

ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் அவர் மறைவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. திரையுலகமே கண்ணீர்க் கடலில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நிழல் உலகமான சினிமாவையும் நிஜ வாழ்க்கையையும் ஒரே மாதிரி நேசித்த 'மக்கள் கலைஞன்', 'பகுத்தறிவாளன்', 'சின்ன கலைவாணர்' விவேக்கின் மறைவு தமிழ் சினிமாவுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் பேரிழப்புதான்!