Skip to main content

"அண்ணாமலையை கோமாளின்னு சொல்லலாமா? முடிந்தால் வழக்கு போடுங்க எனக்கு பயமில்லை..." - குஷ்பு பேட்டி

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

ரத

 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த குஷ்பு செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, " ஜிஎஸ்டி விலையால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக திமுக குற்றம் சாட்டுகிறது. ஜிஎஸ்டி தமிழ்நாட்டுக்கு மட்டுமா அமல்படுத்தப்படுகிறது. ஏன் தமிழகத்தில் மட்டும் பால் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை குறைக்கப்படாமல் இருக்கிறது. இந்த அரசாங்கம் வந்ததிலிருந்து எந்த ஒரு வேலையாவது ஒழுங்காக நடைபெற்றுள்ளதா? நவம்பர் மாதம் மழை வரும் என்று திமுக அரசுக்குத் தெரியாதா?

 

இந்த வருடம் மட்டும்தான் மழை வந்துள்ளதா? மழைநீர் வடிகால்களை எப்போது சரி செய்திருக்க வேண்டும். வெயில் காலங்களில் எல்லாம் படுத்து தூங்கிட்டு, மழைக்காலத்தில் வடிகால்களை எப்படிச் சரிசெய்ய முடியும். ஒரு மாதத்தில் செய்ய வேண்டிய வேலையை நான்கு மாதத்தில் செய்யலாம் அதன் மூலம் தங்களுக்குப் பணம் வந்தால் சரி என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

 

இதுவரை எத்தனை பேர் வடிகால்களில் விழுந்து உயிரிழந்துள்ளார்கள். எதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றால் இதுவரை எதுவும் இல்லை. பணம் கொடுத்தால் எல்லாம் சரியாகி விடுமா? போன உயிரை அவரது அம்மாவுக்கு இந்த அரசாங்கம் கொடுத்து விடுமா? எந்தத் துறையிலும் இந்த அரசாங்கம் செயல்படவே இல்லை; பணம் சம்பாதிக்க என்ன செய்ய முடியும் என்பதிலேயே அனைவரும் குறியாக உள்ளார்கள். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பணத்தைத் தவிர வேறு நோக்கம் எதுவும் இல்லை. அவர்கள் வேண்டுமானால் என் மீது வழக்குத் தொடுத்துக்கொள்ளட்டும். 

 

தமிழகத்தில் தினமும் நடப்பதைத்தான் நான் சொல்கிறேன். குற்றச்சாட்டு கூற வேண்டும் என்பதற்காக நடக்காத ஒன்றை நான் கூறவில்லை. அரசு மீது எந்தக் குறை சொன்னாலும் காது கொடுத்துக் கேட்கவே அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் அவர்கள் மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார்கள். ஆளுநர் மீது குறை கூறுகிறார்கள். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களைக் காதில் கூட வாங்கத் தேவையில்லை. நான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுவேன். தேவையில்லாத பிரச்சனைகளை அவரிடம் பேசுவதாலும் அரசாங்கம் சரியாக இயங்காமல் இருப்பதாலும் ஆளுநர் தலையிட வேண்டிய அவசியம் இருக்கிறது.

 

தமிழகத்தில் இருக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கு மூல காரணம் இங்கிருக்கும் திமுக ஆட்சிதான். மக்கள் நலன் சார்ந்து அவர்கள் ஒருபோதும் சிந்திப்பது இல்லை. எப்போதும் வருமானத்தை எதிர்பார்க்கிறார்கள். ஏதாவது தவறு என்று சொன்னால் திட்டுகிறார்கள், அவமானப்படுத்தப் பார்க்கிறார்கள். செந்தில் பாலாஜியிடம் கேள்வி எழுப்பினால் எங்கள் கட்சித் தலைவரைக் கோமாளி என்று சொல்கிறார். யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள், நாங்கள் முதல்வரை இழிவாகப் பேசுகிறோமா? ஏனென்றால் எங்களுக்கும் அவர் முதலமைச்சர், ஆகையால் நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையை தற்போதும் எழுப்புகிறோம்.

 

பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை முதலில் இவர்களைக் கொடுக்கச் சொல்லுங்கள், மேடையில் அமைச்சர் இருக்கின்ற போதே தவறான தகவல்களை திமுகவைச் சேர்ந்தவர் தெரிவிக்கிறார். என்னைப் பற்றி அவர் அவதூறு பேசுகிறார். அமைச்சர் அதே மேடையில் இருந்துகொண்டு அதைக் கேட்கிறார். எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அவர் பேசுவதை நிறுத்தச் சொல்லவில்லை. ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறார் அமைச்சர். இப்போ தெரிகிறதா நான் ஏன் திமுகவிலிருந்து வந்தேன் என்று, பெண்களுக்கு மிகவும் பாதுகாப்புக் குறைவான கட்சி திமுக, யாரையும் மதிக்கமாட்டார்கள்" என்றார்.