சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. தற்போது அதே போலவே தக்காளியின் விலையும் கிலோ 160 ரூபாய் என்ற அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இந்த அளவுக்குத் தக்காளியின் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பது குறித்த கேள்வியை வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜாவிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு.
"தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் வருடா வருடம் மழைக்காலங்களில் விலை ஏறுவது என்பது சஜகமே. மழைக்காலங்களில் தக்காளிச் செடிகளில் தண்ணீர் தேங்கி விடுவதால் பலம் இழந்து தக்காளி அழுகி விடுவதால் அதன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. அதன் காரணமாகத் தேவைக்கும் குறைவான அளவு உற்பத்தி இருக்கிறது. குறிப்பாகச் சென்னைக்கு 15 லாரி தக்காளி தேவைப்படுகிறது என்றால், அது 10 லாரி, 5 லாரி என்று சுருங்கிப் போய் விடுவதால், டிமாண்ட் அதிகரித்து விலை அதிகமாகிறது. இதுதான் விலை ஏற்றத்துக்குக் காரணமே தவிர, வேறு எந்த காரணமும் இல்லை.
இது ஒரு தற்காலிக விலை ஏற்றம்தான், எனவே இதனை நினைத்து யாரும் பயப்படத் தேவையில்லை, சில நாட்களில் விலை பழைய நிலைக்குச் செல்லும் என்பது உறுதி. பெரு நிறுவனங்களில் தக்காளி உள்ளிட்ட பொருட்கள் விலை குறைவாகவும், சில்லறை விற்பனை கடைகளில் விலை அதிகமாகவும் இருப்பதாகக் கூறுகிறீர்கள். அதற்கும் காரணம் இருக்கிறது. பெரிய கடைகளில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட பொருட்களை குடோன்களில் வைத்துக்கொள்ள போதுமான வசதி உண்டு. அவர்கள் விவசாயிகளிடம் இருந்து ஆயிரக்கணக்கான மூட்டைகளை வாங்கி தங்களின் குடோன்களில் வைத்துக் கொள்கிறார்கள். எனவே இந்த மாதிரியான தருணங்களில் அவர்கள் சிறிய கடைகளில் விற்பதைக் காட்டிலும் சற்று விலை குறைவாக விற்கிறார்கள். அதற்காக நாம் சிறிய கடை வைத்திருப்பவர்களைக் குறை கூற முடியாது. ஏனென்றால் அவர்கள் கோயம்பேடு சென்று ஒரு மூட்டை தக்காளி வாங்கி வந்து விற்கிறார்கள் என்றால், அதை எடுத்து வரப் போக்குவரத்து செலவே கிலோவுக்கு 10 ரூபாய் ஆகும். அதையும் தாண்டி நான்கு, ஐந்து கிலோ வீணாகப் போய்விடும். அதை எல்லாம் சரி செய்துதான் விற்க வேண்டும்.
பெரிய கடைகளைப் போல் அந்த கடைக்காரர் பல பொருட்களை விற்க மாட்டார். ஒரு மூட்டை தக்காளி தான் அவரின் ஒருநாள் பிழைப்பு. எனவே பொருட்களின் வரத்துக் குறையும் போது இவர்களால் விலையைக் குறைத்து விற்க முடியாது. சந்தையில் வாங்குவதை விடச் சற்று அதிகமாகத்தான் விற்க முடியும். அதுவும் இந்த மாதிரியான மழைக் காலங்களில் தான். இந்த குறையும் விரைவில் சரி செய்யப்படும். அதையும் தாண்டி, நம் மக்களிடமும் சில விஷங்களை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. ஒரு நகைக்கடைக்குப் போவார்கள், ஒரு ஜவுளிக்கடைக்குப் போவார்கள், பொருளை வாங்குவார்கள், எந்த வித பேரமும் பேசமாட்டார்கள். ஆனால் ஒரு கத்தை கீரை 4 ரூபாய் என்றால், அவரிடம் 2 கத்தை 5 ரூபாய்க்குத் தருவீர்களா என்று கேட்பார்கள். ஆனால் கீரை கட்டை கேட்பவர்கள் பெரிய கோடீஸ்வரர்களாகத்தான் இருப்பார்கள். அதே போல் பூ கடைக்காரர் முழம் 3 ரூபாய் என்றால், 2 ரூபாய் போட்டுக்கொண்டு கொடுங்கள் என்று பேரம் பேசுவார்கள். எனவே இவரைப் போன்றவர்களிடம் பேரம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பெரிய நிறுவனங்களும் இவர்களும் ஒன்றல்ல. இந்த விலை உயர்வு தற்காலிகமானது. விரைவில் அது முற்றுப்பெறும்" என்றார்.