தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து வெறுப்புணர்வுடன் பதிவுகளிட்டு
வருகிறார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா.
அரசியலில் போட்டிகள் நிறைந்திருந்தாலும் பொதுத்தளத்தில் மாற்றுக் கட்சியினரை மரியாதை குன்றாமல் விமர்சனம் வைப்பதே சரியான அரசியல் மாண்பு. ஆனால் பா.ஜ.கவின் தேசிய செயலாளராக இருக்கும் எச்.ராஜா மாற்றுக் கட்சியினரை நோக்கி தொடர்ந்து அருவருக்கச் செய்யும் வகையில் விமர்சனம் வைத்து வருகிறார்.
இன்று காலை அவரது ஃபேஸ்புக் பதிவில், ‘திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் பெரியார் சிலை விரைவில் அகற்றப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு சமூக அரசியல் தளங்களில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததை ஒட்டி இப்போது அந்த பதிவை நீக்கியுள்ளார். இவ்வாறு ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லி, எதிர்ப்புகள் எழுந்தவுடன் நீக்குவது எச்.ராஜாவிற்கு புதிதல்ல. சமீபத்தில் பா.ஜ.கவின் தேர்தல் வெற்றி தமிழகத்திலும் தொடருமா என்றொரு முகநூல் ஓட்டெடுப்பை நடத்தி முடிவுகள் எதிராக வரவர அதையும் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தொடர்ந்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திராவிட கட்சிகள் என மாற்றுக் கட்சியினர் அனைவரையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார் எச்.ராஜா. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தோல்வியை கிண்டல் செய்யும் விதத்தில் பாடையில் போவது, சவக்குழியில் கிடப்பது போன்ற படங்கள் போடுவது, காங்கிரஸின் தோல்விகளை குறித்து, ராகுல் காந்தி குறித்து நாகரீகமற்ற பதிவுகள் இடுவது, பெரியார் குறித்து தொடர்ந்து தரக்குறைவாக பேசுவது என்று அடிப்படை மாண்பற்ற அரசியலை முன்னெடுத்து வருகிறார் எச்.ராஜா.
அதிலும் பெரும்பாலான சமயங்களில் எந்தவித அடிப்படைகளும் இல்லாத குற்றச்சாட்டுக்களையும் அவதூறுகளையுமே முன்வைத்து எழுதப்படுகின்றன ராஜாவின் பதிவுகள். நாட்டை ஆளும் கட்சியின் தேசிய செயலாளர் ஒருவர், தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து இதுபோன்ற அருவருப்பான கருத்துக்களை வெளியிடுவதைக் குறித்து, பா.ஜ.கவின் மேல்மட்ட தலைவர்களிடம் இருந்து இதுவரை கடுமையான கண்டனங்களோ நடவடிக்கையோ எதுவும் வரவில்லை.
அரசியல் களங்களிலும் சரி, தொலைக்காட்சி விவாதங்களிலும் சரி ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்காமல், அவதூறுகள் பரப்பு, சாதி மத இன மொழி தேச உணர்வுகளை தூண்டி வெறுப்புணர்வை விதைத்து அரசியல் ஆதாயங்கள் தேடுவதே பா.ஜ.க வின் பாணியாக இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இதையும் தனது அரசியல் வியூகமாக பார்க்கிறதா பா.ஜ.க?அல்லது இனியாவது ஆரோக்கியமான அரசியல் செய்யச் சொல்லி எச்.ராஜா மேல் கண்டனங்களும் நடவடிக்கைகளும் பாயுமா?