தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. கலைஞரின் நேர்முக உதவியாளராக சுமார் அரைநூற்றாண்டு காலம் பணியாற்றிய சண்முகநாதன், சட்டமன்றம், தலைமைச் செயலகம், சுற்றுப் பயணங்கள் என கலைஞர் எங்கு சென்றாலும், அவரின் நிழலாகவே பின்தொடர்ந்தவர்.
கலைஞரின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றுவதில் சண்முகநாதன் கெட்டிக்காரர். தமிழ்நாடு போலீசில் சுருக்கெழுத்து நிருபராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த சண்முகநாதன், எதிர்க்கட்சித் தலைவர்கள் மேடையில் பேசுவதை குறிப்பெடுத்து அரசுக்கு அனுப்பவேண்டிய வேலையை செய்து வந்தார்.
கலைஞரிடம் சண்முகநாதன் பணிக்கு சேர்ந்த அனுபமவே சற்று வித்தியாசமானது. அப்போதெல்லாம் லைவ் ரிலே கிடையாது. அதனால், மேடையில் பேசும் எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சை உடனுக்குடன் பதிவு செய்து எழுதி மேலிடத்துக்கு அனுப்பும் பணியை காவல் துறையின் துப்பறியும் பிரிவினர் செய்வார்கள். இதைவைத்து தான் சம்பந்தப்பட்ட தலைவர்களின் மீது வழக்குப் பதியப்படும். இப்படித்தான் ஒருமுறை கலைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்படி என்ன நாம் தவறாகப் பேசிவிட்டோம் என போலீஸிடமிருந்த பேச்சு நகலை வாங்கிப் பார்த்த கலைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், சண்முகநாதன் ஒரு எழுத்து கூட மாறாமல், கலைஞர் பேசியிருந்ததை அப்படியே எழுதியிருந்தார். யார் இவ்வளவு தெளிவாக தனது பேச்சை எழுதிக் கொடுத்திருப்பார்கள் என்று விசாரித்த போது தான், சண்முகநாதன் பற்றி கலைஞருக்கு தெரியவந்தது. இதையடுத்து, முதல்முறையாக கலைஞர் அமைச்சரானபோது, சண்முகநாதனை தனக்கு உதவியாளராக சேரும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அரசுப் பணியை உதறிவிட்டு வந்த சண்முகநாதன், கலைஞரின் உயிர் நிழலாக நடமாடினார். 1967 ஆம் ஆண்டு முதல் கலைஞரின் இறுதிக்காலம்வரை கலைஞரின் உதவியாளராக இருந்த சண்முகநாதன் பல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.
கலைஞருக்கும் சண்முகநாதனுக்குமான உறவு இறுதிவரை நல்ல நெருக்கத்துடனேயே இருந்தது. ஒருமுறை சண்முகநாதனைப்பற்றி கலைஞர் கூறுகையில், “சண்முகநாதன், என் அலுவலகத்தில் வேலைபார்ப்பவர் என்பதைவிட, என் அகத்தில் இருந்து பணியாற்றுபவர். சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்திலேயே தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்து விட்டவர்” என நெக்குருகிப் பேசினார்.
சண்முகநாதன் உயிரிழந்திருப்பது திமுகவினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.