2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா எனும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் துவங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற மக்களும் பயன்பெறலாம். நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெறுவதற்கு தனித்தனியே வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மோட்டார் வாகனங்கள் வைத்துள்ளோர், மாதம் ரூ. 10,000 வரை வருமானம் ஈட்டுவோர் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியாது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இதற்கு ஆதார், பான் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்படுகின்றன.
2018ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டம் கடந்த 2020ம் ஆண்டு டிஜிட்டலாக்கப்பட்டது. 2020ல் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரத் தினத்தன்று செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டிஜிட்டல் மயமாக்கி சுகாதார அடையாள அட்டையை அறிமுகம் செய்தார். இந்த அடையாள அட்டை மூலம், பயனாளிகள் முதல் முறை மட்டும் தங்கள் நோய் குறித்து மருத்துவரிடம் பதிவு செய்தால் போதுமானது. அதன்பிறகு அவர்கள் ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்குச் செல்லும்போது அந்த சுகாதார அடையாள அட்டையைக் கொண்டே மருத்துவர்கள் அவர்களின் நோய் குறித்தும் கடைசியாக அவர்கள் அதற்காகக் கொண்ட சிசிச்சை குறித்தும் அறிந்துகொள்ள முடியும். இந்த சுகாதார அடையாள அட்டையில் ஒவ்வொருவரின் நோய், அது சார்ந்த மருத்துவம் குறித்து சேகரிக்கப்படும் அனைத்து தகவலும் பாதுகாக்கப்படும். இந்தத் திட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி வரை நாடு முழுவதும் 24.33 கோடி நபர்கள் ஆயுஷ்மான் பாரத் அட்டையைப் பெற்றுள்ளனர்.
மருத்துவத்திற்காக அதிக செலவு செய்ய முடியாத குடும்பங்களுக்காக கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதைத் தான் தற்போது வெளியான சி.ஏ.ஜி. அறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. இந்தக் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேட்டின் அச்சாணியாக ஆதார் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்டுள்ள தகவலின்படி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 9999999999 என்ற போலி மொபைல் எண்ணைக் கொண்டு நாடு முழுவதும் 7.5 லட்சம் நபர்களின் ஆதார் இணைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில், வெறும் ஏழு ஆதார் அட்டைகளின் எண்ணைக் கொண்டு 4,761 ஆயுஷ்மான் பார்த் அட்டை பெறப்பட்டுள்ளது.
குறிப்பாக நோயாளிகள் இறந்த பின்னரும், ஆயுஷ்மான் பாரத் மூலம் அவர்களின் பெயரில் சிகிச்சைக்கான பணம் செலவிடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மொத்தமாக இதுவரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், ரூ. 12 லட்சம் முதல் ரூ. 22 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குஜராத் மாநிலம் காந்தி நகரில் கடந்த 18ம் தேதி நடந்த ஜி.20 நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டில், உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூ.எச்.ஓ.) தலைவர் டெட்ராஸ் அதானோம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் காந்தி நகரில் உள்ள ஒரு சுகாதார மருத்துவ மையத்திற்குச் சென்றேன். அங்கு, ஆயிரம் வீடுகளுக்கு வழங்கப்படும் ஆரம்ப சுகாதாரச் சேவைகளால் ஈர்க்கப்பட்டேன். இந்தியாவில் தொலைப்பேசி மூலம் மருத்துவம் வழங்கப்படுகிறது. இந்த சேவைகளுக்கு உள்நாட்டில் மருத்துவக் காப்பீடு அட்டைகள் சிறந்த சிகிச்சைகளை அளிக்கின்றன. உலகளாவிய டிஜிட்டல் ஹெல்த் முன்முயற்சியில் தலைமை தாங்கியதற்காக இந்தியாவின் ஜி20 தலைமைக்கு நன்றி” என்று கூறினார்.