இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்ட வரலாற்றை
அவ்வளவு சீக்கிரம் அழித்துவிட முடியாது…
இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்ட கருப்பின மக்களின் வரலாற்றை
அவ்வளவு சீக்கிரம் அழித்துவிட முடியாது…
உலகில் எங்கெல்லாம் ஒடுக்குமுறை தாண்டவமாடுகிறதோ, அங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின், குறிப்பாக இளைஞர்களின் மனங்களில் எழுச்சியின் அடையாளமாக இரண்டு பேர் இருப்பார்கள். ஒருவர் சேகுவேரா, மற்றொருவர் பாப் மார்லி. இன்றைய இளைஞர்கள் அணியும் டி ஷர்ட்டுகளே அதற்குச் சான்று. தன் கிடார் மூலம் ஒடுக்குமுறைகைளை எதிர்த்து, அன்பை விதைத்த பாப் மார்லி பற்றிய பாப்கார்ன் குறிப்புகள்...
பாப் மார்லியின் 'One cup of Coffee'
சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வமாக இருந்த மார்லியை, ஜமைக்கா மக்களின் இசை வெகுவாக கவர்ந்தது. பிற்பாலத்தில் பண்ணி வெய்லர் என்று அறியப்பட்ட பள்ளி நண்பன் நிவைல் லிவிங்க்ஸ்டன் உடன் சேர்ந்து பாடல்கள் இசைக்கத் தொடங்கினார் பாப் மார்லி. வறுமை காரணமாக 14 வயதுக்கு மேல் பள்ளிக் கல்வியை தொடர முடியாத சூழலில் வெல்டிங் கடையில் வேலைக்குச் சேர்ந்த மார்லி, கிடைக்கும் நேரத்தில் நண்பர்களுடன் இணைந்து பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார். அக்காலத்தில் சிறு குழுவாக இணைந்து பாடல்கள் இசைப்பது பிரபலமாக இருந்தது. அதனால் பீட்டர் டோஷ், ஜோ ஹிக்ஸ் ஆகியோருடன் ‘வெய்லிங் வெய்லர்ஸ்’ (Wailing Wailers) குழுவில் இணைந்தார். பாடல்கள் பாடத் தெரிந்த மார்லிக்கு, இசைக் கருவிகள் வாசிக்கத் தெரிந்திருக்கவில்லை. ஜோ ஹிக்ஸ் அவருக்கு கிடார் இசைக்க கற்றுக்கொடுத்தார். அப்படிதான் முதன்முதலாக ‘Judge Not', 'One cup of coffee', 'Do You still Love me?', 'Terror' என நான்கு பாடல்கள் அடங்கிய ஆல்பத்தை வெளியிட்டார் மார்லி. ஆனால் அது வெற்றியடையவில்லை.
பாப் மார்லியின் ‘Simmer Down’
ஜமைக்காவின் உள்ளூர் இசை வடிவங்களை இணைத்து ‘ரெகே’ (reggae) எனும் புதிய இசையை உருவாக்கினார் பாப் மார்லி. கிடாரின் சீரான தாளத்தில் ஒலிக்கும் ரெகே இசையில் மக்களின் விடுதலை உணர்வு, கொண்டாட்டம், வலி என யாவும் பிரதிபலித்தன. அதன் தொடர்ச்சியாக ‘வெய்லர்ஸ்’ குழு ‘Simmer Down’ என்ற பாடலை 1964ல் வெளியிட்டது. பெரிய வெற்றிபெற்ற இப்பாடல் 70,000 இசைத்தட்டுகள் விற்பனையாகி, ஜமைக்காவின் நம்பர் 1 பாடலாக திகழ்ந்தது. இதனால் உற்சாகமடைந்த ‘வெய்லர்ஸ்’ குழு, தொடர்ந்து பாடல்களை வெளியிட்டது. எர்னஸ்ட் ரேங்லின், ஜாக்கி மிட்டூ போன்ற ஜமைக்காவின் முன்னணி இசைக்கருவி வல்லுனர்கள் அக்குழுவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
பாப் மார்லியின் ‘Ganja’
கருத்து முரண்பாடு காரணமாக ‘வெய்லிங் வெய்லர்ஸ்’ குழுவிலிருந்து மூன்று பேர் வெளியேறினர். மேலும் தங்கள் பாடலைப் பதிவுசெய்து வெளியிட்ட ஸ்டூடியோவும் சரியான காப்புரிமை தொகையை தராததால், தடுமாறிக்கொண்டிருந்த சூழலில் ரீட்டா ஆண்டர்சன் எனும் பாடகரை திருமணம் செய்துகொள்கிறார் பாப் மார்லி. அவர் மூலமாக ராஸ்தஃபாரி (Rastafari) என்ற மதம் மார்லிக்கு அறிமுகமாகிறது. கிறிஸ்தவ மதத்தின் மற்றொரு பிரிவான ராஸ்தஃபாரி, ஜமைக்காவில் தோன்றிய மதம். கருப்பர்கள் ஆப்பிரிக்காவின் பூர்வக் குடிகள், அவர்கள் அனைவரும் ஆப்பிரிக்காவுக்குத் திரும்ப வேண்டும் என்பன போன்ற கருப்பின விடுதலையை முன்வைக்கும் பண்பாட்டு இயக்கமே ராஸ்தஃபாரி மதம். இதைப் பின்பற்றுவோர் கஞ்சாவைப் புனிதமாகவும் இறைவனுடன் தொடர்புகொள்ளும் வழியாகவும் நம்புகின்றனர். மேலும் இவர்கள் தலைமுடியை வெட்டாமல், நீளமாக சுருள்சுருளாக வளர்ப்பதையும் சடங்காக கொண்டிருக்கிறார்கள். பாப் மார்லியின் தோற்றத்திற்கும் அவரது ‘Ganja’ பாடலுக்கும் பின்னணியாக ராஸ்தஃபாரி மதமே உள்ளது.
பாப் மார்லியின் ‘One Love’
கருப்பின தாய்க்கும் வெள்ளையின தந்தைக்கும் பிறந்த காரணத்தால் பாப் மார்லியை எந்த இன அடையாளத்திற்குள்ளும் சேர்த்துக்கொள்ள அந்த மக்கள் விரும்பவில்லை. ஒடுக்கப்படும் கருப்பின மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த மார்லி, அனைத்து இன மக்களும் மனிதன் என்ற அடிப்படையில் ஒன்றிணைவதையே விரும்பினார்.
நிறவெறியை எதிர்த்து கருப்பின மக்களுக்காக போராடிய மார்க்ஸ் கார்வியின் கருத்துகளில் ஈடுபாடு கொண்ட மார்லி, ஜமைக்கா மக்களின் ஒற்றுமைக்காக ‘Smile Jamaica’ எனும் இசை நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டிருந்தார். அப்போதைய ஜமைக்கா பிரதமர் மைக்கேல் மான்லியின் ஒத்துழைப்பில் இந்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது, பாப் மார்லி குழுவினர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எனினும் உயிரிழப்பு இல்லாமல் அனைவரும் காயங்களுடன் தப்பினர். இது எதிர்க்கட்சி தலைவரான எட்வர்ட் சேகாவின் சதிச்செயல் என்று விமர்சிக்கப்பட்டது. கிடாரை வாசிக்க முடியாவிட்டாலும் இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார் பாப் மார்லி.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்குப் பயணமான பாப் மார்லி, ‘One Love peace concert’ இசை நிகழ்ச்சிக்காக மீண்டும் ஜமைக்கா திரும்பினார். நாட்டு மக்களின் ஒற்றுமையையும் அமைதியையும் வலியுறுத்தும் வகையில், அதுவரை எதிரும் புதிருமாக இருந்த பிரதமர் மான்லியையும், எதிர்க்கட்சித் தலைவர் சேகாவையும் மேடையேற்றி, கை குலுக்க வைத்து ‘one love’ பாடலைப் பாடினார் பாப் மார்லி. இந்த முயற்சிக்காக ஐநா சபை மூன்றாம் உலக நாடுகளுக்கான அமைதிப் பரிசை வழங்கியது.
பாப் மார்லியின் ‘Redemption Song’
கருப்பின மக்கள் ஆப்பிரிக்காவுக்குத் திரும்ப வேண்டும், ஆப்பிரிக்காவே கருப்பின மக்களின் புனித பூமி, அடிமைத் தளைகளிலிருந்து விடுபட்டு ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றிணைய வேண்டும் போன்ற ராஸ்தஃபாரி கருத்துகளை ‘Africa Unite’, ‘Zimbabwe’ போன்ற ஆல்பங்களில் வெளிப்படுத்தினார் பாப் மார்லி. ஆப்பிரிக்க நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி, அம்மக்களின் விடுதலை வேட்கையை மெருகேற்றினார். ஆடம்பரங்களற்ற எளிய மக்களின் இசையே பாப் மார்லியை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது. விடுதலை உணர்வு ததும்பும் வரிகள், பாப் மார்லியின் அடையாளமாக பார்க்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு பிபிசி நிறுவனம் இணையத்தில் நடத்திய வாக்கெடுப்பில் சிறந்த பாடலாசிரியர் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் மார்லி.
கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயத்திற்காக பரிசோதனை செய்ததில், தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ‘Uprising’ ஆல்பத்தின் வெளியீட்டிற்காக மேற்கொண்ட உலக சுற்றுப்பயணத்தின்போது, அவரது உடல்நிலை மேலும் மோசமானது. அதனால் சுற்றுப்பயணத்தை ரத்துசெய்துவிட்டு, ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு தன் தாய்நாடான ஜமைக்காவுக்கு செல்ல விரும்பிய மார்லி, விமானம் மூலம் சென்றபோது உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, தனது 36 வயதில், 1981, மே 11 அன்று உயிரிழந்தார்.
நோய் காரணமாக அவரது சுருள் முடிகள் உதிர்ந்துபோனது, இருப்பினும் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட முடிகளோடு பொதுமக்கள் பார்வைக்கு அவரது உடல் வைக்கப்பட்டது. ராஸ்தஃபாரி முறைகளின் சடங்குகள் செய்யப்பட்டு, அரசு மரியாதையுடன், அவரது கிடாரோடு புதைக்கப்பட்டார் பாப் மார்லி. அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக பராமரித்து வருகிறது ஜமைக்கா அரசு.
பாப் மார்லி எனும் ராபர்ட் நெஸ்டா மார்லியின் பிறந்தநாள் இன்று. (பிப்ரவரி 6)