Skip to main content

"கலைஞர் எப்படி சென்னைக்கு வந்தார்..." - கோவி.லெனின்

Published on 08/08/2018 | Edited on 08/08/2018

கலைஞர் என்ற வார்த்தை சிலருக்கு அமுதம் சிலருக்கு விஷம். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக கலைஞர் கருணாநிதி 50 ஆண்டுகளாக பொறுப்புவகிக்கிறார். ஒரு ஜனநாயகநாட்டில் உட்கட்சி ஜனநாயகம் உள்ள கட்சியில் 50 ஆண்டு காலம் ஒரே நபர் தலைவர் பதவி வகிப்பது சரியா? என்ற கேள்வி எழும். அது சரிதான் என்று நிரூபிக்கும் வகையில் கலைஞரின் 50-ஆண்டுகால அரசியல் வாழ்க்கை அமைந்திருக்கிறது.   

 

kalaingar

 

 

 

கலைஞர் எது செய்தாலும் அது சரியா? தவறா? என்ற பட்டிமன்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவரை பற்றி அறிந்தவர்களும் அறியாதவர்களும் அறிந்தது போல பேசுகின்ற பல செய்திகள் பரவிக்கிடக்கின்றன.எத்தனையோ செய்திகளை எடுத்துக்காட்டாக சொல்லலாம். ஆனால் ஒன்றே ஒன்று கலைஞரை அரசியல் ரீதியாக விமர்சிக்கும்  எதிர்கட்சியினரும் ஏன் விமர்சிக்கிறோம் என்று கூட தெரியாமல் விமர்சித்து கொண்டிருப்பவர்களும் அவர் எப்படி சென்னை வந்தார் என்று ஒரு செய்தியை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் கலைஞர் எப்படி சென்னைக்கு வந்தார். அவர் சென்னைக்கு வருவதற்கு முன்பே சேலத்திலும் கோவையிலும் உள்ள ஸ்டுடியோக்களில் கதைவசனகர்த்தாவாக பணியாற்றி வந்தார். தனது 28-வது வயதில் ''பராசக்தி'' படத்திற்கு கதைவசனம் எழுதி புகழ்பெற்றார். ஆனால் பராசக்தி படத்திற்கு முன்பே கலைவாணர்  என்.எஸ்.கே தயாரித்த ''மணமகள்'' என்ற படம் வெளியானது. அந்த படத்திற்கு கதைவசனமும் கலைஞர்தான் அந்த படத்தின் வெற்றியை அடுத்து கலைவாணர் கலைஞருக்கு ஒரு கார் பரிசளித்தார். 28 வயதிற்கு முன்பே ஒரு தமிழ் எழுத்தாளர் தன் எழுத்து திறமைக்காக கார்  பரிசு வாங்கினார் என்பது கலைஞரால் மட்டுமே சாதிக்க முடிந்தது. அவருக்கு மட்டுமே அந்த எழுத்தாற்றல் உண்டு அவரது எழுத்தாற்றலும் அவரது திறமையுமே அவரை வளர செய்தது.

 

kalaingar

 

 

 

சென்னை வந்த திராவிட தலைவர்களிலேயே முதலில் சொந்த வீடு வாங்கியவரும் கலைஞர்தான்.அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினர்கூட கிடையாது. திரைத்துறையில் கதைவசனகர்த்தாவாக, படத்தயாரிப்பாளராக, பாடலாசிரியராக இப்படி பன்முக திறமைகொண்டு விளங்கியவர் கலைஞர். தனது அத்தனை படைப்புகளிலும் தனது திராவிட கொள்கையைத்தான் முன்வைத்தவர் தலைவர் கலைஞர். அந்த மனஉறுதியும், மதிநுட்பமும்தான் கலைஞரின் வெற்றிக்கான அடித்தளம். இந்திய அரசியலில் ஒருவர் வெற்றிபெற வேண்டுமென்றால் அதற்கென்று சில அம்சங்கள் நிர்ணயிக்கக்பட்டிருக்கிறது.

 

 

மதம் அவருக்கு சாதகமாக இருக்க வேண்டும், சாதி அவருக்கு பலமாக இருக்க வேண்டும், பணபலம் மிகுந்தவராக இருக்கவேண்டும், குடும்பப்பாரம்பரியம் கொண்டவராக இருக்க வேண்டும் இவை எல்லாம்தான் இந்திய அரசியலில் ஒருவர் வெற்றிபெற இருக்கவேண்டிய அம்சங்களாக இருகின்றன. அத்துடன் அவர் சார்ந்திருக்கின்ற கட்சி வலிமைமிக்க கட்சியாக இருக்கவேண்டும். இந்த அம்சங்களில் எதுவமே இல்லாமல் நேர்மறை அம்சங்களை கொண்டு இந்திய அரசியல் தளத்தில் வெற்றிபெற்ற, அதிகம் வெற்றிபெற்ற ஒரே அரசியல் தலைவர் கலைஞர்தான். 

 

பிறப்பால் அவர் இந்து மதம் ஆனால் அவர் இந்துமதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை எதிர்த்து அதன் வர்ணாசிரம கொள்கைகளை எதிர்த்து, சாதி ரீதியான ஏற்ற தாழ்வுகளை எதிர்த்து அதற்கு எதிராகவே குரல்கொடுத்து வந்தவர். தனது 28--வது வயதில் ''அம்பாள் எந்த காலத்திலடா பேசினால்'' என்று வசனம் எழுதிய அந்த கலைஞர்தான் தனது 82-வது வயதில் ''ராமன் எந்த கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தான் '' என சேதுசமுத்திர திட்டம் பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பினார். எனவே மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தே அவரது அரசியல் பயணம் நடந்திருக்கிறது. 

 

சாதிபலம் என எடுத்துக்கொண்டால் கலைஞர் சார்ந்திருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட மிகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட அந்த சமுதாயத்தினர் வாக்குகளை மட்டும் பெற்றிருந்தால் அவர்  கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது. ஆனால் அவர்தான் தமிழகத்தில் ஐந்துமுறை முதலமைச்சர் ஆகியிருக்கிறார். தமிழ்நாட்டை அதிகநாள் ஆட்சி செய்தவர் என்ற பெருமை பெற்றிருக்கிறார். இந்திய தேர்தல் வரலாற்றில் 13 முறை தொடர்ந்து போட்டியிட்டு ஒருமுறைகூட தோல்வியை தழுவாமல் அனைத்து முறையும் வெற்றிபெற்ற ஒரே அதிசய தலைவர் கலைஞர்தான்.  

 

kalaingar

 

 

 

பணபலம் என்றால் அவர் ஜமீன் பரம்பரையே மிட்டா மிராசோ அல்ல, தனது எழுத்து திறமையினால் அவர் உழைத்து சம்பாதித்ததைக் கொண்டுதான் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். குடும்பப்பாரம்பரியம் என்று பார்த்தால்கூட  அவர் ஒரு குக்கிராமத்தில் விவசாயத்தையும், இசைத் துறையையும் நம்பி வாழும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இந்திய அரசியலில் செல்வாக்கு பெற எந்தெந்த அடைப்படிக்கூறுகள் வேண்டுமோ அவை எதுமே அவரிடம் இல்லை. அதற்கு எதிரான தன்மைகளுடன் புதிதாக ஆரம்பித்த திராவிட கழகத்தில் பங்கெடுத்து  அந்த கட்சியை தொடர்ந்து வளரச்செய்து வெற்றிபெற்றுருக்கிறார் என்பதுதான் சாதாரண தொண்டருக்கும் அவர் கற்றுக்கொடுக்கும் பாடம். தனது கடைசிக்காலம் வரை அவர் தன்னை தலைமை தொண்டனாக கருத்திக்கொள்வதால்தான் அரைநூற்றாண்டு காலமாக அவர் அரசியல் கட்சி தலைவராக இருக்கிறார்.

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவிற்கு அரசியல் களத்தில் போட்டியாக உள்ள அதிமுக கட்சியின்  நிறுவனரான எம்.ஜி.ஆர் அவரது இறுதிக்காலம்வரை அக்கட்சியின் தலைவராக இருந்தார். அதேபோல் அவருக்கு  அடுத்துவந்த ஜெயலலிதாவும் அவரது இறுதிக்காலம்வரை தலைவராக இருந்தார். அப்படிப்பட்ட தலைவர்களையும் அரசியல் வாழ்வில் எதிர்கொண்ட கலைஞரும் தொடர்ந்து தலைவராக இருந்துவந்தார். தனது உடன்பிறப்புகளாக கருதும் தொண்டர்களின் ஆதரவால் தனது தலைமை பொறுப்பை விட்டுக்கொடுக்காமல் இருந்ததால்தான் பல வீழ்ச்சிகளிலிருந்து திமுகவை மீட்டெடுத்து தொடர்ச்சியாக பயணிக்க செய்தது.

 

1971-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 186 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதுவரை தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியும் இந்த அளவிற்கு அதிக இடங்களை பெற்றது கிடையாது. அதேசமயம் 1991-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரே தொகுதியில் மட்டும் திமுக வெற்றிபெற்றது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர் மட்டும் வெற்றிபெற்றார். இப்படி வெற்றியையும் தோல்வியையும் கண்டு அவைகளையெல்லாம் எதிர்கொண்டு திமுகவை பலமுறை ஆட்சிக்கட்டிலில் அமர்த்திவர் கலைஞர். அதற்கு அவரது தலைமை பண்பும் அவர் வகுத்த வியூகங்ளும்தான் முக்கியமானவை.

 

kalaingar

 

 

 

இந்தியாவிற்கே வழிகாட்டும் முன்னோடியான பல திட்டங்களை நிறைவேற்றியவர் கலைஞர்.  குடிசைமாற்றுவாரியம், கைரிக்க்ஷா ஒழிப்பு, சமத்துவபுரம், பெண்களுக்கு சொத்துரிமை, சமூகநீதி என இந்தியாவிற்கே முன்னோடியான திட்டங்களை  செயல்படுத்தியவர். திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கையான சமூக நீதியை பிரதமர் விபி.சிங் ஆட்சிக்காலத்தில் மண்டல் கமிஷனை நடைமுறைப்படுத்தியலிருந்து  இந்தியாவின் தேசிய கொள்கையாக மாற்றிக்காட்டியவர் தலைவர் கலைஞர். இந்திராகாந்தி முதல் மன்மோகன் சிங் வரை பல பிரதமரைத் தேர்ந்தெடுப்பதிலும், ஆதரிப்பதிலும் கலைஞரின் பங்கு முக்கியமானது.  அதேபோல் விவி.கிரியில் தொடங்கி பிரதீபாபாட்டீல் வரை பல குடியரசு தலைவர்களை தேர்ந்தெடுப்பதிலும் கலைஞர் முக்கியபங்காற்றியுள்ளார். 

 

இந்தியா முழுவதும் தேசியகீதம் பாடப்படுகிறது, அது எந்த மொழிக்காரராக இருந்தாலும் தேசிய கீதம் எந்த மொழி என தெரியாமல் இருப்பவராக இருந்தாலும் எழுந்து நிற்கிறோம். அதுபோல எந்த மொழிக்காரராக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மதிப்பு கொடுத்து எழுந்து நிற்க வேண்டும் என்ற வகையில் ''நீராரும் கடலுடுத்த'' பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக நிலைநிறுத்தியவர் கலைஞர்.

 

 

தனது 14-வது வயதில்  தமிழ்க்கொடி ஏந்தி எந்த அரசாங்கத்தை எதிர்த்து அவர் குரல் கொடுத்தாரோ தனது 84-வது வயதில் அதே அரசாங்கத்தை தமிழ் செம்மொழி என அறிவிக்கச்செய்த ஆற்றல் கொண்டவர் கலைஞர். 

 

நீங்கள் கலைஞரை விமர்சிப்பவராக இருக்கலாம் அல்லது கலைஞரை வியந்து பாராட்டுபவராகவும் இருக்கலாம். எப்படிப்பட்டவராக இருந்தாலும் அரைநூற்றாண்டு காலமாக அரசியலில்  அச்சாணியாக இருந்த கலைஞரை கடந்துபோகவே முடியாது.